கேபிள் போர்கள்
தனியார் தொலைக்காட்சிச் சானல்கள் வினியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எஸ்.சி.வி., ஹாத்வே போன்ற எம்.எஸ்.ஓ. (Multi System Operators) நிறுவனங்களின் சேவைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிற வகையில் மசோதா ஒன்றைச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க அரசு தாக்கல் செய்தது.

தமிழகத்தில் எஸ்.சி.வி. ஹாத்வே போன்ற நிறுவனங்கள் பல்வேறு கேபிள் சானல் களின் சமிக்ஞைகளைப் பெற்று ஒரே கேபிளில், கேபிள் டிவி இயக்குவோருக்கு வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தனியார் சேனல்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதற் காக தூர்தர்ஷன் மற்றும் இதர போட்டி சேனல்களின் முக்கியத்துவம் குறைக்கப் படுவதாகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து அரசே இதனை ஏற்று நடத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சன் டிவி குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.சி.வி. இதனைப் பழிவாங்கும் முயற்சி என்று வர்ணித்துள்ளது. ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பலர் எம்.எஸ்.ஓ. நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில் குறிப்பிட்ட இரண்டு எம்.எஸ்.ஓ. நிறுவனங்களை மட்டும் அரசு ஏற்று நடத்த முயற்சிப்பது பழிவாங்கும் நடவடிக்கையே என்று அந்நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

இதுதொடர்பாக தமிழக ஆளுநரைத் தி.மு.க தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் சந்தித்து இச்சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

'செட் டாப் பாக்ஸ்' முறை மற்ற எல்லாப் பெருநகரங்களிலும் விலக்கிக் கொள்ளப்பட, சென்னையில் மட்டும் இதை விலக்காத தனால் பொதுமக்களுக்குப் பல முக்கியச் சானல்கள் கிடைக்காதது, பெரும்பான்மை இணைப்புகள் எஸ்.சி.வி.யின் கையில் இருப்பதனாலேயே என்னும் அபிப்பிராயம் பொதுமக்களிடையே வலுத்து வருகிறது. தவிர தமக்குச் சாதகமல்லாத செய்திகளைப் பரப்பும் சேனல்களை இருட்டடிப்புச் செய்வதும், சாதகமானவற்றை மிகையாகத் திருப்பித் திருப்பி ஒலிபரப்புவதும் கட்சி சார்ந்த சேனல்களுக்கு வழக்கமாகி வருவதையும் மக்கள் கவனிக்காமல் இல்லை. செய்தி ஊடகங்கள் ஒரே குடும்பத்தின் கையில் குவிவதனால் பார்ப்போரை மூளைச்சலவை செய்யும் அபாயங்களும் உண்டு.

அதிலும் தேர்தல் காலத்தில் இதனைச் செய்யுமுன் இந்தக் கோணங்களை ஆராயாமல் செய்திருக்காது அ.தி.மு.க. அரசு என்று பலர் கருதுகிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com