தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நன்கொடைகள்
தென்றலின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை தமிழ் மொழிக் கல்வி, கலாசாரம் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நிறுவப்பட்டது (பார்க்க: http://www.tamilonline.com/tolfoundation/index.html)

2012ம் ஆண்டில் கீழ்க்கண்டவற்றுக்கு இந்த அறக்கட்டளை உதவியுள்ளது:
பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தென்னாசியக் கல்வித் துறையில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்-கௌசல்யா ஹார்ட் ஆகியோரின் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொண்ட மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் நிதி வழங்கி உதவியது. இந்த ஆண்டு அந்தத் தொகை தமிழ்ப்பீட நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2012
கனடாவில் நடந்து வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்புக்கு மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நிதியுதவி செய்துள்ளது. ஆண்டுதோறும் வெவ்வேறு துறைகளில் சாதனை செய்யும் தமிழர்களை இந்த அமைப்பு கௌரவித்து வருகிறது. வெங்கட் சாமிநாதன், பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் கௌரவிக்கப்பட்டோர் பட்டியலில் அடங்குவர்.

ஜூன் 2012
கலிஃபோர்னியா பல்கலையில் (டேவிஸ்) பேரா. அர்ச்சனா வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொண்டுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அவர்கள் இந்தியாவுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள இது துணைபுரிந்தது.

அண்மையில், நிறுவனம் சாராத தயாரிப்பாளரின் படங்கள் மற்றும் குறும்படங்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ‘தர்டு ஐ’ (3rd i) என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி செய்துள்ளது. இந்த அமைப்பு சான் ஃபிரான்சிஸ்கோவிலும் பிற இடங்களிலும் திரைப்பட விழாக்களை நடத்துகிறது. சில படங்கள் விரிகுடாப் பகுதியின் சிலிக்கான் வேல்லியிலும் திரையிடப்பட்டன. இவற்றில் தமிழ்த் திரைப்படங்களும் அடங்கும்.

அறக்கட்டளை
திருவாளர்கள் சி.கே. வெங்கட்ராமன் (பதிப்பாளர், தென்றல்), பிரபாகர் சுந்தர் ராஜன், மதுரபாரதி (முதன்மை ஆசிரியர், தென்றல்) ஆகியோர் அறக்கட்டளையின் இயக்குனர்களாக இருந்து வழிநடத்தி வருகின்றனர். திரு. சந்திரா போடபட்டி அவர்கள் ஆலோசகராக இருந்து உதவுகிறார்.

நிதி ஆதாரம்
தமிழ் ஆன்லைன் அறக்கட்டளைக்கான நிதி, தென்றல் மாத இதழின் நிறுவனர்கள் மற்றும் வாசகர்கள் கொடுப்பதை ஆதாரமாகக் கொண்டுள்ளது. கடல் கடந்த தமிழுக்கும் தமிழருக்கும் உறவுப் பாலமாகவும், உரையாடல் களமாகவும், கலை கலாசார மேடையாகவும் எண்ணற்ற வகைகளில் 12 ஆண்டுகளாகச் சளைக்காமல் பங்காற்றி வரும் தென்றலின் சகோதர அறக்கட்டளைக்கு நீங்களும் வலுச்சேர்க்கலாம். விரும்பினால் நிதி வழங்கலாம். உங்கள் காசோலை/வரைவோலையை 'Tamilonline Foundation' என்ற பெயருக்கு எழுதி Thendral, 374 S. Mary Ave, Sunnyvale, CA 94086 என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இந்த நன்கொடை லாபநோக்கற்ற நிறுவனத்துக்கானது என்பதால் 501(c)(3) பிரிவின்கீழ் வருமான வரி விலக்குப் பெற்றதாகும்.

வாருங்கள்! கை சேருங்கள்! நம் சமுதாயத்தை, மொழியை, கலையை, கல்வியை உயர்த்தும் கட்டமைப்புகளைச் செழுமைப்படுத்துவோம்!

© TamilOnline.com