தெரியுமா?: இளம் வீரனுக்கு விருது
2006ம் வருடம் 10ம் தேதி டிசம்பர் மாதம். ரொறொன்ரோ நகரம் ஆழ்குளிரில் மூழ்கியிருந்தது. உறைநிலையில் கிடந்த குளம் ஒன்றில் தவறுதலாகக் கால்பதித்து இறங்கிய சிறுவன் ஒருவன் அப்படியே அதில் மூழ்கினான். அதைக் கண்டான் 11 வயதுச் சிறுவன் பிருந்தன் முரளிதரன். நண்பனைக் காப்பாற்றுவதற்காக உறைகுளத்தில் தானும் குதித்து இறந்தான் அந்தச் சிறுவன்!

பிருந்தனைக் கனடிய செய்திதாள்கள் 'இளம்வீரன்' என வர்ணித்தன. இவன் ஞாபகமாகப் பூங்கா ஒன்றுக்கு ரொறொன்ரோ மாநகரசபை 'பிருந்தன் பூங்கா' எனப் பெயர் சூட்டியது. பிருந்தனின் அர்ப்பணிப்பான வாழ்வையும், வீரதீரத்தையும் நினைவில் நிறுத்தும் விதமாகக் கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்ஸன் தனது ஒட்டாவா ரிடோ இல்லத்தில் இந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று 'மறைவுக்குப் பின்னான' விருதை வழங்கிக் கௌரவித்தார்.

அன்று விருதுபெற்ற 40 பேர்களில் முதல் விருது பிருந்தனுக்கு வழங்கப்பட்டது. பிருந்தனின் சார்பாக இந்த விருதினை இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுடைய பெற்றோர் நடராஜா முரளிதரனும், சத்தியசிறியும் பெற்றுக்கொண்டனர். இளம்வீரன் பிருந்தன் மக்கள் மனதில் என்றும் நிறைந்திருப்பார்.

அ.முத்துலிங்கம்,
ரொறொன்ரோ, கனடா

© TamilOnline.com