அ. முத்துலிங்கம்
இலங்கையில் பிறந்து, பணி நிமித்தமாக உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து, கனடாவில் தற்போது வசித்துவரும் அ. முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. (இவரைப்பற்றிய அறிமுகம் பார்க்க: தென்றல், மே, 2006. மனதிலிருந்து சொல்லும் நல்ல கதைகளின் பதிவாளர். மானுட சாரத்தை எழுத்தில் பிழிந்து கொடுத்து மயக்கும் ஜாலம் கைவரப் பெற்றவர். 'கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பைத் தொடங்கித் தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களுக்கும் உலக அளவில் கௌரவம் தருபவர். அவருடன் தென்றலுக்காக உரையாடியதில்.....

*****


மதுரபாரதி: நீங்கள் எழுதிய 'குதிரைக்காரன்' சிறுகதைத் தொகுப்பு 2012க்கான ஆனந்த விகடன் பரிசை வென்றுள்ளது. வாழ்த்துக்கள்.
முத்துலிங்கம்: நன்றி. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் 50 பேர்களை வெவ்வேறு துறைகளில் தேர்வு செய்து 'திறமைக்கு விருது' என்று அவர்களைக் கௌரவிக்கிறது. இந்த வருடத் தேர்வில் என் பெயரும் இடம்பெற்றது. மகிழ்ச்சிதான்.

ம.பா: பரிசு வெல்வது உங்களுக்குப் புதிதல்ல. 1961ல் பரிசு பெற்ற முதல் சிறுகதையான 'அக்கா'வை எழுதிய பின்னணியைச் சொல்லுங்கள்.
மு.லி: என்னுடைய ஆரம்ப வாசிப்பு கல்கிதான். அவரைத் தொடர்ந்து மு.வ., காண்டேகர் என்று கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தள்ளினேன். ஒருநாள் எனக்கு புதுமைப்பித்தன் புத்தகம் ஒன்று கிடைத்தது. அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றேன். தமிழில் அப்படி எழுதலாம் என்று எனக்குத் தெரியாது. எழுதிய விசயம் புதிதாக இருந்தது. சொன்ன முறையும் புதுமையானது. பின்னொருநாள் ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய Dubliners கிடைத்தது. அதைப் படித்த பின்னர் இன்னொரு அதிர்ச்சி. இப்படியும்கூட எழுதலாம் என்ற வியப்புத்தான். உள்மன ஓட்டம் என்று சொல்வார்கள். ஒரு சிறுவனின் கண்களால் கதை சொல்லப்பட்டிருக்கும். என்னுடைய மனதுக்குள் பூட்டியிருந்த கதவு ஒன்று வெடித்துத் திறந்தது.

இன்னொரு நாளில் நான் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் சுயசரிதையை படித்தபோது அவர் ஓரிடத்தில் தன் வாழ்க்கையை மாற்றிய தருணத்தை வர்ணிப்பார். ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் கதையைப் படித்தபோது அவர் உலகம் மாறியது. அதன் பின்னர் அவர் எழுதிய எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்தது.

அக்கா சிறுகதையும் இப்படியான ஒரு தருணத்தில் எழுதியதுதான். கதை ஒரு சிறுவனின் மனதினுள் விரியும். தமிழ் விழாவின்போது தினகரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

ம.பா:அதே தலைப்பில் உங்கள் முதல் தொகுப்பு 1964ல் வெளியானது. அதன்பின் 1995ல்தான் மீண்டும் எழுத்துலகில் நுழைகிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் உங்கள் கற்பனை தேவதை என்ன ஆனாள்?
மு.லி: அறுவடை செய்யும்போது மட்டும்தான் ஒருவன் விவசாயியா? நிலத்தை உழும்போது, விதை விதைக்கும்போதும், நாற்று நடும்போதும், பூச்சி மருந்து அடிக்கும்போதும்கூட அவன் விவசாயிதான். ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்யமுடியாது. அதற்கென்று ஒரு காலம் உண்டு. ரொறொன்ரோவில் என் வீட்டில் பூக்கும் ட்யூலிப் பூவை நான் இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கு உதாரணமாகச் சொல்வேன். இதன் முளையை நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடுவோம். அதன்மேல் நிறையப் பனி விழும். மூன்றடி ஆழப் பனிக்கு கீழே புதைந்து கிடக்கும். ஏப்ரல் மாதம் பிறக்கும்போது மண்ணைக் கீறிக் கிளம்பி வெளியே வரும் முதல் பூ இதுதான். அந்தப் பனிக்காலத்தில் அது என்ன செய்தது? தனக்கான தருணத்துக்காக ஏங்கிச் சக்தியை சேகரித்துக்கொண்டு காத்திருந்தது. சிலநேரம் எழுத்தாளர்கள் ஒன்றுமே எழுதாமல் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் உள்ளே பெரும் பாய்ச்சலுக்கான ஒத்திகை நடக்கும்.
சமீபத்தில் ஒரு நீச்சல்போட்டி பார்க்கப் போயிருந்தேன். நூறு பேர் பங்கேற்றார்கள். எல்லோரும் நீரிலே விழுந்து அலை எழும்பித் தெறிக்க ஓயாமல் பயிற்சி செய்தபோது ஒருவர் மட்டும் அமைதியாக நீண்ட நேரம் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். போட்டி துவங்கியபோது முதலாவதாக வந்தார். அவர் சக்தியைச் சேகரித்துக்கொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன்.

ம.பா: இலங்கையில் கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர் நீங்கள். அதைப் பற்றிய உங்கள் முதல் நினைவு என்ன?
மு.லி: முதல் நினைவு என்றால் அம்மா சொன்ன கதைதான். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன் 'எங்கள் ஊருக்கு எப்படி கொக்குவில் என்று பெயர் வந்தது? அம்மா சொன்னார். ராமர் இலங்கைக்கு வந்து ராவணனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்புமுன்னர் நடந்தது. ஒரு காலை நேரத்தில் சோலை ஒன்றில் ராமர் தன் வில்லை ஊன்றிவிட்டு அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்தபோது அவர் முன்னே ஒற்றைக்காலில் ஒரு வெள்ளைக் கொக்கு நின்று தவம் செய்தது. ராமர் மனமுருகி கொக்கின் முதுகில் தடவிக் கொடுத்தார். 'கொக்கையுமா? அதற்கு மூன்று குறி இல்லையே?' என்றேன். அப்படியல்ல. அணிலுக்குத் தடவியதோடு குறிகொடுக்கும் திறன் ராமர் விரல்களுக்கு முடிந்துபோனது. ஆனால் நிறைய கருணை இருந்தது. அன்றிலிருந்து அந்த இடம் 'கொக்குவில்' என்று அறியப்பட்டது என்றார். அம்மாவிடம் வேறு குறுக்கு கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை நம்புவது என்று தீர்மானித்தேன்.

ம.பா: உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் பற்றிக் கூறுங்கள்?
மு.லி: எனக்கு 13 வயது நடக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். ஆனால் 50 வயது காலத்துக்குத் தேவையானவற்றை எனக்கு சொல்லித் தந்துவிட்டுத்தான் இறந்தார். மகாபாரதம், ராமாயணம் முழுவதும் அவருக்கு மனப்பாடம். ஒவ்வொரு சின்ன விவரமும் தெரியும். கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது அவர்தான்.

என்னுடைய ஐயாவிடம் சிறுவயதிலேயே பயம். அவர் மடியில் ஏறி இருந்ததோ அவர் என்னைத் தூக்கியதோ ஞாபகம் இல்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது மகத்தான மனிதர். நாங்கள் பிள்ளைகள் ஏழு பேர். நான் ஐந்தாவது. நான் வளர்ந்த சமயம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. விலைவாசி உயர்வு; சாமான் தட்டுப்பாடு. எங்கள் அன்றைய உணவுக்கு ஐயா எப்படியோ சம்பாதித்தார். ஒருநாள்கூடப் பட்டினி கிடந்தது கிடையாது. எங்கள் கிராமம் ஏழைப்பட்ட கிராமம். ஒரு மாடும் இரண்டு ஆடும் இருந்தால் பணக்காரன். பத்து மாடு இருந்தால் செல்வந்தன். இந்த நிலையில் எங்களை வளர்த்தெடுத்தது ஒரு சாதனை என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது.

ம.பா: இலங்கைத் தமிழர் படும் அல்லல்களைக் கதைகளில் சித்திரித்துள்ளீர்கள். அங்கு நிலவும் கொடூரத்தின் ஆழம் உங்களுக்கு அனுபவமாவது எப்படி?
மு.லி: பல வருடங்களாக இலங்கைப் போர் குறித்த பதிவுகள் என் எழுத்தில் இல்லை. பத்திரிகைத் தகவல்களையும் ரேடியோச் செய்திகளையும் வைத்து எழுதுவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. காரணம், போரை நேரில் பார்த்தவர்களால்தான் அதை முறையாகப் பதிவு செய்யமுடியும் என்று நான் நினைத்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் 'இப்படியான போர் அவலச் சூழ்நிலையில் எழுத்தாளரான நீங்கள் அதைப் பதிவு செய்யவேண்டியது கடமையல்லவா? உங்கள் பேரப்பிள்ளை ஒருநாள் உங்களைக் கேட்கக்கூடும். அதற்குப் பதில் என்ன?' என்றார்.

புதுமைப்பித்தன் இலங்கைக்குப் போனது கிடையாது. ஆனால் இலங்கை தேயிலைத்தோட்டத்தில் நடப்பதாக 'துன்பக்கேணி' என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். பிரான்ஸ் காஃப்கா அமெரிக்கா போனது கிடையாது. ஆனால் அங்கே குடியேறி அல்லல்படும் ஓர் இளைஞனுடைய கதையை 'அமெரிக்கா' என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். நானும் தீர்மானித்து பல கட்டுரைகளும் சிறுகதைகளும் நேரடியாக அனுபவித்தவர்களைக் கண்டு பேசி குறிப்பெடுத்து எழுதினேன். நாற்பது வருடங்களாக நான் என் கிராமத்துக்குப் போனது கிடையாது. ஆகவே தகவல்களை இரண்டுதரம் உறுதி செய்யவேண்டியிருந்தது.

சில வாரங்களுக்கு முன் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் போர் நடந்த சமயம் அதை நேரடியாகப் பார்த்தவர். பல இன்னல்களைச் சந்தித்தவர். அவர் ஒரு சம்பவம் சொன்னார். உடனே 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வரலாற்றுப் பிதாமகர் ஹெரொடோரஸ் ஞாபகத்துக்கு வந்தார். சடாயட்டஸ் என்ற மன்னன் மிலேட்டஸ் என்ற நாட்டின்மீது அறுவடை நேரம்பார்த்துப் படை எடுப்பான். ஆனால் போர் புரிய மாட்டான். மக்களை சிறைபிடிக்க மாட்டான். வீடுகளை எரிக்க மாட்டான். பயிர்களை மட்டும் அழித்துவிட்டுத் திரும்பிவிடுவான். இப்படி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் படையெடுத்தான். அந்த மக்களைப் பொருளாதார ரீதியில் வதைத்து அடிமைப்படுத்தி ஆள்வதுதான் அவன் நோக்கம்.

என் நண்பர் சொன்ன கதையும் அதுதான். அவருடைய வாழைத் தோட்டத்தை ராணுவம் பீப்பாக் குண்டுபோட்டு அழித்தது. அடுத்த வருடமும் அழித்தது. மீண்டும் அழித்தது. போர் உத்தி 2500 வருடமாக மாறவே இல்லை.

ம.பா: இனிச் சம்பாதிக்கவோ, சாதிக்கவோ ஏதுமில்லை என்ற வாழ்க்கை நிலையில், எழுத்துக்கான உந்துதலை எதிலிருந்து பெறுகிறீர்கள்? எப்படித் தக்க வைத்துக்கொள்கிறீர்கள்?
மு.லி: ஐஸாக் அசிமோவ் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அவர் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மிக வேகமாக டைப் செய்வார். காலையில் எழுந்து இரவு படுக்கப் போகும்வரைக்கும் தட்டச்சிக்கொண்டே இருப்பார். அவரிடம் இதே கேள்வியை கேட்டார்கள். அவர் சொன்ன பதில். 'என்னுடைய தட்டச்சு மெசினில் அடுத்து என்ன வசனம் வருகிறது என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன்.' அதில் பெரிய உண்மை இருக்கிறது. எழுத்தாளர் சிருஷ்டி வேலையில் இருப்பவர். உலகத்தில் ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாகப் படைப்பவர். சிருஷ்டியின் மகிழ்ச்சி தனி. அதை அனுபவிப்பதற்காகத்தான் பலர் எழுதுகிறார்கள். பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. கனடாவின் முக்கிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ. இன்று அவருக்கு வயது 81. உலகத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் இவர் முன்வரிசையில் இருக்கிறார் என்பது பலருடைய கருத்து. ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசினார். அங்கே நான் இருந்தேன். அந்தக் கூட்டத்தில் ஒரு பிரகடனம் செய்தார். 'இன்றிலிருந்து நான் எழுதப்போவதில்லை. ஓய்வெடுக்கப்போகிறேன்' பார்வையாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஆனால் அந்தப் பேச்சுக்குப் பின்னர் மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கும்போது நான் அவருடைய பேச்சை மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஓர் எழுத்தாளர் படைப்புச்சம் தரும் இன்பத்துக்காகவே எழுதுகிறார். வாசகனுக்குக் கிடைக்கும் இன்பம் இரண்டாம் பட்சம்தான். நான் ஒரு சிறுகதை எழுத உட்காரும்போது மனதில் ஒரு திட்டம் இருக்கும். ஆனால் அச்சாகி வெளிவருவது வேறு ஒன்று. அதுதான் படைப்பு. சில எழுத்தாளர்கள் 'கதை தன்னைத்தானே எழுதுகிறது' என்று கூறுவார்கள். எழுத்தாளர் தள்ளி நின்றாலே போதும், நல்ல கதை பிறந்துவிடும்.

ம.பா: கனடாவில் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பின் வழியே தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களையும் கௌரவித்து வருகிறீர்கள். அதற்கான விதை விழுந்தது எப்படி?
மு.லி: தமிழில் உலகத் தரமான பல நூல்கள் வருகின்றன ஆனால் அவற்றை ஒருவருமே கவனிப்பதில்லை. எழுத்தாளருக்கான மதிப்பும் கிடைப்பதில்லை. உலகத்தில் 80 மில்லியன் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் ஒரு மில்லியன் பேர் நியூசீலாந்தில் இருந்து அலாஸ்கா வரைக்கும் பரவியிருக்கிறார்கள். சூரியன் மறையாத தமிழ்ப் புலம் என்று சொல்வார்கள். ஆனால் தமிழ் படைப்புகளை ஊக்குவிக்கவோ அதைப் படைத்தவர்களுக்கு மரியாதை செய்யவோ உலக அளவில் ஓர் அமைப்பு கிடையாது.

அமெரிக்க எழுத்தாளர்களுக்கு புலிட்சர் பரிசு இருக்கிறது. கனடிய எழுத்தாளர்களுக்கு கில்லர் பரிசு இருக்கிறது, பொதுநல நாட்டு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு இருக்கிறது. ஆங்கில எழுத்துகளுக்கு உலகளாவிய ரீதியில் நோபல் பரிசும் உண்டு. தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் சாகித்திய அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் உலகப்பொது அமைப்பு இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் 2001ல் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் தமிழ் இலக்கியத்துக்காக இயங்கும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு அறக்கட்டளை இதுதான். அவர்களுடைய வலைமனை: www.tamilliterarygarden.com

இதன் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் உலகளாவி உள்ளனர். இதன் நடுவர்கள் உலகத்தின் பல நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள். இதன் செயல்பாடு வெளிப்படையானது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து விரிவுரைகள் ஒழுங்கு செய்வதும் அவ்வப்போது நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் என நடுவர் குழு கருதும் ஒருவருக்கு 'இயல் விருது' என்னும் வாழ்நாள் சாதனை விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். இது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்: சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன். இது தவிர புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, கணிமை, மாணவர் கல்வி உதவித் தொகை பரிசு ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

ஆங்கிலத்துக்கு நோபல் பரிசு நிறுவனம் இருப்பதுபோல தமிழுக்கு உலகளாவிய விதத்தில் தமிழ் இலக்கியத் தோட்டம் அமையவேண்டும் என்பதே நோக்கம். இந்த முயற்சியில் தென்றலும் ஆதரவாக இருப்பது பெருமைக்குரிய விசயம்.

ம.பா: புலம்பெயர்ந்தோரிடையே தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் உங்களைப் போலவே வட அமெரிக்காவில் பணி செய்கிறது 'தென்றல்'. அது குறித்த உங்கள் அவதானிப்பு என்ன?
மு.லி: தென்றல் 12 வருடங்களாக வெளிவருகிறது. பத்து வருடத்துக்கு முன்னர் இந்த இதழ் ஒன்று எனக்கு கிடைத்தது. பின்னர் தென்றலைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் உள்ளடக்கம், அமைப்பு, அட்டைப் படம், தாள், அச்சு இவற்றை எல்லாம் பார்த்து வியந்துபோனேன். என்னுடைய முதல் எண்ணம் இது தொடர்ந்து வருமா என்பதுதான். பல தமிழ் இதழ்கள் வேகமாகத் தோன்றி அதே வேகத்தில் மறைவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் தென்றல் தொடர்ந்து மாதா மாதம் வருவதுடன் அதன் தரமும் உயர்ந்துகொண்டே போகிறது. அதன் தலையங்கம், இலக்கியம், நேர்காணல்கள், மருத்துவம், சமையல், சினிமா, புதிர்கள், சிறுவர் பகுதி ஆகியவை எல்லா வகையான வாசகர்களையும் ஈர்த்திருக்கிறது. முக்கியமாக நிகழ்வுகள் பகுதி மூலம் வட அமெரிக்காவில் கலை, இலக்கியம் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இதுதவிர அவர்களுடைய அறக்கட்டளை மூலம் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுகிறார்கள். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிரந்தர ஆதரவாளராகத் தென்றல் இருக்கிறது. அவர்கள் தொண்டு வளர என் வாழ்த்துக்கள்.

ம.பா: நீங்கள் ஓர் எழுத்தாளராக இயங்குவதில் உங்கள் மனைவி, மக்களின் பங்கு என்ன?
மு.லி: ரோல்ஸ்ரோய் என்ற பெரிய ரஸ்ய எழுத்தாளருடைய மனைவி சோஃபியா நல்ல வாசகி. ரோல்ஸ்ரோய் எழுதுவதை முதலில் படிப்பவர் அவர்தான். தமிழிலும் சில எழுத்தாளர்களுக்கு வாசகி மனைவிமார் அமைந்திருக்கின்றனர். என்னுடைய மனைவி பெரிய வாசகி இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். சிலசமயம் ஏதாவது நான் எழுதியதை படித்துவிட்டு 'இது சரியில்லை' என்று சொல்லியிருக்கிறார். கணவனிடம்கூட உண்மை பேசவேண்டும் என நினைப்பவர். என்னுடைய எழுத்துக்குப் பெரும் உதவியாக இருப்பார். ஏதாவது புத்தகம் கேட்டால் என்ன பாடுபட்டும் வாங்கித் தந்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். நான் பத்து புத்தகங்களை ஒரே சமயத்தில் படிப்பவன். அவை எல்லாம் சரியான பக்கத்தில் திறக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் குப்புறக் கிடக்கும். அவற்றை எடுத்து மடித்து தூசிதட்டி புத்தகத்தட்டில் அடுக்கிவிடுவார். அவற்றை மீண்டும் தேடி எடுத்துப் படிக்க எனக்கு அரைநாள் செலவாகும். ஆனாலும் அவர் சோர்வில்லாமல் உழைப்பார். இது பெரிய பேறல்லவா?

என்னுடைய மகன் ஒரு மாதத்தில் பத்து புத்தகங்கள் படிப்பார். அவர் சொல்லித்தான் பல புத்தகங்களை வாங்கி நான் படித்திருக்கிறேன். மகளும் சிறந்த வாசகி. அவர் படிக்கும் புத்தகம் எதையாவது நான் தொட்டால் 'அது உங்கள் டைப் புத்தகம் இல்லை' என்பார். எப்படியோ தவறான புத்தகங்களை நான் படிக்கிறேன் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

ம.பா: எழுத்தாளர் என்ற முறையில் நீங்கள் பெற்ற மறக்க முடியாத அனுபவங்களை எங்களுக்காக நினைவுகூர முடியுமா?
மு.லி: நிறைய அனுபவங்கள். இதுவரை எழுதாத ஒன்றிரண்டைச் சொல்கிறேன். ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியம். நான் அங்கே போனது 1972ல். இலங்கையில் மோசமான பொருளாதார நிலை. அத்தியாவசியமான பொருட்களுக்குகூட தட்டுப்பாடு. பாண் வாங்குவதற்கு காலை ஐந்து மணிக்கே போய் வரிசையில் நிற்கவேண்டும். ஆப்பிரிக்காவில் இறக்குமதிப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஒரு பார்சல் செய்து சிலோனுக்கு அனுப்புவதற்காக தபால் நிலையத்துக்கு எடுத்துச் சென்றென். போஸ்ட்மாஸ்டர் பார்சலை நிறுத்துப் பார்த்துவிட்டு 20 பிரிட்டிஷ் பவுண்டு என்றார். பார்சல் பண்ணிய பொருட்களின் விலை 2 பவுண்டுதான். நான் வேண்டாமென்று விட்டு திரும்பினேன். என்னைத் துரத்திக்கொண்டு போஸ்ட் மாஸ்டர் ஓடிவந்தார். 'இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு போகலாமா. வாருங்கள், வாருங்கள்' என்றார். ஏதோ கல்யாண வீட்டு விருந்துக்கு அழைப்பதுபோல. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சரி. பார்சலுக்கு எவ்வளவு தருவீர்கள்?' என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். ஒரு தானத்தை சொன்னேன். அவர் ஒன்றைச் சொன்னார். நான் ஒன்றைச் சொன்னேன். அப்படியே படிப்படியாக் பேசி கடைசியில் பேரம் படிந்தது. அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். தபால் தலைகளை பார்சலில் ஒட்டி முத்திரையால் குத்தினார். 'சரி போய் வாருங்கள்' என்று விடைகொடுத்தார். பார்சலை அனுப்பிவிட்டேன் என்று மனைவியிடம் சொன்னாலும் அது போய்ச் சேராது என்பது எனக்கு தெரியும். ஒரு மாதம் கழித்து பார்சல் சிலோனில் கிடைத்துவிட்டதாக கடிதம் வந்தது. நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. அதுதான் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முதல் ஆச்சரியம். ஆனால் அதற்கு பின்னர் ஏற்பட்ட ஆச்சரியங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தபோது அந்த முதல் ஆச்சரியம் தூசி என்றுதான் எனக்கு இப்போது படுகிறது.

இரண்டாவது அனுபவம். சமீபத்தில் ரொறொன்ரோவின் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியக் குழுவில் ஒருவரை சந்தித்தேன். 'நீங்கள் என்ன மொழியில் எழுதுகிறீர்கள்' என்று கேட்டார். தமிழ் என்று சொன்னேன். அவருக்குப் புரியவில்லை. 'அந்த மொழி எந்த நாட்டைச் சேர்ந்தது?' என்று கேட்டார். எனக்கு முகம் விழுந்துவிட்டது. 'அதற்கு ஒரு நாடு இல்லை. ஆனால் இந்தியாவில், இலங்கையில், மலேசியாவில் இன்னும் புலம்பெயர்ந்த பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள்' என்றேன். அவர் முகத்திலிருந்து அவர் நம்பவில்லை என்பது தெரிந்தது. உலகத்தின் இரண்டாவது பெரிய தேசமான கனடாவின் சனத்தொகை 33 மில்லியன் மட்டுமே. நான் தொடர்ந்து உலகத்தின் ஆதி ஆறுமொழிகளில் தமிழும் ஒன்று. அது செம்மொழி, இன்றும் அழியாமல் வாழ்கிறது. 2000 வருடங்கள் பழமையான இலக்கியங்கள் இருக்கின்றன என்று சொன்னேன். அவர் நம்பாமலே விடைபெற்றுச் சென்றார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள்தான் மூச்சுவாங்கத் தமிழின் பெருமையை பேசுகிறோம். உலகில் பலருக்கு தமிழ்மொழி பற்றிய அறிவே கிடையாது.

ம.பா: தமிழ் நாட்டின் வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் மிகவும் நலிவுற்ற காலம் இது. ஆனாலும் உங்கள் கதைகளுக்கு வரவேற்புக் குறையவில்லை. எப்படி?
மு.லி: தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய கதைகள் மூன்று வகைப்பட்டவை. இலங்கைப் பின்னணியில் கதை புனைவது ஒன்று. வெளிநாட்டில் அதாவது அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாட்டில் நிகழும் கதை ஆனால் கதைமாந்தர்கள் தமிழர்களாக இருப்பார்கள். மூன்றாவது வகை வெளிநாட்டில் நிகழும், கதைமாந்தர்களும் வெளிநாட்டவர்களாகவே இருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுத்தில் பொதுவாக முதல் இரண்டு வகையும் இருக்கும். அவரைச் சுற்றி இருக்கும் மற்ற உலகத்தைப் பற்றி அவர்கள் எழுதுவதில்லை.

உதாரணமாக இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் மைக்கேல் ஒண்டாச்சி என்ற ஆங்கில எழுத்தாளருக்கு இப்போது வயது 69. இவருக்கு புக்கர் பரிசு, கில்லர் பரிசு, ஜனாதிபதி பரிசு எல்லாம் கிடைத்திருக்கிறது. இவருடைய சமீபத்திய நாவலின் பெயர் The Cat's Table. 60 வருடத்துக்கு முந்திய இலங்கையை பற்றியும், இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பல் பயணத்தையும் பற்றிய கதை. அதைப் படித்தபோது எனக்கு தோன்றியது 'இவர் 12 வயதில் இலங்கையை விட்டு வெளியேறியவர். ஆனால் இலங்கை இவரை விட்டு வெளியேறவில்லை.' நான் சிறுவனாக யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு காகம் தினமும் வரும். நாங்கள் வீசும் தானியத்தைச் சாப்பிட்டுவிட்டு பறந்துபோகும். மறுநாளும் வரும். வருடம் முழுக்க வரும். அதன் சுற்று வட்டாரம் இரண்டு மைல்தான். இன்னொரு பறவையும் வரும். மிக அழகான பறவை. மஞ்சள் சிவப்பு பச்சை நிறம் கொண்டது. கோடை தொடங்கும்போது பறந்துபோய்விடும். எங்கே போகிறது என்றால் இமயமலைக்கு. பின்னர் அங்கே குளிர்காலம் தொடங்கும்போது மறுபடியும் என் கிராமத்துக்கு வந்துவிடும். அதன் பெயர் 'ஆறு மணிக்குருவி'. ஆங்கிலப் பெயர் Indian Pitta bird. சரியாகக் காலை ஆறு மணிக்கு சத்தம் போடும். காகத்துக்கு இரண்டு இறக்கைகள். அது இரண்டு மைல் தூரத்தை தாண்டுவதில்லை. ஆறுமணிக் குருவிக்கும் இரண்டு இறக்கைகள். அது ஆயிரத்துக்கும் அதிகமான மைல்கள் பறந்து இமயமலைக்குப் போய் திரும்புகிறது.

புலம்பெயர் மக்கள் ஆறுமணிக் குருவிபோல. அவர்கள் தங்கள் செட்டைகளை விரித்து உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகமே கதைப்பொருள். அவர்கள் செல்லவேண்டிய தூரம் காகம்போல இரண்டு மைல் அல்ல.

ம.பா: தமிழ் எழுத்துலகில் 'இது நடந்திருக்க வேண்டும்; ஆனால் நடக்கவில்லை' என்ற குறை உங்கள் மனதில் உண்டா? அது என்ன?
மு.லி: பலவருடங்களாக ஒரு குறை என் மனதில் உண்டு. இதைப்பற்றிப் பேசியும், எழுதியும் வருகிறேன். நான் தமிழ் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்கிறேன். தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலப் படைப்புகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. படைப்பாளிகள் உச்சத்தில் இருக்கிறார்கள். உதாரணம் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன். இன்னும் பலர். ஆனால் நல்ல மொழிபெயர்ப்புகள் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு) வெளிவருவதில்லை. ஒன்றிரண்டு மொழிபெயர்ப்புகள் வெளிவந்தும் பெரிய வரவேற்பை பெற்றதில்லை.

Constance Garnett என்பவர் ஆங்கிலப் பெண். 100 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ய மொழியிலிருந்து பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். ரோல்ஸ்ரோய், டோஸ்ரோவ்ஸ்கி, செக்கோவ் எல்லோரையும் ஒரு வெறியுடன் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு பிரதிபலன் எதிர்பார்த்ததில்லை. அவர் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது அவர் காலடியில் டைப் செய்த தாள்கள் குவிந்துபோய்க் கிடக்கும் என்று சொல்வார்கள். ஓர்ஹான் பாமுக் என்பவர் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர். இவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் எர்டாக் கோக்னர். இவர் மொழிபெயர்க்காவிட்டால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது. இவருடன் நான் பேசியிருக்கிறேன். தன் வாழ்நாள் முழுக்க ஓர்ஹானின் நூல்களை மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். அத்தனை அர்ப்பணிப்பு. இஸ்மாயில் காதர் என்பவர் அல்பேனியர். அந்த நாட்டின் சனத்தொகை 3.3 மில்லியன். அவர் அல்பேனிய மொழியில் எழுதிய நூல் பிரெஞ்சு மொழி வழியே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது. அதற்கு புக்கர் சர்வதேச பரிசு கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியம். அவர்கள்தான் நூல்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவர்கள்.

ம.பா: இந்தக் குறையைச் சரி செய்ய என்ன வழி?
மு.லி: நான் ஒரு ஆங்கிலப் புத்தகம் வாங்கியதும் அது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். 20 மொழிகள், 30 மொழிகள் என்று எழுதியிருப்பார்கள். அந்தப் பட்டியலைப் பார்த்தால் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என்று பல மொழிகள் இருக்கும் ஆனால் தமிழ் இராது. எனக்குத் தீராத ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு பட்டியலிலும் ஐஸ்லாண்டிக் மொழி இருக்கும். ஐஸ்லாண்டின் சனத்தொகை 3 லட்சம், அதாவது கனடாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் அதுவே. 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களிடைய 1000 பிரதிகள் விற்றால் அது பெரும் வெற்றி. ஆகவே ஐஸ்லாண்டில் எத்தனை புத்தகம் விற்கும். 20 விற்றாலே ஆச்சரியம்தான். எப்படி அவர்களுக்கு கட்டுபடியாகிறது? அந்த ரகஸ்யம் என்னவென்றால். ஐஸ்லாண்ட் அரசு உதவி செய்கிறது. அந்த மொழிக்கு ஒரு நாடு இருப்பதால் அது சாத்தியமாகிறது. ஓர் ஆங்கில எழுத்தாளர் சொன்னார் இன்றைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் சேக்ஸ்பியரை பரப்புவதற்கு வருடம் தோறும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பவுண்டுகளை செலவழிக்கிறது என்று. அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் அரசுசாரா அமைப்புகள் உதவலாம். தனியார் நிறுவனங்கள் உதவலாம்.

இந்தக் குறையைச் சரிசெய்ய இப்போது ஓரளவுக்குச் சிறிய ஒளி கிடைத்துள்ளது. ரஸ்ய இலக்கியத்துக்கு ஒரு Constance Garnett கிடைத்ததுபோல எங்களுக்கு வைதேஹி ஹேர்பர்ட் என்பவர் கிடைத்திருக்கிறார். இவர் அமெரிக்கர். சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதை தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். நாளுக்கு 16 மணிநேரம் வேலை செய்கிறார். சங்க இலக்கியங்கள் 18 நூல்களையும் 2014ம் ஆண்டு முடிவதற்குள் மொழிபெயர்த்துவிடுவதாக சங்கல்பம் செய்திருக்கிறார். ஏற்கனவே ஆறு நூல்களை மொழிபெயர்த்துவிட்டார். ஏழாவது நூல் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். இதைத் தமிழ் இலக்கியத் தோட்டம் கனடாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. வைதேஹி போல இன்னும் பலர் முன்வரவேண்டும்.

உரையாடல்: மதுரபாரதி

*****


சூரியன் அதிகப் பிரகாசமாக எரிந்தது!
எனக்கு 17, 18 வயது இருக்கும். இலங்கையில் சுதந்திரன் பத்திரிகை ஞாயிறு தோறும் சிறுகதை பிரசுரிக்கும். பிரபல எழுத்தாளர்கள் அதில் எழுதுவார்கள். நான் ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். ஒவ்வொரு ஞாயிறும் ஆவலாகப் பத்திரிகையை பிரித்துப் பார்ப்பேன். கதை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது.

ஒரு ஞாயிறு காலை முடிவெட்டுவதற்காகச் சலூனுக்குப் போயிருந்தேன். எனக்கு முன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் சுதந்திரன் பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியே அதிர்ச்சிதான். என் கதை பிரசுரமாகியிருந்தது! முழுக் கதையையும் வேறு யாரோ எழுதியதுபோல படித்தேன். மற்றவர்களைப் பார்த்தேன் அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இத்தனை பெரிய விசயம் நடந்திருக்கு, ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. சூரியன் வெளியே அதிகப் பிரகாசமாக எரிந்தது. ரோட்டிலே கார்கள் அதிக வேகமாக ஓடின. ரேடியோ இசை அதிக இனிமையுடன் ஒலித்தது. முடிவெட்டும் கத்தரிக்கோல் அதிக ஓசையுடன் வெட்டியது. இந்த மூடர்கள் ஒன்றுமே அறியாது பேசாமல் இருந்தார்கள்.

அ. முத்துலிங்கம்

*****


புதியதைச் சொல், புதுமையாக எழுது
நான் புதுமைப்பித்தனை முதலில் படித்தபோது கற்றது தேய்வழக்குளை தவிர்ப்பது. தேய்வழக்குகளைத் தவிர்த்தாலே நல்ல எழுத்து வந்துவிடும். இன்றைக்கும் சிலர் 'அவள் முகம் அன்றலர்ந்த தாமரைபோல சிவந்தது' என்று எழுதுவதைப் பார்க்கலாம். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் இடத்தில் மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கும் தோசை மாபோல அவள் முகம் மலர்ந்து காணப்பட்டது என்று எழுதினார். அதுதான் எழுத்து. ஓர் எழுத்தாளர் சொல்வது வித்தியாசமானதாக இருக்கவேண்டும். 'நாலாம் வகுப்பு மாணவனுக்குப் புரியும் தமிழில் எழுதவேண்டும் ஆனால் 4ம் வகுப்பு மாணவனின் தமிழில் அல்ல.' மாணவன் எழுதுவான். 'நானும் தம்பியும் அனாதைகள்.' இதை ஓர் எழுத்தாளர் இப்படி எழுதுவார்: 'நான்தான் என் தம்பியை வளர்த்தெடுத்தேன். என்னையும் நான்தான் வளர்த்தெடுத்தேன்.'

சேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட்டில் ஓர் இடம் வரும். அவன் காதலி ஒஃபீலியாவிடம் பேசுகிறான். 'God has given you one face and you make yourself another face.' இன்றுவரை இந்த வசனத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசுகிறார்கள். மேற்சொன்ன வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நாலாம் வகுப்பு மாணவி எழுதக்கூடியது. ஆனால் சொல்லிய முறை எழுத்தாளனுடையது.

'புதியதைச் சொல்; புதுமையாக எழுது' என்று சொல்வார்கள். 'என்னுடைய அம்மா ஒடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.' இது ஒரு சிறுகதையின் ஆரம்பம். இதன் பின்னே சொல்லப்படப்போகிற விசயம் புதியதாகத்தான் இருக்கும். வாசகர் உடனே வாசிக்கத் தொடங்கிவிடுவார்.

அ. முத்துலிங்கம்

© TamilOnline.com