நீரிழிவு நோய் பற்றி சில தகவல்கள்
நீரிழிவு நோய் எத்தனை முறை எழுதினாலும் அலுக்காத ஒரு நோய். கடந்த பல மாதங்களாக இந்த நோய் பற்றி நாம் அலசாத காரணத்தால் இந்த முறை சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கன் நீரிழிவு சங்கம் (American Diabetes Association- ADA) நீரிழிவு நோய் உடையவர்களுக்காக வழங்கியுள்ள அறிக்கைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

யாருக்கு பரிசோதனை?

நீரிழிவு நோய் இருக்கிறதா என்று யாருக்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று ADA அறிவுறுத்துகிறது?

1. 45 வயதுக்கு மேற்பட்டோ ர்
2. குடும்ப வரலாறு உடையோர்
3. பருத்த உடல் வாகு உடையோர்
4. அதிக தாகம், அதிக சிறுநீர் போக்கு, அதிக பசி போன்ற அறிகுறிகள் உடையோர்

என்ன பரிசோதனை?

காலை நேரத்தில், எட்டு மணி நேர விரதத்திற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிக்கப்பட வேண்டும். இரண்டு முறை இந்த அளவு 126க்கு மேல் இருக்குமானால் நீரிழிவு நோய் இருப்பதாக கொள்ளவேண்டும்.

மேற்கூறிய அறிகுறிகள் உடையோர், சாதாரண (random) நிலையில் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, அளவு 200க்கு மேல் இருந்தாலும், நீரிழிவு நோய் இருப்பதாக அர்த்தம்.

அல்லது, extended GTT என்று சொல்லப் படும் பரிசோதனை, 75gm சர்க்கரை உண்ணப்பட்டு, ஏதேனும் 2 அளவுகள் 200க்கு மேல் இருப்பினும் நீரிழிவு நோய் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இவை தவிர fasting அளவு 105 முதல் 125 வரை இருக்குமெனில் நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் இருப்பதால் 'Impaired Blood Glucose' என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோய் கண்டு பிடிக்கப் பட்டால் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?

1. இரத்த அழுத்தம்- ஒவ்வொரு மருத்துவ வருகையிலும்
2. Fasting கொழுப்பு அளவு- ஆண்டு தோறும்
3. Hb A1C- 3-4 மாதங்களுக்கு ஒரு முறை
4. சிறுநீர் புரத அளவு- ஆண்டு தோறும்
5. கண் மருத்தவரின் பரிசோதனை- ஆண்டு தோறும்
6. கால்கள் கண்காணிப்பு- ஒவ்வொரு மருத்துவ வருகையிலும்

இரத்த அழுத்தம்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த அழுத்தம் 125/70 அல்லது அதற்கு குறைவாக இருத்தல் அவசியம். ஒவ்வொரு மருத்துவ வருகையிலும் இது சரி பார்க்கப்பட வேண்டும். அதிகமாக இருந்தால் மருந்துகள் அளிக்கப்பட வேண்டும், குறிப்பாக ACE Inhibitor அல்லது ARB என்று சொல்லப்படும் மருந்து வகை அளிக்கப்பட வேண்டும். இந்த வகை மருந்துகளின் உதாரணப்பெயர்கள்: Lisinopril, Enalapril, Ramipril, Diovan, Cozaar போன்றவை.

கொழுப்பு நிலவரம்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலத்தில் நீரிழுவு நோய் இருந்தாலே இருதய நோய் இருப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. ஆகவே இவர்களுக்கு 'LDL' என்று சொல்லப்படும் அபாய கொழுப்பு 100 அல்லது 70 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று ADA மற்றும் NCEP என்று சொல்லப்படும் கொழுப்பு சத்து குறைக்க ஏற்படுத்த பட்டுள்ள நிறுவனங்கள் அறிவுருகின்றன. நோயாளிகள் இந்த 'LDL' கொழுப்பு வகை பற்றி அறிந்திருக்க வேண்டும். மருத்துவர் களை குறிப்பாக 'LDL' அளவு என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூட்டு கொழுப்பு சரியான அளவில் இருந்தாலும் இந்த LDL அளவு அதிகமாக இருந்தால் அதனால் மாரடைப்பு நோய் ஏற்படலாம். இந்த LDL அளவை குறைக்க 'statin' என்று சொல்லப்படும் மருந்து வகைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. Lipitor, Zocor, Pravachol என்று பல தரப்பட்ட மருந்துகள் இந்த வகையைச் சார்ந்தன. சமீப காலத்தில் 'zetia' என்று சொல்லப்படும் மருந்து வகையும் உபயோகிக்கப் படுகின்றன.

Triglycerides என்று சொல்லப்படும் கொழுப்பும் நீரிழிவு நோய் உடையவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. இந்த வகை கொழுப்பு நீரிழிவு நோய் கட்டுக்குள் கொண்டு வந்தாலே குறைந்து விடும். அதையும் மீறி அதிகமாக இருக்குமேயானால் அதற்கான மருந்து தேவைப்படலாம்.

நீரிழிவு நோய் கட்டுப்பாடு

Hb A1C அளவு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும். அது 6-7 க்குள் இருப்பது உசிதம். இந்த அளவு இரத்தத்தின் சர்க்கரை அளவின் சராசரியைக் குறிக்கும். வாரம் இரண்டு முறையாவது இரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். வெறும் வயிற்றில் இது 80-120 வரை இருக்க வேண்டும். ஒரு நாளின் பல் வேறு சமயங்களில் இந்த அளவை பரிசோதிப்பதின் மூலம் நாள் தோறும் சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது என்று கண்காணிக்க இயலும். இந்த அட்டவணையை மருத்துவரைப் பார்க்க செல்லும் போது எடுத்து செல்லுவது நல்லது.

புரத அளவு

ஆண்டுதோறும் சிறு நீரின் புரத அளவை கண்காணிக்க வேண்டும். நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு புரதம் சிறுநீரில் கழிக்கப்படுவதில்லை. 'Microalbuminuria' என்று சொல்லப்படும் குறைந்த அளவு புரதம் சிறுநீரில் காணப்பட்டால், 'ACE Inhibitor' என்று சொல்லப்படும் மருந்து வகைகளை உட்கொள்வதின் மூலம் புரதம் கழிப்ப்ழ்தைக் குறைக்கலாம். மேலும் அதிக அளவில் புரதம் காணப்படுமானால், (Protenuria) சிறுநீரக நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.

கண் பரிசோதனை

இதைத் தவிர ஆண்டு தோறும் 'Retinal specialist' மூலம், கண்களின் பின்புறம் உள்ள திரையைப் பரிசோதிக்க வேண்டும். 'Retinopathy' என்று சொல்லப்படும் தாக்கலை, தக்க தருணத்தில் கண்டு பிடித்து, சிகிச்சை அளித்தால், கண் பார்வை இழக்காமல் தவிர்க்கலாம். இதனால், கண் பார்வை நன்றாக இருந்தாலும் கூட, ஆண்டு தோறும் கண் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

நரம்புகள் பரிசோதனை

கால்களில் நரம்புகளின் வேலையையும், நகம் மற்றும் பித்த வெடிப்பு போன்றவற்றையும், ஒவ்வொரு வருகையிலும் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிகள் குறைவதால், ஏற்படும் புண்களுக்கு, தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எப்போதும் பாதணி அணிந்து கொள்வது அவசியம்.

மேற்கூறிய அறிவுரைகள் நீரிழிவு நோய் உடைய அனைவருக்கும் பொருந்தும். இதைத் தவிர குறிப்பாக சிலருக்கு ஆலோசனைகள் வேறுபடலாம். ஆகையால், முதன்மை மருத்துவரை குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசிப்பது நல்லது. நீரிழிவு நோய் உடையவர்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். மற்றொன்று கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள். மருந்துகள், ஊசிகல் போடுவதால் மட்டும் பின் விளைவுகளைத் தவிர்க்க முடியாது. கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே பின் விளைவுகளைத் தவிர்க்கலாம். வயது ஆக, ஆக நோயின் தன்மையும், தீவிரமும் மாறக்கூடியது. இதனால் மருத்துவரை அவ்வப்போது ஆலோசிப்பது உசிதம்.

மேலும் விவரங்களுக்கு http://www.diabetes.org வலைதளத்தை அணுகவும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com