தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-20)
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண், நிறுவனர் தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்கிறார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச்சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினார். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களைச் சூர்யா ஆராயத் தொடங்கினார். பலமுறை முயன்று, பழுதுகள் தாறுமாறாக அல்லாமல், ஒரு வினோத வரிசையில் வருவதாகக் காண்பித்து, யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்று சூர்யா நீரூபித்தார். உப்பகற்றல் நுட்ப நிபுணர்களான மேரி, பீட்டர், பால் மூவரையும் விசாரித்து அவர்களுக்குச் சொந்த வாழ்வில் நிதிப்பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தார். ஒருங்கிணைத்தல் நிபுணரான ஜென்னாவை விசாரித்து மற்ற மூவருக்குள் எதோ பூசல் இருப்பதுபோல் உணர்ந்தார். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டதாகச் சூர்யா கூறி அனைவரையும் ஒன்று கூட்டினார். மேற்கொண்டு.‍...

*****


பிரச்சனையின் காரணம் தெளிவாக இருந்ததாகவும், சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான் அது புலப்படவில்லை என்றும் சூர்யா கூறவே பரபரப்படைந்த தாமஸ் சூர்யாவைக் கெஞ்சினாலும் அவர் விளக்காமல், அனைவரையும் ஒரே அறைக்குள் அமர்த்திப் பேசினால்தான் இறுதியாகத் தீர்க்க முடியும் என்று கூறிவிட்டார். அதனால் தாமஸ், மற்ற நான்கு நிபுணர்களையும் யாவ்னா மற்றும் ஜேம்ஸையும் அறையில இருந்த நீள்வட்ட மேஜையைச் சுற்றி அமர்த்தினார்.

அனைவரும் சூர்யாவையே கண் கொட்டாமல் பார்த்தனர். ஆனால் சூர்யா சில நிமிடங்கள் எதுவும் கூறாமல், கையால் குறுந்தாடியை நீவியபடி குறுக்கும் நெடுக்கும் உலவிக் கொண்டிருந்தார். சட்டென்று ஒரு தீர்மானப் பெருமூச்சுடன் நடுவில் நின்று மற்றவர்களைக் கவனித்தார். தாமஸ், ஜேம்ஸ், யாவ்னா, ஜென்னா, பீட்டர், பால், மேரி – நிதானமாக ஒவ்வொருவரின் முகத்தையும் தீர்க்கமாக ஓரிரு நொடிகள் பார்த்துவிட்டு விளக்க ஆரம்பித்தார்.

"முதலாவதாக இந்தக் குழுவுக்கு என் பாராட்டுக்கள். உலகிலேயே உன்னதமான ஒரு குறிக்கோளுடன் துவங்கி அதியற்புதமான ஓர் உப்பகற்றல் சாதனத்தை உருவாக்கியுள்ளீர்கள். அது வருங்காலத்தில் பல பில்லியன் மக்களுக்கு உலகெங்கிலும் பயன்படும் என்பது உறுதி. ஆனால்..." என்று சூர்யா நிறுத்திவிட்டு அக்வாமரீன் குழுவினரை மீண்டும் உற்றுப் பார்த்தார்.

சூர்யாவின் பாராட்டால் புளகாங்கிதமுற்ற தாமஸ், அவர் நிறுத்தியதால் பரபரப்படைந்து, தொடரும்படித் தூண்டினார். "ஆனால்... என்ன சூர்யா? தயங்காதீங்க, மேற்கொண்டு சொல்லுங்க...."

சூர்யா தொடர்ந்தார். "ஆனால்... அந்த சாதனை உலகைச் சென்றடையாத படி, பேரசையால் உங்கள் ஏழு பேரில் யாரோதான் பழுதடையச் செய்துவிட்டீர்கள்!"

சூர்யா கூறியது மேஜை நடுவில் ஒரு சிறிய வெடிகுண்டை வீசியது போலாயிற்று. ஏழு நிபுணர்களும் ஒரே சமயத்தில் எழுந்து நின்று கையைச் சூர்யாவின் பக்கம் சினத்துடன் ஆட்டி உச்சக்குரலில் ஆட்சேபித்தனர். சினத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட தாமஸ், மற்றவர்களைக் கைகாட்டி அமர்த்திவிட்டு உணர்ச்சிப் பிழம்பாகச் சிவந்த முகத்துடன் குமுறினார். "சூர்யா, எங்க பிரச்சனைக்குத் தீர்வு வேண்டும்தான். அதுக்காக.... இவ்வளவு நாள் பாடுபட்ட இந்தக் குழுவையே சந்தேகிக்கறீங்களா! அதிலும், என்னையும் சேர்த்து. என்ன தைரியம்! நீங்கள் இப்பவே இந்த இடத்தைவிட்டுப் போயிடறதுதான் நல்லதுன்னு தோணுது. நாங்க எப்படியோ எங்க பிரச்சனையைத் தீர்த்துக்கறோம்."

ஷாலினி இடைமறித்தாள். "இங்க பாருங்க தாமஸ். காரணம் இல்லாம சூர்யா இந்த மாதிரி பழியை வீசியதே இல்லை. நீங்கதான் செஞ்சீங்கன்னு தனிப்பட்டு உங்களை மட்டும் சொல்லலையே? கொஞ்சம் அமைதியாஅவர் விளக்கத்தைக் கேளுங்க."

கிரணும் பழிப்புக் காட்டினான். "ஆமாம், எங்க கேஸ்ல ஒவ்வொரு தடவையும் கடைசி ஸீன்ல இதே கதைதானே? முதல்ல ஓன்னு கத்த வேண்டியது. சூர்யா பிட்டுப் பிட்டு வச்சதும் ஒஹோன்னு புகழ வேண்டியது. அந்தக் கட்டம் சரியா வந்திருக்கு. நிதானமாக் கேளுங்க!"

தாமஸ் சற்றே சுதாரித்துக் கொண்டு ஆனால் முழுதும் சினம் அடங்காமல் அமர்ந்து தொடருமாறு சூர்யாவுக்கு மெல்லச் சைகை காட்டினார்.

சூர்யா தலையாட்டிக் கொண்டு விளக்கலானார். "சரி. நான் சொல்லப் போறது தவறாவே இருந்தா அதை அப்புறம் வீசி எறிஞ்சுட்டு நீங்களாகவே வேற வழி பாத்துக்குங்க. ஆனால் வேற விளக்கம் இருக்க முடியாதுங்கறதுதான் என் நிச்சயமான கணிப்பு. உங்களில் யாராவதுதான் இந்த சாதனத்தைத் தற்காலிகமாகப் பழுதாக்கித் தாமதப்படுத்துவதால் பலனுள்ளது என்ற கணிப்பில் இந்தப் பிரச்சனையை உண்டாக்கியிருக்க வேண்டும்."

சில நொடிகள் நிறுத்தி, அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்துவிட்டுச் சூர்யா தொடர்ந்தார். "உங்களில் மிக அப்பட்டமாக முதலில் பலனடையக் கூடிய காரண கர்த்தா தாமஸேதான்! உங்கள் எல்லாருக்கும் நிறுவனம் ஆரம்பிக்கையில் மிக அதிகப் பங்களித்து விட்டார். ஆனால் வெற்றியடையும் தருணத்தில் அதைப் பழுதாக்கினால் நிறுவனம் படுத்துவிடும். அதை முழுவதும் தானே தியாகியாக வாங்கிக் கொண்டு, பிறகு பழுதுகளை மாயமாக மறையச் செய்துவிட்டால் பல நூறு மில்லியன் டாலர் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும், அல்லவா!"

தாமஸ் முகம் சிவந்து எரிமலையாக எழுந்தார். சூர்யா அவரைப் பேச விடாமல் அவசரமாகத் தொடர்ந்தார். "ஆனால், அப்படியிருக்க முடியாது என்று நான் சீக்கிரமே தீர்மானித்தேன்." இதைக் கேட்ட தாமஸ் சுதாரித்துக் கொண்டு அமர்ந்தார். சூர்யா மேலே விளக்கினார், "ஏனெனில் தாமஸின் மனக்கஷ்டமும் துயரமும் மிக உண்மையானவை என்பது வெளிப்படையாகப் புலப்பட்டது. அடுத்து ஜேம்ஸாக இருக்கலாமோ என்று சந்தேகித்தேன்...."

ஜேம்ஸ் குமுறி எழுந்து "ஹே... ஹே!" என்று சினத்துடன் கை நீட்டவே, சூர்யா துரிதமாகத் தொடர்ந்தார், "ஆனால் அவரும் இருக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்தேன்". உடனே ஜேம்ஸ் உட்கார்ந்தார். "காரணம், ஜேம்ஸ் ஒரு கோட்பாட்டு அளவில் மட்டுமே சஞ்சரிக்கும் விஞ்ஞானி, அவராக எவ்வளவு முயன்றாலும் இவ்வளவு சிக்கலான பிரச்சனையை ஏற்படுத்த அவரால் முடியாது என்பது என் கணிப்பு."

ஜேம்ஸ் முறுவலித்தார். "இது ஒரு இன்ஸல்ட் மாதிரி இருக்கு. இருந்தாலும் பழி போக்கினதுனால ஏத்துக்கறேன். நான் ரொம்பவே ஆராய்ச்சி செய்பவன்தான். செயல்முறைக்கும் எனக்கும் சற்று தூரம்தான். நீங்க சொல்றது சரிதான்."

சூர்யா அடுத்து யாவ்னாவைக் காட்டினார். "யாவ்னா செய்திருக்க முடியுமா?" யாவ்னாவின் முகம் சிவந்தது, ஆனால் கிரண் உடனே அவளைப் பார்த்து கண் சிமிட்டி, முறுவலிக்கவே, சுதாரித்தாள். சூர்யா விரைந்து அவளை விடுவித்தார். "ஆனால், அவளே எங்களை ஷாலினி மூலமாக வரவழைத்ததாலும், சாதனத்தின் உயிரியல் விஞ்ஞான ரீதியான அம்சம் மட்டுமே அவளுக்குத் தெரியும் என்பதாலும், அவள் செய்திருக்க முடியாது என்பது தெளிவாயிற்று."

"அப்படியென்றால், இந்தப் பிரச்சனைக்கு மீதியுள்ள நால்வரில் யாரவது காரணமாயிருக்க வேண்டும், இல்லையா?"

"ஆனால் என்ன சூர்யா? சீக்கிரம் சொல்லுங்க!" படபடத்தார் தாமஸ்.

சூர்யா அனைவரையும் நிதானமாகக் கூர்ந்து பார்த்து விட்டுத் தொடர்ந்தார், "நமது நீதிமன்ற வழிமுறைப்படி குற்றத்தை நிரூபிக்க வேண்டுமானால், காரணம், சாதனம், வாய்ப்பு (motive, means and opportunity) மூன்றும் இருந்தாக வேண்டுமே. இந்த நால்வருக்கும் ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்பதால் தீர்வு காண்பது எனக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. ஆனால், திடீரென எனக்குச் சரியான விடை பளிச்சென்று நிதர்சனமாயிற்று!"

"என்ன அந்த விடை. ஏன் தயங்கறீங்க, போட்டு உடையுங்க, சரியா தவறான்னு அப்புறம் பாத்துக்கலாம்!" என்றார் தாமஸ்.

சூர்யா விளக்கினார். "இப்போ எனக்குத் துளிக்கூட சந்தேகமேயில்லை தாமஸ்! இந்தப் பழுதுகளைச் அந்த வரிசை முறையோட செய்யணும்னா இவங்க நால்வரில் ஒருத்தரால மட்டும் முடிஞ்சிருக்காது. இதை செஞ்சது...." என்று கூறிவிட்டுச் சற்று கனத்த மௌனத்துக்குப் பிறகு தீர்க்கமாக அறிவித்தார், "செஞ்சது... இந்த நாலு பேரும் சேர்ந்துதான்! இதுக்குத் தலைமை வகிச்சது ஜென்னா!" தாமஸ், ஜேம்ஸ், யாவ்னா மூவரும் அதிர்ந்து போயினர்.

மூன்று முக்கிய விஞ்ஞான நிபுணர்களோ பேயறைந்ததைப் போல விழித்தனர். ஜென்னா ஆத்திரத்துடன் எழுந்து கூவினாள். "தாமஸ்! என்ன இது. நான் உங்களோட எவ்வளவு வருஷம் ராப்பகலா உழைச்சிருக்கேன். அதுக்கு இந்தப் பழிதான் பலனா. நான் எதுக்கு வெண்ணை திரண்டு வரச்சே தாழியை உடைக்கணும்? அதுவும் உங்க நிபுணர் குழு பூராவையும் குற்றம் சாட்டறாங்க, பேசாமப் பார்த்துக்கிட்டிருக்கீங்களே? முதல்ல இந்த ஆளை இங்கேந்து விரட்டியடியுங்க!" என்றவள் சூர்யாவிடம் சீறினாள். "நான் செஞ்சேனா? அதுவும் தலைமை வகிச்சேனா. என்ன ஆதாரம்? ஏன் செய்யணும்?"

தாமஸும், "ஆமாம் சூர்யா இவங்க என்னோட பல வருஷங்களா உழைச்சிருக்காங்க. அப்படி இருக்க முடியாது. எதை வச்சு இப்படி சொல்றீங்க."

சூர்யா பதட்டமின்றி "ஆதாரம் இருக்கு!" என்றார்.

ஜென்னா அலட்சியமாகச் சிரித்தாள். "நான் ஒண்ணுமே செய்யலை. எப்படி இருக்க முடியும் ஆதாரம்! நான்தானே இந்த சாதனத்தை ஒருங்கிணைச்சு இயங்க வச்சதே. நானே ஏன் பழுதாக்கணும்? இவங்களையெல்லாம் எதுக்கு இழுக்கணும். நல்லாயிருக்கு நீங்க திரிக்கற கதை. என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க முடியாததுனால என்மேல அபாண்டமாத் திணிக்கப் பாக்கறீங்க போலிருக்கு..."

சூர்யா மேற்கொண்டு விளக்கினார், "ஆமாம். ஆக்கினதும் நீங்கதான், அழிச்சதும் நீங்கதான். சாதனத்தை இணைப்பது மிகக் கடினமான வேலை. அதே மாதிரி அதை வரிசை முறையில பழுதாக்கினதும் கடினமான வேலை. ரெண்டையும் ஒருத்தரேதான் செஞ்சிருக்க முடியும். ஆனா அதன் மூணு உப்பகற்றல் நுட்பங்களும் மிகவும் நுணுக்கமானவை. ஜென்னா ஒருத்தியால் மட்டும் அவற்றின் அம்சங்களையெல்லாம் உணர்ந்து சரியான தருணத்தில் பழுதாக்க முடியாது. அதுவும் நுட்பங்கள் ஒவ்வொண்ணும் இந்த நிபுணர்களின் தனிக்கூடத்தில் தனித்தனியா சரியா வேலை செய்யுது. ஆனா இந்தச் சாதனத்தில் மட்டும் குறிப்பிட்ட முறையில் பழுதாகுது. அதுனால இந்தப் பிரச்சனையில் இந்த நிபுணர்களுக்கும் பங்கிருந்தே ஆக வேண்டும். இதை அவங்க முகபாவம் காட்டிக் குடுத்திடுச்சு பாருங்க!"

ஆனால் ஜென்னாவோ அலட்சியப் படுத்தினாள். "நாங்க நாலு பேரும் சேர்ந்தா செய்ய முடியும். அது குழந்தைகூடச் சொல்லிடுமே. நீங்க எதுக்கு? ஆனா நான் ஏன் செய்யணும். எனக்கு அதுனால என்ன லாபம்?"

சூர்யா அனுதாபத்தோடு விளக்கினார். "ஜென்னா, இந்த நிபுணர்கள் செய்யக் காரணம் ரொம்ப சுலபம். அவர்கள் நிதி நிலைமை இக்கட்டா இருக்கு. அதுனால உன் வாக்குறுதிகளை நம்பி ஒத்துழைச்சிட்டாங்க. ஆனா நீ ஏன் செஞ்சேங்கறது எனக்கு ரொம்பப் புதிராவே இருந்தது. ஆனா நீ நுட்பங்களின் பழுதுகளை ஒரு வரிசை முறையா அமைச்சு சவால் விட்டதிலிருந்து நான் மனோதத்துவ ரீதியா புரிஞ்சுகிட்டேன். தாமஸோடு இவ்வளவு வருஷமா வேலை செஞ்சும் உனக்குன்னு தனி வெளிப்படை அங்கீகாரம் கிடைக்கலை, அவர் உன்னை உதவியாளர் பதவியிலிருந்து மேல உயர்த்தலைங்கற ஏக்கத்துல நீ குமுறிக்கிட்டிருக்கே. அந்தப் பழுது வரிசை அமைச்சதின் மூலம் உன் முக்கியத்துவத்தை மறைமுகமா தம்பட்டம் அடிச்சுக் காட்டியிருக்கே!"

ஜென்னா இளக்காரமாகச் சிரித்தாள். "தாமஸ், சரியான பித்தலாட்டக் கதை இது. ஆதாரம்னு சொல்லிட்டு தன் சுய கருத்துக்களை அள்ளி வீசறாரு... மனோ தத்துவமாம்! இவர் என்ன மனவியல் நிபுணரா என்ன?"

சூர்யா அழுத்தமாகத் தலையாட்டி மறுத்தார். "வெறும் மனோதத்துவம் இல்ல ஜென்னா. அதுல யூகிச்சு அப்புறம் தடயங்களைத் தீவிரமாத் தேடிக் கண்டு பிடிச்சிருக்கோம். உன் தற்பெருமைக்காக செஞ்சது உன்னை நல்லா மாட்டி விட்டிடுச்சு. இங்க பாருங்க" என்று ஒரு தாளின் மூன்று பிரதிகளை ஜென்னா, தாமஸ், ஜேம்ஸ் மூவருக்கும் வினியோகித்தார். அதில் காணப்பட்ட விஷயத்தைப் பார்த்து ஜென்னாவின் முகம் வெளுத்து உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. நின்றபடி ஆக்ரோஷமாகச் சீறியவள், முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு தொப்பென நாற்காலியில் விழுந்தாள்.

தாமஸ் கையிலிருந்தத் தாளைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தார். அதைக் கண்ட சூர்யா "கிரண் நீதானே இதைக் கண்டுபுடிச்சே? நீயே விளக்கு" என்று தூண்டவும் கிரண் விவரித்தான். "இந்த வரிசை முறையை நான் எங்கேயோ பாத்திருக்கேன்னு சூர்யாவுக்குச் சொன்னேன். அவர் யோசனைப்படி மென்பொருட்களில் ஈஸ்டர் எக் என்ன மாதிரியெல்லாம் வருதுன்னு ஆராய்ச்சி செஞ்சேன். அதான் இருக்கவே இருக்கே இணைய வலை. அதுல தோண்டிப் பார்த்ததுல இந்த முத்து எனக்குக் கிடைச்சது! அதுதான் ஜென்னா படைப்பித்த ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருளின் மூலப்பிரதி, அதாவது சோர்ஸ் கோட்.

அது மட்டுமில்லை. ஜென்னா சமீபத்துல ஆப்பிள் அப்ஸ்டோர்ல கைபேசி விளையாட்டு ஒண்ணும் வினியோகிச்சிருக்காங்க. ரெண்டு மென்பொருளிலேயும் ஒரே ஈஸ்டர் எக், அதுவும் என்ன, இந்தப் பிரச்சனையில் வந்த அதே வரிசைமுறை காட்டுது. இது ஜென்னாவோட கையொப்பம் மாதிரி. இந்த ஓப்பன் சோர்ஸ் கோட்ல அதை எப்படி செஞ்சாங்கன்னு தெரியுது. மேலும ஜென்னா பேர்தான் அதுல இருக்கற ஒரே காப்பிரைட் உரிமை. இதைவிட அழுத்தமான ஆதாரம் தேவையா!" என்றான்.

சூர்யா முத்தாய்ப்பு வைத்தார். "அது மட்டுமில்லை, ஜென்னா. உன் மின்னஞ்சல்களையும், நீங்க நாலு பேரும் புனைபெயர்களில் சேத்து அமைச்ச சமூகவலைக் குழுக்களில் உள்ள குறுஞ்செய்திகளையும் சட்ட ரீதியா வாங்கி சந்தேகமேயில்லாம நிரூபிக்க முடியும்!"

தாமஸ் இடிந்து போய் விட்டார். அழாத குறையாகக் கேட்டார், "ஏன் ஜென்னா? ஏன் இப்படி. நான் உன்னை மகள் மாதிரி பாவிச்சேனே! தொழில்ரீதியாப் படிப்படியா வளர்த்தேனே, இப்படி செஞ்சுட்டயே. சே! இது மகா பாவம். உன்னை இன்னும் என்னால பழிக்க முடியலையே, என் மனத்தைச் சுக்கு நூறாக்கிட்டே ஜென்னா!"

ஜென்னா குமுறினாள். "ஆமாம், ரொம்ப வளர்த்துட்டீங்க. ஒரு செக்ரட்டரிக்குக் கூட இன்னும் அதிகப் பாராட்டுக் கிடைச்சிருக்கும். எல்லாப் புகழும் என் ஒருவனுக்கேன்னு நீங்களே வாங்கிக்கிட்டீங்க. வளர்ச்சிக்கு ஆயிரம் படின்னா, என்னை அஞ்சு படிகூட மேல ஏத்தலை. ஒரு பேப்பர்லகூட என் பேர் சேர்க்கலை. இதுதான் பழிவாங்க எனக்கு நல்ல சந்தர்ப்பம். அக்வாமரீன் குலைஞ்சப்புறம் இதே சாதனத்தைச் சரியாக்கி பல மில்லியன் டாலர் சம்பாதிக்கத் திட்டம் போட்டேன். எல்லாத்தையும் இந்த ஆள் வந்து சுக்கு நூறாக்கிட்டாரு!" என்று சூர்யாவைச் சபித்தாள்!

தாமஸ் சுதாரித்துக் கொண்டார். "சரி போகட்டும். உன்னைத் தண்டிக்க இப்பவும் எனக்கு மனசு வரலை. நீ என் கண் படாதபடி போயிடு. நான் காலப் போக்கில உன்னையும் உன் துரோகத்தையும் மறக்க முயற்சிக்கிறேன்" என்று கூறவே ஜென்னா குனிந்த தலையுடன் வெளியேறினாள். தாமஸ் மற்ற மூன்று நிபுணர்களைப் பார்த்துச் சீறினார். "உங்கள் துரோகமும் மன்னிக்க முடியாததுதான். ஆனால் உங்கள் விஞ்ஞானத் திறமைமேல எனக்கிருக்கிருக்கற மரியாதையால உங்களையும் சும்மா விடறேன். உங்கள் நுட்பங்களின் எல்லா அம்சங்களையும் ஜேம்ஸிடம் விவரமா விளக்கி பதிப்பிச்சிட்டு வெளியில போயிடுங்க. உங்க நுட்பங்களுக்கு ஈடா உங்க நிதி நிலைமையைச் சீராக்க நான் ஏற்பாடு செய்யறேன். ஆனா இனிமே உங்களால தொழிலில் நல்ல பேரோடு இயங்க முடியாது. எதோ ரெண்டாந்தர ஆராய்ச்சில உழல வேண்டியதுதான். என் கண்ணுலயே படாம போயிடுங்க!" என்றார். மூன்று நிபுணர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தாமஸின் பெருந்தன்மையைப் பாராட்டி விட்டு வெளியேறினர்.

தாமஸ் பாராட்டினார், "உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியலையே சூர்யா! இந்தச் சாதனை உலகத்துக்கே நன்மை பயக்கும்!". சூர்யா முறுவலித்தார். "நன்றி தேவையில்லை தாமஸ். இந்த சாதனத்தை உலகத்தில் எல்லோருக்கும் சாதாரணப் பட்டோருக்கும் கூட பயனளிக்கும் வகையில் வழிமுறைக்குக் கொண்டு வாருங்கள். அதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்!" என்றார்.

தாமஸ் கை தட்டினார். "ஆஹா! உன்னதமான கருத்து. அப்படியே செய்கிறேன். ஆனாலும் உங்களுக்குச் சரியான சன்மானம் கொடுத்தே ஆக வேண்டுமே." என்றார். ஜேம்ஸும் "பிரமாதமான சிந்தனைதான் சூர்யா. ஆனாலும் உங்க இமாலய உதவிக்கு எங்க நன்றியா ஏதாவது கொடுத்தே தீரணும்!" என்றார்.

கிரண் கலகலவெனச் சிரித்துவிட்டு முந்திக் கொண்டான், "அப்படின்னா, இதை வணிக ரீதியாக்கும் நிறுவனத்தில் ஒரு சிறு பங்களிச்சா நாங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டோம்!" என்றான். தூய தண்ணீரின் தவிப்பு நிவர்த்தியான நிம்மதியோடு எல்லோரும் மனம் விட்டுச் சிரித்தனர்!

(முற்றியது)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com