கார்
கார் நூறுமைல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு முரட்டு உருவங்களும் முன்சீட்டில் அமர்ந்திருந்தன. ஆண் முரடன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பெண் கூட்டாளி அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். நான் பின்சீட்டில் கை கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தேன். அசைய முடியாதபடி என்னைக் கட்டிப் போட்டிருந்தார்கள். நான் முணுமுணுப்பது அவர்கள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் ஏதோ நாராசமாக ஒரு பாட்டைக் கேட்டுக்கொண்டு உல்லாசமாகக் காணப்பட்டார்கள். எனக்கு அது எவ்வளவு தலைவலியைக் கொடுக்கிறது என்பதை அவர்கள் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை.

என்னை அவர்கள் காரில் கட்டிப்போட்டுச் சுமார் மூன்று மணி நேரம் ஆகிறது. இத்தனை நேரமும் இதே சங்கடத்துடன்தான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் சட்டையே செய்யவில்லை.

"டார்லிங்! இத கொண்டு போய் சேத்தா நமக்கு எவ்வளவு கிடைக்கும்?"

"எவ்வளவு கிடைக்கும்னு தெரியல்ல! ஆனா இதனால ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு."

அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு புன்னகை. எனக்கு பீதி பிடித்துக் கொண்டது.

மெதுவாக ஒரு குரல் கொடுத்துப் பார்த்தேன். அந்த முரடன் திரும்பி என்னை ஒருமுறை முறைத்தான். அந்த முறைப்பின் அர்த்தம் எனக்கு தெரியும். அடங்கி விட்டேன். யாராவது வந்து உதவுவார்களா என்று காருக்கு வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அந்த வேகத்தில் என்னுடைய குரல் யாருடைய காதிலும் விழவில்லை போலும். விதியை நினைத்துக் கண்ணீர் வடிப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு டார்லிங்?" ஏதோ கொறித்துக்கொண்டே கேட்டாள் அந்தப் பெண்.

"ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போய்ச் சேருவோம். இன்னும் கால்வாசி தூரம் இருக்கு" முரடனின் பதில்.

மறுபடியும் பாட்டு! கும்மாளம்! கூத்து! 'ச்சே! யார் வந்து நம்மள காப்பாத்தப் போறாங்க தெரியல்லியே!' எனக்குள் பொருமிக் கொண்டேன்.

வழியில் காரை நிறுத்தினார்கள். இருவரும் தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். அந்த முரடன் என்னைக் காட்டி ஏதோ அந்த முரட்டுப் பெண்ணிடம் சொன்னான்.

"நான் பார்த்துக்கறேன்! நீங்க போய் வாங்கிட்டு சீக்கிரம் வந்துடுங்க!"

தலையை பலமாக ஆட்டிக் கொண்டே என்னை ஒரு முறை முறைத்து விட்டு முரடன் கிளம்பினான். நான் பக்கத்தில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தேன். அங்கே தொலைவில் ஓர் ஆணும பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள். நான் என் பலம் முழுவதும் திரட்டிக் கத்தினேன். அந்தப் பெண் திரும்பி என் தலையில் ஓங்கிக் குட்டினாள். தலை சுற்றியது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னுடைய கை கால்கள்தான் கட்டப்பட்டு இருக்கின்றனவே!

முரடன் வந்து காரில் ஏறிக் கொண்டான். கையில் ஏதோ ஒரு பொட்டலம் இருந்தது. "ஏதாவது மொரண்டு பிடிச்சானா?"

"ஆமாம்! ரெண்டு போட்டேன். அடங்கிட்டான்."

மனதுக்குள் பொருமிக்கொண்டேன் 'என்னை இந்த பாடு படுத்துகிறார்களே! இவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா?'

வண்டி மீண்டும் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது.

"டார்லிங்! வண்டியக் கொஞ்சம் ஓரம் கட்டுங்க!"

முரடன் உடனே பணிந்தான். வண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் நின்றது. எனக்குப் புரிந்து விட்டது இவர்கள் என்னை ஏதோ செய்யப் போகிறார்கள் என்று.

இருவரும் பின் சீட்டுக்கு வந்தார்கள். ஏதோ பசைபோல் ஒன்றை வாயில் திணித்தார்கள். எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. வேண்டாம் என்று தலை அசைத்தேன். ஆனால் அவர்கள் விடவில்லை. முரடன் என் தலையைப் பிடித்துக் கொண்டான். அந்தப் பெண்மணி என் வாயில் திணித்தாள். அப்புறம் ஏதோ ஒரு திரவத்தை வாயில் ஊற்றினார்கள். அந்த திரவத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது. நான் கத்திப் பார்த்தேன். ஆனால் என் கதறல் அவர்கள் செவிகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. இருவரும் மீண்டும் முன்சீட்டுக்குச் சென்றுவிட்டனர். எனக்கு ஏதோ மயக்கம் வருவது போல் இருந்தது.

"எனக்கும் பசிக்கிறது டார்லிங்!"

"அதுதான் வாங்கி வந்திருக்கேனே, சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிடலாம்."

இருவரும் ஏதோ நல்ல மணமாக எதையோ உண்டு கொண்டிருந்தார்கள். என் நாக்கில் எச்சில் ஊறியது. அடக்கிக் கொண்டேன். எனக்கு அதெல்லாம் கிடைக்காது என்பது நன்றாகத் தெரியும்.
பத்து நிமிடம் கழித்துக் கார் கிளம்பியது. மீண்டும் பாட்டு, அரட்டை! என்னைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ போன் வந்தது. அந்த முரடன்தான் எடுத்துப் பேசினான்.

"டிரைவிங்ல இருக்கேண்டா! என்ன சமாசாரம்?"

"ஒண்ணுமில்லே! இன்னும் எவ்ளோ நேரம்டா ஆகும் வந்து சேர?"

"அரைமணி நேரத்துல வந்துடுவோம். அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்."

எனக்கு உள்ளுக்குள் உதைப்பு. எங்கு அழைத்துப் போகிறார்களோ தெரியவில்லை. என்ன ஆனாலும் கடவுள் விட்ட வழி. அப்படியே அசதியாக இருந்தது. உறங்கி விட்டேன்.

கண் விழித்துப் பார்த்தபோது ஏதோ ஒரு பெரிய நகரத்தில் இருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் விடுதலை என்று என் உள்மனம் சொல்லியது.

"வாடா வெங்கி! நீயும் உள்ள வாம்மா! கொழந்த எங்கே?" முரடனின் நண்பன் வரவேற்றான். அவனது கையில் ஒரு பார்சலை கொடுத்தான் முரடன். நண்பனின் முகம் மலர்ந்தது.

அடடே, நான் யாருன்னு சொல்லலியே! நான் அமெரிக்காவுல வளர்ற இரண்டு வயசுக் குழந்தை. அந்த முரடர்கள் வேறு யாருமில்லை. என்னுடைய அம்மா அப்பாதான். இங்க எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த கதிதான். கார் பின்சீட்டுல பெல்ட்டப் போட்டு ஒக்கார வெச்சு வாய்க்கு ருசி இல்லாத உணவையெல்லாம் திணிச்சு, ச்சே! எப்போதான் இந்தியக் குழந்தைகள் மாதிரி நாங்களும் இஷ்டப்பட்டதைச் சாப்பிட்டு விருப்பம்போல காரில் உக்காந்து வரப் போறோமோ தெரியலே!

ஆர். சந்திரசேகரன்,
லண்டன்

© TamilOnline.com