டிசம்பர் 2012: வாசகர் கடிதம்
நவம்பர் இதழ் வழக்கம்போல நன்றாக இருந்தது. 'பாப்பாக்கு ஸ்கூல்' சிறுகதை யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. 'அன்புள்ள சிநேகிதி'யில் கூறியிருந்தபடி கடுமையான சொற்களைப் பொறுத்துக்கொள்வதும் கடினம்தான். ஆனால் அவற்றை வெறும் காற்றின் அதிர்வுகளாக எண்ணினால் உறவு நீடிக்கும் என்ற அறிவுரை மிக நல்லது. 'வள்ளல் அழகப்பர்' கட்டுரை அவர் எவ்வளவு பெரிய கொடையாளி என்பதை நல்ல முறையில் சித்திரித்தது. அவர் மறைந்த தினத்தன்று ஒரு சிறுவனாக நான் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியதை நினைத்துக் கண்ணில் நீர் தளும்பியது.

ஆர். கண்ணன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

*****


தென்றல் இதழ் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இதழ்களைவிட மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டும், தமிழ்நாடு நூலகத் துறை மூலம் அனைத்து நூலகங்களிலும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏன், இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நூலகங்களிலும் தென்றல் கிடைத்தால் நல்லது.

நீங்கள் தலையங்கத்தில் எழுதியிருந்ததுபோல் ஒபாமா மீண்டும் வெள்ளை மாளிகையில். அழகிய பெரியவன் கதை சிறப்பாக இருந்தது. ஹரீஷ் ராகவேந்திரா, வீ.கே.டி.பாலன், ராதா சுப்ரமணிடன் நேர்காணல்கள் சிறப்பு. நேர்காணலில் 'பசியின் ருசி' படித்ததும், “தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்” என்ற வள்ளுவரின் குறள் ஞாபகத்திற்கு வந்தது. பழமைபேசி, தேவி அண்ணாமலையின் கவிதைகள் உள்ளத்தைத் தொட்டன. வள்ளல் அழகப்பர் கட்டுரை சிறப்பு. ஆனந்த் பாண்டியன் எழுதிய 'மிச்சம் மீதி' நூலைப்பற்றி மதுரபாரதி எழுதிய விமர்சனம் சிறப்பாக இருந்தது. வீ.கே.டி. பாலன் பற்றி வரும் அதே இதழில், ஐயா எம்.பி. மாரியப்பன் பற்றியும் வருவது சாலப் பொருத்தமே. சிறுகதைகள் அனைத்தும் நன்றாக இருந்தன. சிறுவர்கள் எழுதும் சிறுகதைகளையும் வெளியிடலாம். டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரனின் தீர்வு வழக்கம்போல் சிறப்பு. பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தென்றல்' இதழுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

லிபியா ராமானுஜம்,
கேன்டன், மிச்சிகன்

*****


நவம்பர் 2012 இதழில் ராதா சுப்ரமணியன் உரையாடலில் 5வது கேள்வி-பதில் இருமுறை பதிப்பாகி உள்ளதே. வாசகர்கள் விழிப்போடு இருக்கிறார்களா என்று சோதனை ஓட்டமா? அல்லது அச்சுப் பிழையா? 'வள்ளல் அழகப்பர்' கட்டுரை சரியான நேரத்தில் சரியான மனிதர் குறித்து சரியான இதழான தென்றலில் சரியாகச் சொல்லியிருப்பதைக் கண்டேன்.

தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சாஸ்

© TamilOnline.com