பாலாற்றின் குறுக்கேயும் அணை?
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே 2 டி.எம்.சி நீரைத் தேக்குவதற்காக ஆந்திர அரசு அணை ஒன்றைக் கட்ட இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு வரிசையில் பாலாறும் தமிழகத்திற்குக் கானல் நீராகி விடுமோ என்ற அச்சத்தை இது தோற்றுவித்திருக்கிறது.

ஏற்கெனவே காவிரி விஷயத்தில் கர்நாடகம் கடைப்பிடிக்கும் பிடிவாதத்தால் தஞ்சை டெல்டா பகுதிகள் பெரும் வறட்சியினைச் சந்திக்கின்றன. இது தொடர்பாகத் தமிழகம் உச்சநீதிமன்றம்வரை சென்றும் பயனில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்துகிறது கர்நாடக அரசு. கர்நாடகாவைப் போல் கேரளாவும் முல்லைப்பெரியாறு விஷயத்தில் தமிழகத்துடன் மோதிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்ததும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் குரல் கொடுக்க ஆரம்பித்தன.

முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். வடதமிழ்நாட்டில் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, ஆந்திர அரசின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்தது. போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர், ஆந்திர அரசிடமிருந்து தான் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தவிதமான பதிலுக்கும் வரவில்லை என்றும் பாலாற்றின் குறுகே ஆந்திர அரசு அணை கட்டுவதற்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகத் தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.

மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் தம் தோழமைக் கட்சியுடன் பேசி அணைகட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கெனவே காவிரி விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தயங்குவதுபோல் பாலாற்று விஷயத்திலும் மெளனத்தைக் கடைப்பிடித்தால் தேசியம், தேசிய ஒருமைப்பாடு என்ற சொற்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்றே மக்கள் கருதுவதில் தவறில்லையே!

கேடிஸ்ரீ

© TamilOnline.com