தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-19)
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களைச் சூர்யா ஆராயத் தொடங்கினார். பலமுறை முயன்று, பழுதுகள் தாறுமாறாக அல்லாமல், ஒரு வினோத வரிசையில் வருவதாகக் காண்பித்து, யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்று சூர்யா நீரூபித்தார். உப்பகற்றல் நுட்ப நிபுணர்களான மேரி, பீட்டர், பால் மூவரையும் விசாரித்து அவர்களுக்குச் சொந்த வாழ்வில் நிதிப்பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தார். மேற்கொண்டு பார்க்கலாம்.‍...

*****


மேரி, பீட்டர், பால், மூவருமே தங்கள் சொந்த நிதிப் பிரச்சனைகளால் அக்வாமரீனின் உப்பகற்றல் சாதனத்தைப் பழுதாக்கி அதனால் லாபமடைவதாகச் சூர்யா குற்றம் சாட்டுவதாகக் குமுறிவிட்டு வெளியேறவே தாமஸ் சூர்யாவிடம் மனத்தாபம் கொண்டார். "என்ன சூர்யா இது, இந்த மாதிரி நீசமான காரியம் என் நிபுணர்கள் செய்வதாகக் கோடி காட்டறீங்க? எனக்குத் துளிக்கூட பிடிக்கலை. இதை நிறுத்துங்க. இல்லைன்னா அப்புறம் என் நிபுணர்களை நான் இழக்க வேண்டி வரும். இப்பக்கூட அவங்க கோவிச்சுக்கிட்டுப் போற தோரணையைப் பார்த்தா அப்படியே வெளியேறிடுவாங்களோன்னு கவலையா இருக்கு."

சூர்யா தலைவணங்கி ஏற்றுக் கொண்டார். "ஸாரி தாமஸ், அவங்க எப்படி ரியாக்ட் செய்யறாங்கன்னு கவனிக்கத்தான் அப்படிச் செஞ்சேன். ஆனா உடனடியா குற்ற உணர்வு அவங்களில யாருமே காட்டலை. அவங்க இந்தப் பிரச்சனையில் ஈடுபடலைன்னு நிச்சயமா நிரூபணம் ஆயிட்டா நானே மன்னிப்புக் கேட்கறேன். ஆனா அதுவரைக்கும் நாம யாரெல்லாம் ஈடுபட்டிருக்க முடியும்னு ஒரு பட்டியல் சேர்த்துத்தான் ஆகணும். இல்லைன்னா நிவாரணத்தை நோக்கி நாம முன்னால போகவே முடியாது. இப்ப இந்த நாலாவது நிபுணர் ஜென்னாவைக் கூப்பிடுங்க."

தாமஸ் சங்கடம் தணியாமல் ஒருங்கிணைத்தல் நிபுணர் ஜென்னா வாட்ஸனை அழைத்தார்.

ஜென்னா சிக்கென்று இளம் அழகுதேவதையாகத் தோற்றமளித்தாள். கிரணின் வாலிபமனம் படபடவென துடித்தது. அவனது முகபாவத்தைக் கண்ட யாவ்னாவின் மனம் காரணமின்றிப் பொறாமை கொண்டது. யாவ்னா தனக்குள்ளே கடிந்து கொண்டாள். "சே, இந்தக் கிரண் எனக்கு யார்? ஒரு சம்பந்தமுமில்லை. அவன் எவளையோ ஜொள்ளுப் பார்வைப் பார்த்தால் எனக்கென்ன?" இருந்தாலும் கிரண்மேல் தனக்கு ஒரு கவர்ச்சி இருப்பதை உணர்ந்து கிளுகிளுத்துக் கொண்டாள்!

சூர்யா தன் யூகவேட்டு ஒன்றை வீசி வழக்கமான விசாரணையில் இறங்கினார். "வாங்க ஜென்னா. உக்காருங்க. அறிவியல் துறை நிபுணரா மட்டுமில்லாம வயலின் வாசிக்கறதுலயும் கச்சேரி கொடுக்கற அளவுக்கு உயர்ந்திருக்கற உங்களைப் பாராட்டறேன்!"

ஜென்னா தாமஸைக் கடிந்து கொண்டாள், "தாமஸ், இவர்கிட்ட என்னைப்பத்தி ரொம்பக் கதை அளந்திருக்கீங்க போலிருக்கே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சூர்யா. ஏதோ ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான்."

தாமஸ் சிரித்தபடி மறுத்தார். "இல்லை ஜென்னா, நான் உன் வயலின் திறமைபத்தி இவர்கிட்ட ஒண்ணுமே சொல்லலை. அவரே யூகிச்சிருக்கார். எப்படி கணிச்சீங்க சூர்யா? உங்க திறமையைப் பல தடவை பார்த்த எனக்கும் ஒரே வியப்பா இருக்கு!"

சூர்யா முறுவலித்தார். "இது ஒண்ணுமேயில்லை. உங்க கழுத்துல வயலின் பதிஞ்ச இடமும், அதன் வில்லை நீங்க பிடிக்கற விரல்களுமே காட்டிக் கொடுத்துடுச்சு. கச்சேரி விஷயம் இன்னும் சுலபம். தெரிய வேணாம்னு நீங்க நெனச்சீங்கன்னா இப்படி வெளிப்படையா உங்க கைப்பையில அழைப்பிதழ்களை செருகி வச்சிருக்க வேண்டாமே!"

ஜென்னா அழகாக கலகலவெனச் சிரித்தாள். அவள் தலை சாய்த்துக்கொண்டு சிரித்த தோரணையில் கிரண் சொக்கினான். அதைப் பார்த்து யாவ்னா மீண்டும் முறைத்தாள். இந்தக் குறுநாடகத்தைக் கண்ட ஷாலினி முறுவலுடன் விரலைச் சொடுக்கக் கிரண் சுதாரித்துக் கொண்டான்.

சூர்யா விசாரணையைத் துரிதமாகத் தொடர்ந்தார். "ஜென்னா, இந்த அக்வாமரீன் நுட்ப நிபுணர்கள் மேரி, பீட்டர், பால் மூவருமே தத்தமது உப்பகற்றல் நுட்பங்கள் அவங்கவங்க ஆராய்ச்சிக் கூடத்துல நல்லாவே பழுதில்லாம வேலை செய்யறதா சொல்லிட்டாங்க. அப்படின்னா பழுது வரத்துக்கு மொத்த சாதனத்தின் அமைப்புத்தான் காரணமாயிருக்கணும் இல்லையா? அதுக்கு நீங்கதானே பொறுப்பாயிருக்கீங்க, ?"

ஜென்னாவோ சோகம் இழையோட முறுவலித்தாள். "சூர்யா, மொத்த சாதனம் சேர்ந்து வேலை செய்யறது என்னோட பொறுப்புதான். அதுனால தனி நுட்பங்களில பழுதில்லைன்னா இந்தப் பிரச்சனைக்கும் நான்தான் பொறுப்பாளின்னு சுட்டிக் காட்டறீங்க, அப்படித்தானே? புரியுது. ஆனா நானும் எப்படி எப்படியோ அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டேன். பழுதுகள் எப்படி வருதுன்னு புரியவே இல்லை. நான் தாமஸோட பல வருஷ காலமா துணைத்தலைவரா இருக்கேன். நீங்க தாமஸையே வேணும்னா கேட்டுப் பாருங்க. அவரும் அக்வாமரீனும் வெற்றியடையணும்னு எவ்வளவு வெறித்தனமா வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன்னு அவரே சொல்வார்."

ஜென்னா ஒரு கணம் தன் உரையை நிறுத்தி விட்டு, மார்பு விம்ம (ஆமாம், கிரண் கிறங்க!) மூச்செடுத்துக் கொண்டு அறையில் இருந்த மற்றவர்களைத் தீர்க்கமாகப் பார்த்தாள். தாமஸ் தலையாட்டி அவள் கூறியதை ஆமோதித்தார். "நிச்சயமா ஜென்னா. இந்தச் சாதனம் வெற்றி அடைய நீ எவ்வளவு முயற்சி செய்யறேன்னு எல்லாருக்குமே தெரியும். நான்கூட சூர்யாகிட்ட ரொம்ப சொல்லியிருக்கேன். சந்தேகமேயில்லை."

ஜென்னா உணர்ச்சிப் பிழம்பாகத் தொடர்ந்தாள். "ஆனா இப்ப என்னன்னா, என் முயற்சியெல்லாம் வீணாகிற நிலைமையில இருக்கு. இந்த நுட்பங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து ஒரு மொத்த சாதனமா இயங்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. தீவிர முயற்சிக்கப்புறம்தான் பல நிபுணர்களால சாதிக்க முடியாத அந்த ஒருங்கிணைப்பை என்னால சாதிக்க முடிஞ்சுது. கொஞ்சநாள் முன்னாடிவரை கூட அது ஒழுங்காத்தான் வேலை செஞ்சுது. ஆனா சமீப காலமாத்தான் திடீர்னு என்னவோ...." என்று திக்கித்திணறி நிறுத்திய ஜென்னா சூர்யாவிடம் நெருங்கி அவர் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

"நான் ஒருங்கிணைத்த சாதனம் ஒழுங்கா வேலை செய்யலைங்கறது எனக்கு மிகமிக மனக் கஷ்டமா இருக்கு. நான் அக்வாமரீன் குழுவினர் அனைவரின் தோல்விக்கும் காரணமாயிடுவேனோன்னு ரொம்பக் கவலையாயிருக்கு. சூர்யா, தாமஸ் உங்க யூகத்திறன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார்னு புரியுது. அவர் நம்பினார்னா, எனக்கும் அதே நம்பிக்கைதான். அவ்வளவு ஏன், இப்பக்கூட என் வயலின் திறனை ரெண்டு நொடிக்குள்ள யூகிச்சு அதை நிரூபிச்சிட்டீங்க. ப்ளீஸ் சூர்யா. இந்தப் பிரச்சனைக்குக் காரணமான கயவர்களைக் கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சு நிவர்த்தியுங்க. என் வெகுநாள் முயற்சிக்கு ஒரு விடிவுகாலம் வரட்டும்." என்று புலம்பினாள்.

சூர்யா அவளைத் தேற்றினார். "நீங்க எனக்கு உதவினா கண்டு பிடிச்சிடலாம் ஜென்னா. இந்த மூணு நிபுணர்களையும் விசாரிச்சதுல அவங்களுக்கு நிதிப் பிரச்சனை இருக்குன்னு தெரியுது. இதுவரைக்கும் அவங்க அக்கவுண்ட்டுல ஏதும் நிதி வரலைன்னும் தெரியுது. ஆனா பிரச்சனை உண்டாக்கறத்துக்காகக் கிடைச்ச லஞ்சப் பணத்தை வேற இடத்துல போட்டுவச்சு இன்னும் பிரச்சனை தீராதமாதிரி காட்டக்கூடும். பழுது ஏற்படுத்தற திறமையும் அவங்களுக்கு இருக்கு. அவங்க மூணு பேரில ஒருத்தர் இதுக்குக் காரணமாயிருக்கலாமோன்னு தோணுது. அவங்களோட ரொம்ப நெருங்கி இயங்கியது நீங்கதான். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"

தாமஸும், ஜேம்ஸும் கோபமாக எதோ சொல்வதற்குள் ஜென்னாவே சினத்துடன் முந்திக்கொண்டாள். "சே! என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. முதல்ல அந்த எண்ணத்தை விசிறிக் கடாசிடுங்க. அவங்க மூணு பேரும் ரத்தினங்கள். அக்வாமரீனின் தூண்கள். அவங்க மேல பழி சொல்லச் சொல்றீங்களா? அப்படி இருக்கவே முடியாது. இது எதோ வெளியாட்கள் வேலையாத்தான் இருக்கணும்..." என்று சீற்றமாக ஆரம்பித்தவள் எதோ ஒன்று உள்மனத்தில் நெருடவும் மெள்ள நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு தலையைப் பலமாக உதறிவிட்டு, "ஆமாம், அப்படி இருக்க முடியாதுதான்," என்றாள்.

ஆனால் அவள் இரண்டாம் முறை மறுத்தது முதல்முறையை விடச் சீற்றம் மிகவும் குறைந்துவிட்டது சூர்யாவுக்குத் தெளிவாகத் தெரியவே, அவளைஊக்குவித்தார். "அவங்ககிட்ட உங்களுக்கிருக்கற விசுவாசமும் மரியாதையும் புரியுது ஜென்னா. அது மிகவும் மதிப்புக்குரியது. ஆனாலும் எதோ ஒரு விஷயம் சரியாயில்லைன்னு தோணுது போலிருக்கு. யார் மேலயும் குற்றம் சாட்டாம வெறுமனே நடந்ததை மட்டும் கச்சிதமா சொல்லிடலாமே? இந்தப் பிரச்சனை நிவர்த்திக்க நீங்க கவனிச்சது எதுவாயிருந்தாலும், எவ்வளவு சின்னதாயிருந்தாலும் சொல்றது முக்கியம். சொல்லுங்க."

அதைக் கேட்ட தாமஸும், "அது சரிதான் ஜென்னா. எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. அக்வாமரீனின் நன்மைக்காக சொல்லிடு" என்றார்.

ஜென்னா மிக்க தயக்கத்துடன் தன் உள்மனத்தில் நெருடிய விஷயத்தைச் சொன்னாள், "அது... வந்து... ஒண்ணுமில்லன்னுதான் நினைக்கறேன். ஆனா சில சமயம் அவங்க மூணு பேரும் ஒவ்வொருத்தரும் தனித்தனியா எங்கிட்ட தங்கள் நுட்பந்தான் பெரிசு, மத்த ரெண்டும் சும்மா பேருக்குத்தான், அதை நிரூபிச்சுக் காட்டறேன் பாருன்னு சவால் விடுவாங்க. அது அவங்கவங்க நுட்பத்துமேல இருக்கற பெருமைதான்னு நெனச்சு நான் தாமஸ், ஜேம்ஸ்கிட்ட ஒண்ணும் சொல்லல்லை, பெரிசா பிரச்சனை கிளப்பறா மாதிரியெல்லாம் அப்ப தோணலை. ஆனா நீங்க இப்போ சொல்றதெல்லாம் வச்சுப் பாக்கறப்ப... ஹூம், அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது, விட்டுத் தள்ளுங்க."

அவள் அறையை விட்டுச் சென்றதும் சூர்யா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். அவரை இடைமறித்து எதோ கேட்கப் போன தாமஸையும் ஜேம்ஸையும் கிரண் தடுத்துவிட்டான். "அவர் இந்த மாதிரி யோசிச்சா மிக முக்கிய தருணம், டிஸ்டர்ப் பண்ணக் கூடாது."

சூர்யா திடீரென தாமஸ் அருகில் வரும்போது நின்று சுழன்று அவரைப் பளிச்சிடும் கண்ணோடு நோக்கிப் படபடத்தார். "தாமஸ்! நான் ரொம்ப முட்டாள்தனமா இருந்துட்டேன். இந்தப் பிரச்சனையின் விளக்கம் நமக்கு அப்பட்டமாத் தெரியறா மாதிரிதான் இருக்கு. நாம்தான் தடயங்களைச் சரியாக் கோத்து கணிக்கலை."

தாமஸ், ஜேம்ஸ், யாவ்னா மூவரும் பரபரப்போடு, "என்ன சூர்யா, என்ன அது, விளக்கமாச் சொல்லுங்க. பிரச்சனைக்கு விடை கிடைச்சாச்சுன்னா... அப்பப்பா! பிரமாதந்தான்!" என்றனர்.

ஆனால் சூர்யா உடனே விளக்கவில்லை. தலையசைத்து விட்டு, "இதுக்குச் சரியா முடிச்சவிழ்க்கணும்னா சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஒரே சமயத்துல சேர்த்துப் பேசினாத்தான் முடியும். அவங்க நாலு பேரையும் நம்மோடு சேர்த்து இந்தக் கூடத்துலயே பேசலாம் கூப்பிடுங்க" என்று கூறிவிட்டு, மீண்டும் குறுக்கும் நெடுக்கும் யோசனை நடையில் ஆழ்ந்தார்.

தாமஸ் தாங்க முடியாத பரபரப்புடன் நான்கு நிபுணர்களையுன் அழைத்து மேஜையைச் சுற்றி அமரச் செய்துவிட்டு, "சரி சூர்யா, இப்ப ஆரம்பியுங்க" என்றார்.

சூர்யா அடுத்துச் செயதது எல்லோரையும் திகைக்க வைத்தது; ஆனால், தூய சக்தியின் தவிப்புக்கு நிவாரணம் அளித்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com