மந்திர ஜாடி
முனியன் உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பினான். வேலை எதுவும் செய்யாமல், மனித நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுக்குச் சென்று அலைந்து திரிந்தான். அந்தக் காட்டில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. மனிதர்கள் மீது மிகவும் இரக்க குணம் கொண்ட அது, முனியனுக்கு உதவ நினைத்தது.

முனியன் முன்னால் தோன்றி, "மனிதனே, நான் இந்தக் காட்டில் வாழும் வனதேவதை. உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள், தருகிறேன்" என்றது.

முனியனுக்கு தேவதையின் குரல் மட்டுமே கேட்டது. உருவம் தெரியவில்லை. பயந்துபோன அவன், "ஐயோ... நீ உண்மையிலேயே தேவதைதானா, இல்லை ஏதாவது பூதமா? எனக்கு பயமாக இருக்கிறது. உருவமில்லாத உன்னால் எனக்கு எப்படி உதவ முடியும்?" என்றான்.

"பயப்படாதே
. நான் மனிதர்களின் கண்களுக்குத் தெரியமாட்டேன். உனக்கு உதவி செய்யவே இங்கு வந்திருக்கிறேன். உனக்கு ஒரு மந்திர ஜாடியைப் பரிசாகத் தருகிறேன். அதற்குள் ஒரு நாணயத்தைப் போட்டு உன் விருப்பம் எதுவானாலும் வேண்டிக் கொள். உடனடியாக அது நிறைவேறும். ஆனால் நன்றாக நினைவு வைத்துக்கொள். இரண்டு முறை மட்டுமே நீ இந்த மந்திர ஜாடியைப் பயன்படுத்த முடியும். அதற்குமேல் அது உனக்குப் பயன் தராது" என்றது தேவதை. பின் ஒரு பெரிய ஜாடியை வரவழைத்து முனியனின் மடியில் போட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தது.

முனியனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதே சமயம் ‘உண்மையிலேயே வந்தது தேவதைதானா? இந்த ஜாடி வேலை செய்யுமா?’ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. உடனே தனது பையினுள் தேடி ஒரு நாணயத்தை எடுத்தவன், "தங்க, வைர நகைகளாலும், பொற்காசுகளாலும் இந்த ஜாடி நிரம்பட்டும்" என்று சொல்லியவாறே காசை ஜாடிக்குள் போட்டான். உடனே ஆச்சரியப்படும் விதத்தில் தங்க, வைர நகைகளாலும் பொற்காசுகளாலும் நிரம்பியது அந்த ஜாடி. அதைப் பார்த்த அவன் வாயடைத்துப் போனான். அவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டிக் கொண்டு, ஜாடியையும் ஒரு பைக்குள் போட்டு மறைத்துத் தன் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

திடீரென அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது, "ஐயையோ! இந்தக் காட்டு வழியில் அடிக்கடி திருடர்கள் வருவார்களே! அவர்கள் இந்தக் காசுகளையும் நகைகளையும், மந்திர ஜாடியையும் பறித்து கொண்டால் என்ன ஆவது?" என்று சிந்தித்தான். உடனே மூட்டையைப் பிரித்து ஜாடியை எடுத்தவன், அதற்குள் ஒரு நாணயத்தைப் போட்டு, "என்னிடமிருக்கும் நகைகளும், காசுகளும், இந்த மந்திர ஜாடியும் என் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். பிறர் யார் கண்களுக்குத் தெரியவே கூடாது!" என்று வேண்டிக் கொண்டான். பின் தன் வீட்டுக்குப் போனான்.

வீட்டிற்குச் சென்றதும் மனைவியை அழைத்தவன், தன் மூட்டைகளைப் பிரித்து, "இதோ பார் இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார். இனிமேல் இந்த ஊரில் நாம்தான் மிகப் பெரிய பணக்காரர்கள்" என்றான்.

அவன் மனைவியோ, "என்னங்க இது.. வெறும் மூட்டைதானே இருக்கிறது. வேறெதுவுமே இல்லையே!" என்றாள். ஆத்திரமுற்ற முனியன், "நன்றாக உற்றுப் பார். தங்க, வைர நகைகளும், பொற்காசுகளும், ஒரு ஜாடியும் தெரியவில்லை?" என்றான் எகத்தாளமாக.

"இல்லையே, வெறும் மூட்டைதான் என் கண்ணுக்குத் தெரிகிறது" என்றாள் மனைவி. அப்போதுதான் முனியனுக்கு, ‘என்னிடமிருக்கும் நகைகளும், காசுகளும் யார் கண்ணுக்கும் தெரியவே கூடாது’ என்று தான் கேட்ட இரண்டாவது வரத்தின் ஞாபகம் வந்தது. கூடவே, "இரண்டு முறை மட்டுமே இந்த மந்திர ஜாடி பயன்படும்" என்று எச்சரித்த தேவதையின் வரமும் நினைவிற்கு வந்தது.

"அடடா... என்னுடைய பேராசையாலும் முட்டாள்தனத்தாலும் மோசம் போனேனே!" என்று வருந்திய முனியன், "சரி, இனிமேலாவது உழைத்துப் பிழைப்போம்" என முடிவு செய்து வேலை தேடிக் கிளம்பினான்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com