தென்றல் பேசுகிறது...
சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1953 ஃபிப்ரவரியில் ஜேம்ஸ் வாட்ஸனும் ஃப்ரான்சிஸ் கிரிக்கும் 'உயிரின் ரகசியம்' என்பதான டி.என்.ஏ.வின் (டியாக்ஸி ரைபோ நியூக்ளியைக் ஆசிட்-DNA) என்கிற மரபணுக்கூறினைக் கண்டுபிடித்தனர். ஒரு குழந்தையின் பெற்றோர் இன்னார் என்பதைக் கண்டறிவதில் தொடங்கி, நோய் அல்லது பிற தன்மைகளின் ஆதாரம் எந்த மர்ம முடிச்சில் இருக்கிறது என்பதுவரை மரபணு ஆராய்ச்சியினால் சாத்தியமாகியிருக்கிறது. அது மட்டுமல்ல, மரபணுவை மாற்றியமைத்துப் புதிய அல்லது தான் விரும்பிய குணங்களைக் கொண்ட காய்கறிகளையும் பிறவற்றையும் அமைத்துக்கொள்ளும் சர்ச்சைக்குரிய அறிவியல் முயற்சிகளுக்கும் ஆதாரமாக அமைந்தது டி.என்.ஏ.வின் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததால்தான்.

வாட்ஸனும் கிரிக்கும் டி.என்.ஏ. இரட்டைத் திருகுச்சுருள் (Double Helix) வடிவத்தில் அமைந்தது என்றும் கூறினர். அண்மையில், கேம்பிரிட்ஜின் வேதியல் துறைப் பேராசிரியர் சங்கர் பாலசுப்பிரமணியன் "டி.என்.ஏ. நான்கு திருகுச் சுருள் வடிவத்திலும் காணப்படுகிறது" என்று அறிவித்துள்ளார். இது முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும். இந்த வடிவ மரபணுவுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இது நிரூபிக்கப்பட வேண்டிய கருதுகோள் என்றாலும், இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய்க்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். இந்த முக்கியமான கண்டுபிடிப்பில் ஒரு தமிழரின் பங்கு உள்ளதென்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.

*****


கணினித் துறைக்காரர்களும் டி.என்.ஏ. வடிவத்தில் ஆர்வம் கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. டிஜிடல் டேடா எனப்படும் எண்ணியத் தரவுகளைச் சேமித்து வைக்க டி.என்.ஏ. வடிவம் மிகச் சிறப்பாக உதவுகிறதென்கிறார்கள் யூரபியன் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் இன்ஸ்டிட்யூடைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஒரு புகைப்படம், ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள், மார்ட்டின் லூதர் கிங்கின் "ஐ ஹேவ் எ ட்ரீம்" சொற்பொழிவின் ஒரு பகுதி ஆகியவற்றை அவர்கள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மரபணுவில் சேமித்து வைத்தனர். அந்தத் தகவல்களை மீட்டுச் சற்றும் தவறின்றி முழுமையாகத் திரும்ப வாசிக்க அவர்களால் முடிந்தது. 'நேச்சர்' பத்திரிகையில் இதுகுறித்து எழுதிய கட்டுரையில், "இந்த முறையில் அபரிமிதமான தகவல்களை, ஆயிரக்கணக்கான ஆண்டுகள், மின்சாரத்தின் தேவையில்லாமலே, சேமித்து வைக்க முடியும்" என்று கூறியுள்ளார்கள். மூன்று மில்லியன் சி.டி.க்களில் அடைத்து வைக்கும் தகவல்களை ஒரு கிராம் டி.என்.ஏ.வில் வைக்கலாம் என்றால் பாருங்களேன். மேற்கண்ட இரண்டைக் குறித்தும் விவரமான கட்டுரைகள் bbc.co.uk தளத்தின் அறிவியல் பகுதியில் வெளியாகியுள்ளன.

*****


அறிவியல் பற்றிப் பேசித் தொடங்கினோம். ஆனால் இந்த இதழில் வரலாற்று நாவலாசிரியர் விக்கிரமன், தமிழ் வரலாற்று ஆய்வாளர் மு.இராகவையங்கார் என்பவர்களோடு அணிவகுத்து நிற்பவர் டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி அவர்கள். தொல்பொருள் ஆராய்ச்சியில் பல புதிய வரலாற்றுச் சான்றுகளைக் கண்டெடுத்த இவர் கோவில்களை மீட்டெடுத்துப் பழமை மாறாது புதுப்பிப்பதிலும் பெரும்பணி ஆற்றி வருகிறார். வெகுநேர்த்தியான தமிழில், இணக்கமாகக் கதை சொல்லி நம்மை வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற அ. முத்துலிங்கம் அவர்களோடான நேர்காணல் அவரெழுதும் கதைகளுக்குச் சற்றும் சுவை குன்றியதல்ல. தென்றல் கவிதைகள் புதிய படைப்பாளிகளின் பங்களிப்பால் பரிமளிக்கத் தொடங்கியுள்ளது. எப்போதுமான சுவாரசியத்துடன் கதைகள், கட்டுரைகள், இலக்கிய அளவளாவல் என்று தென்றல் உருவெடுத்து உங்கள் முன் நிற்கிறது.

ஆசிரியர் குழு

பிப்ரவரி 2013

© TamilOnline.com