மு. இராகவையங்கார்
அது காரைக்குடி கம்பன் கழக மேடை. சான்றோர் கூடியிருந்த அவை. கம்பனின் கவிச்சிறப்பைச் சிலர் பேசி முடித்தபின், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அடுத்துப் பேச அழைத்தார் விழாத் தலைவராக இருந்த அந்த முதியவரை. நெற்றியில் பளிச்சென்ற திருமண். கையில் ஊன்றுகோல். தோளில் நீண்ட அங்கவஸ்திரத்துடன் அவர் மெல்ல எழுந்தார். அவைக்கு வணக்கம் கூறிப் பேச ஆரம்பித்தார். வெறும் பேச்சா அது! தமிழருவி. கம்பன் வாக்கு மணத்தது. அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தம்மை மறந்து 'ஆஹா.. ஆஹா' என்று தலையசைத்துப் பாராட்டினர். "கம்பனின் தெய்வப் புலமை" எனும் தலைப்பில் அவர் பேசினார். இன்னும் சற்றுநேரம் பேச மாட்டாரா, கம்பனின் கவியமுதத்தை மேலும் பருக மாட்டோமா என அனைவரும் நினைத்து ஏங்கும் வகையில் ஒரு மணி நேரம் பேசிவிட்டு அமர்ந்தார் அவர். கைதட்டல் நிற்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. மேடையேறிய கவர்னர் ஸ்ரீபிரகாசா அந்த முதியவரை வாழ்த்திக் கேடயம் அளித்து கௌரவித்தார். தள்ளாத அந்த 77 வயதிலும் தமிழ்மீது, கம்பன்மீது கொண்ட காதலால் அங்கே வந்து சொல்லருவி பொழிந்த அந்த மாமனிதர், மு. இராகவையங்கார்.

தமிழ் அறிஞர்கள் பலருள் குறிப்பிடத் தகுந்தவர் மு. இராகவையங்கார். இவர், ராமநாதபுர சமஸ்தானப் புலவரான சதாவதானி முத்துஸ்வாமி ஐயங்காருக்கு ஜூலை 26, 1878 அன்று பிறந்தார். தந்தை சிறந்த தமிழ்ப் புலவர். நூறு அவதானங்கள் செய்யும் கவனகர். 'மணவாள மாமுனி நூற்றந்தாதி', 'நூற்றெட்டு திருப்பதி அகவல்' போன்ற பனுவல்களை எழுதியவர். சமஸ்தான மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரர் பொன்னுசாமி தேவரால் ஆதரிக்கப் பெற்றவர். பொன்னுசாமித் தேவரின் மகனான பாண்டித்துரை தேவருக்கு தமிழ் பயிற்றுவித்தார். மகனான ராகவையங்காருக்கும் அவரே ஆசிரியர். நிகண்டுகள். இலக்கண, இலக்கியங்கள் யாவற்றையும் தம் மகனுக்குப் பயிற்றுவித்தார். ராகவையங்காருக்குப் பதினாறு வயதாக இருந்தபோது திடீரென முத்துஸ்வாமி ஐயங்கார் காலமானார். ஆதரவின்றித் தவித்த ராகவையங்காரை பாண்டித்துரை தேவர் ஆதரித்ததுடன், தொடர்ந்து பயிலத் துணை செய்தார். தாமே தமிழ் பயிற்றுவித்தார். அனைத்தையும் சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார் மு. இராகவையங்கார்.

1901ல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை (நான்காம் தமிழ்ச் சங்கம்) நிர்மாணித்தார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். அங்கு சங்கப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பிற்கு ஐயங்காரை நியமித்தார். தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கென 'செந்தமிழ்' என்ற பத்திரிகையைத் துவங்கினார் தேவர். அதன் ஆசிரியராக மு. இராகவையங்காரின் அத்தை மகனான ரா. இராகவையங்கார் நியமிக்கப் பெற்றார். மு. இராகவையங்கார் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளில் ரா. இராகவையங்கார் அப்பொறுப்பிலிருந்து விலகவே, மு. இராகவையங்கார் அந்த இதழின் பதிப்பாசிரியர் ஆனார். மொழிப்பற்றும், வரலாற்றார்வமும், ஆராய்ச்சி அறிவும் கொண்ட ஐயங்கார் சிறந்த பல கட்டுரைகளை செந்தமிழ் இதழில் எழுதினார். சங்க காலப் பெண்கள் எவ்வளவு வீரத்துடன் இருந்தனர் என்பதைச் சித்திரிக்கும் 'வீரத் தாய்மார்' என்ற கட்டுரை ஒன்றை எழுதினார். அதனால் கவரப்பட்ட பாரதியார், இராகவையங்காருக்கு, "தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்பிற்குத் தான் நான் வணக்கம் செய்கிறேன்" என்று தனிமடல் எழுதிப் பாராட்டியதுடன், தான் ஆசிரியராக இருந்த 'இந்தியா' நாளிதழில் அக்கட்டுரையை வெளியிட்டார். சிறந்த ஆராய்ச்சியாளரான எஸ். வையாபுரிப் பிள்ளை, உ.வே.சா., ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. இராகவையங்கார் உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களைப் பெற்றார் மு. இராகவையங்கார்.

ஐயங்கார் தீவிரமாக வரலாற்றாய்வில் ஈடுபட்டார். இலக்கண, இலக்கியங்களையும், வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து, கட்டுரைகளும், நூல்களும் எழுதத் தலைப்பட்டார். அவற்றுள் குறிப்பிடத் தகுந்ததாய் 'வேளிர் வரலாறு' அமைந்தது. இக்கட்டுரை நூல் 1905ம் ஆண்டில், மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரிய ஆராய்ச்சியாளரும் 'The Tamil 1800 yeras ago' என்ற ஆய்வு நூலின் ஆசிரியருமான வி. கனகசபைப் பிள்ளையின் தலைமையில் கூடிய அறிஞர்கள் முன் வெளியிடப்பட்டது. அந்நூலில், "வேளிர்கள் என்போர் சாதாரண சிற்றரசர்கள் அல்லர்; வேளிர் என்ற அச்சொல் தனிவேந்தர் குலத்தைச் சுட்டுவது" என்பதைப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிறுவியிருந்தார் ஐயங்கார். அந்நூலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகம் தனது இண்டர்மீடியட் தேர்வுப் பாடத்தில் ஒன்றாக அதனை வைத்துப் பெருமைப்படுத்தியது. பின்னர் இந்நூல் இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வீ.ஜே. தம்பிப்பிள்ளையால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, 'ராயல்-ஏஷியாடிக்-சொசைடி' ஜர்னலில் வெளியிடப்பட்டது.

அப்போது சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்ப் பேரகராதி ஒன்றைத் தயாரிக்க முன்வந்தது தமிழக அரசு. மதுரை அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த ஜே.எஸ். சாண்ட்லர் துரை அதன் தலைவராக நியமனம் செய்யப்பெற்றார். அவர் மு. இராகவையங்காரை அதன் தலைமைப் பொறுப்பில் நியமித்தார். இதற்காகக் கடுமையாக உழைத்தார் ஐயங்கார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குமேல் உழைத்து அகராதியை முறையாகத் தொகுத்து, அச்சேறுவது வரையிலான அதன் அடிப்படைப் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். இதை சாண்ட்லர் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டியதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களில் ஐயங்காரின் பணி குறித்துக் கட்டுரைகள் எழுதினார். இச்சீரிய பணிக்காக மு. இராகவையங்காருக்கு 'ராவ் சாஹிப்' பட்டம் வழங்கப் பெற்றது. இராகவையங்காரின் அறிவுத்திறனை உ.வே.சா., டி.கேசி., காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, வ.உ.சி. உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

பதிப்பாசிரியராக மு. இராகவையங்கார் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. செந்தமிழ் இதழின் ஆசிரியராக இருந்த காலத்தில் பல நூல்களை ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். 'நரி விருத்தம்', 'சிதம்பரப் பாட்டியல்', 'திருக்கலம்பகம்' போன்றவற்றை உரையுடன் பதிப்பித்திருக்கிறார். 'விக்கிரம சோழனுலா', 'சந்திராலோகம்' (அணி இலக்கணம் கூறும் அரிய நூல்), 'கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவை தவிர 'திருக்குறள்' (பரிமேழலகர் உரை), 'நூற்பொருட் குறிப்பு' போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் கலைமகள், அமுதசுரபி, தமிழர் நேசன், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர் போன்ற இதழ்களிலும் வெளியாகியுள்ளன. தமிழர் நேசன், கலைமகள் இதழ்களின் கௌரவ ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார். இவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாக விளங்குவது அவர் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி உரை. இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் தேர்வுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. 'சேரன் செங்குட்டுவன்' செங்குட்டுவனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் கூறுவது. இந்நூல் சென்னை, மைசூர், ஆந்திர, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பலமுறை பாடமாக வைக்கப்பட்ட பெருமையுடையது. 'சாஸன தமிழ்க் கல்வி சரிதம்' எண்பதுக்கும் மேற்பட்ட அதுவரை அறியப்படாத பல புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்ற நூல். இவை ஐயங்காரின் ஆராய்ச்சித் திறனையும் வரலாற்றறிவையும் பறைசாற்றுவன. பிரபல வரலாற்றறிஞர் டி.என். கோபிநாத ராவ் அவர்களுடன் இணைந்து பல கல்வெட்டு எழுத்துக்களை ஆராய்ந்திருக்கிறார். இவர் வெளியிட்ட 'ஆழ்வார்களின் காலநிலை' என்னும் ஆய்வு நூல் மிகுந்த சிறப்புடையது. அந்நூல் சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை வகுப்பிற்குப் பல ஆண்டுகாலம் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது.

சுவடிகள், கல்வெட்டுகள், பண்டைய இலக்கண, இலக்கிய உரைகள் ஆகியவற்றில் காணப்பட்ட பழஞ்செய்யுள்கள் முழுமையும் தொகுத்து இவர் உருவாக்கிய 'பெருந்தொகை' என்னும் நூல் இவருக்குத் தமிழறிஞர்களிடையே நீடித்த புகழைக் கொடுத்தது. பழைய நூல்களில் மேற்கோளாகத் தரப்பட்ட பாடல்கள், வரிகள், விளக்கங்கள், சான்றுகள் போன்றவற்றைத் தேடி, அவற்றின் மூலநூல்களைக் கண்டறிந்து, அப்பாடல்களைத் தொகுத்து நூலாக்கிய இவரது உழைப்பு அறிஞர்களால் போற்றப்பட்டது. 'முதுபெரும் புலவர்' போன்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தன. பின்னர், சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் பணியும் தேடி வந்தது. அதனை ஏற்றுச் சில மாதங்கள் அங்கு பணியாற்றினார் ஐயங்கார். இந்நிலையில் அழகப்பச் செட்டியாரின் பொருளுதவியால் ஆரம்பிக்கப்பட்ட திருவாங்கூர் பல்கலையின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பு தேடி வந்தது. அவர் 1944-51 காலகட்டத்தில் அங்கு பணியாற்றினார். அக்காலத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளைத் தொகுத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'Some Aspects of Kerala from Tamil Literature என்று வெளியிட்டார். சேர மன்னர்களைப் பற்றிய 'சேர மன்னர் செய்யுட் கோவை' இரண்டு பாகங்கள் வெளியிட்டார். திருவிதாங்கூர் அரண்மனைச் சுவடி நிலையத்தில் கிடைத்த 'அரிச்சந்திர வெண்பா' என்னும் நூலை உரையுடன் வெளியிட்டார்.

1951ல் அப்பணியிலிருந்து விலகித் தம் சொந்த ஊராகிய ராமநாதபுரத்தில் மனைவி, மக்களுடன் வசிக்க வந்தார். அக்காலத்தில் பொன்னுசாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் இருவரது வாழ்க்கை வரலாற்றையும் 'செந்தமிழ் வளர்த்த தேவர்கள்' என்னும் பெயரில் எழுதி வெளியிட்டார். அது அரசுப் பள்ளி இறுதித் தேர்வின் துணைப்பாடமாக அக்காலத்தே வைக்கப்பெற்றது. இவை தவிர ஐயங்கார் ஆய்வு செய்த 'கம்பர்' (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), 'இலக்கிய சாசன வழக்காறுகள்', 'கேரளமும் தமிழிலக்கியமும்', 'பெருந்தொகை' (இரண்டாம் பாகம்), 'நிகண்டகராதி' (பிங்கல, திவாகர, சூடாமணி, உரிச்சொல் போன்ற நிகண்டுகளிலிருந்து அகராதியாகக் தொகுக்கப் பெற்ற நூல்) போன்ற நூல்களும், இவர் பரிசோதித்து வைத்த 'தமிழ் நாவலர்', 'திவாகரம்' போன்ற நூல்களும் அச்சேறவில்லை.

1954ல் தன் மனைவியையும், மூத்த மகனையும், மருமகளையும் இழந்தார். அதனால் பெரும் கொந்தளிப்புக்கும் சோகத்துக்கும் ஆளானார். தமது துயரங்களை 'கையறுநிலை' என்ற தலைப்பில் செய்யுள்களாக வடித்தார். பின் தன் இளைய மகனுடன் மானாமதுரையில் வசித்தார். ஓய்வு நேரத்தை தியானம், இறைவழிபாடு, நூலாராய்ச்சியில் கழித்தார். இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரைக் கம்பராமாயணம் நூல் தொகுப்பிற்குப் பதிப்பாசிரியராக இருக்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இணங்கி, பால காண்டம், சுந்தர காண்டத்தின் சில பகுதிகளுக்குச் சிறப்புரை எழுதினார். இவரது சதாபிஷேகம் (எண்பதாமாண்டு நிறைவு விழா) நடந்தபோது சொற்கள், அவை இயங்கும் விதம், வினை, முதனிலைகள், பாகுபாடு போன்றவை பற்றி ஆராய்ந்து எழுதிய 'வினைத்திரிபு விளக்கம்' என்னும் இலக்கண விளக்க நூலை வெளியிட்டார். 'இலக்கியக் கட்டுரைகள்', 'கட்டுரை மணிகள்' என்னும் நூல்களை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் 1960 பிப்ரவரி 2 அன்று மானாமதுரையில் காலமானார். இவர் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுக்காகத் தமிழக அரசு, 2009ம் ஆண்டில் இவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கியது.

தமிழ் இலக்கிய, வரலாற்றாய்வில் மிக முக்கியமான முன்னோடிகளுள் ராவ் சாஹிப் மு. இராகவையங்கார் ஒருவர் என்பது மறக்கக் கூடாத உண்மை.

(தகவல் உதவி: மூதறிஞர் மு. இராகவையங்கார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com