திருச்செந்தூர் முருகன்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். திருநெல்வேலியிலிருந்து சாலை, ரயில் வழிகளில் செல்லலாம். குமரக் கடவுளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். ஓயாத கடல் அலைகளால் வருடப்படுவதால் இது 'அலைவாய்', 'திருச்சீரலைவாய்' என அழைக்கப்படுகிறது. "அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே" என திருமுருகாற்றுப்படையும், "சீர்கெழு செந்தில்" எனச் சிலம்பும், "வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" எனப் புறநானூறும், "சீரலைவாய் வருசேயைப் போற்றுவோம்" எனக் கந்த புராணமும், "செந்தமிழ் மணக்கும் திருச்செந்தில்" எனச் செந்தூர் பிள்ளைத் தமிழும் இத்தலத்தைப் புகழ்ந்துரைத்துள்ளன. அருணகிரிநாதர், நக்கீரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோர் செந்தூர் முருகனைப் பாடியுள்ளனர்.

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து வெற்றிமாலை சூடிய இத்தலம் திருச்செந்தூர், வெற்றிநகர், ஜயந்திபுரம், கந்தமாதன பர்வதம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. செந்திலூர் என்ற பெயரும் உண்டு. 'செந்து' என்றால் உயிர். 'இல்' என்றால் அடைக்கலமான இடம். அதாவது ஆன்மாக்கள் அடைக்கலமான இடம். உயிர்கள் அடைக்கலமான இடம். செந்திலூர் நாளடைவில் மருவி செந்தூர் ஆகி விட்டது. கடல் தன்னுள் பல உயிர்களைப் பாதுகாத்து அடைக்கலம் தருவது போல தன்னை நம்பி வரும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து வைக்கிறான் முருகன். பக்தர்களது பகை அகலும் என்பது நம்பிக்கை. இத்தலம் வெற்றியையும், செல்வத்தையும் ஒருங்கே அருளவல்லது.

இறைவனின் நாமம் சுப்பிரமணிய சுவாமி, ஷண்முகர், ஜயந்திநாதர். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத விதத்தில் ஒரே தெய்வமான முருகன் இரண்டு பெயர்களில் மூலவராகக் காட்சி தருகிறார். கிழக்கே பார்த்து அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமியும், தெற்கே பார்த்து அருள் பாலிக்கும் ஷண்முகரும் இக்கோவிலின் மூலவர்கள் ஆவார்கள். சுப்பிரமணிய சுவாமி கையில் உருத்திராட்ச மாலையுடன் தவக்கோலத்திலும் ஷண்முகர் பன்னிரு கைகள், ஆறுமுகங்களுடன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

இக்கோவிலை ஒட்டி 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களுமே தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தற்போது 'கந்த புஷ்கரணி தீர்த்தம்' எனும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடுகின்றனர். கடற்கரையில் சில தீர்த்தக் கிணறுகள் தூர்ந்துள்ளன. 'திருமகள் தீர்த்தம்' தினசரி சுப்பிரமணிய சுவாமி சன்னிதி அபிஷேகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 24 தீர்த்தங்களில் 'சேது தீர்த்தம்' என்பது அனுமன் இங்கிருந்து புறப்பட்டு தென்னிலங்கைக்குச் சென்ற இடமாகும். கோவில் கடலின் நீர்மட்டத்திற்குக் கீழே காணப்பட்டாலும் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தில் உப்பு நீர் ஊடுருவவில்லை என்பது ஓர் அற்புதமாகும்.

செந்தூர் கோவில் 'ஓம்' எனும் பிரணவ வடிவத்தில் அமைந்துள்ளது. கோவில் கோபுரத்தின் உயரம் 137 அடி. 9 கலசங்கள் உள்ளன. பக்தர்கள் தரைமட்டத்திலிருந்து கீழ்நோக்கிக் கட்டப்பட்ட 12 படிகளில் இறங்கி அதன் கீழ் உள்ள கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி ஷண்முகரை வழிபடுகின்றனர். கோவில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு அருகில் இரண்டு தேவியர் இடம், வலமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் மூலவருடன் இருப்பது தேவியர்கள் அல்ல. இதில் ஒரு சிலை வெள்ளியினால் செய்யப்பட்ட ஸ்ரீ பலி முருகர். இன்னொரு சிலை தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ பலி முருகர். இந்த ஸ்ரீ பலி முருகர் இரவு பள்ளியறை பூஜைக்கு எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் மணக்கும் சந்தனமலை உள்ளது. இதன்மீது தான் கோவில் கட்டப்பட்டது. சந்தன மலையின் ஒரு பகுதிதான் வள்ளி குகை. கோவிலைச் சுற்றி வரும்போது பார்த்தால் சந்தன மலை புலப்படும். வள்ளி குகையும் மூலவர் சுப்பிரமணிய சுவாமியும் நேர்கோட்டில் உள்ளன. இருப்பினும் கடல் கோவிலில் பாதி தூரம்வரை சூழ்ந்திருப்பது போலவும் கடல் நடுவே கோவில் உள்ளது போலவும் கடல், முருகன் கட்டுப்பாட்டில் இருப்பதை பக்தர்களுக்கு உணர வைப்பதாகவும் உள்ளது ஓர் அதிசயம். திருச்செந்தூர் கோவில் மூன்று பிரகாரங்களுடன் அழகிய ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் கருவறை ஆதியில் சந்தனமலையில் கட்டப்பட்டதாகவும் பின்னர் பாண்டிய, சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சேர மன்னர்களும் பின் வந்த கேரள மன்னர்களும் நெல்லை மாவட்டத்தைப் பல காலம் ஆண்டு வந்ததால் மலையாள ஆகம ஆசார விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் போத்திகள் பூஜை செய்யும் பெரிய தலம் இதுவாகும். முதல் பிரகாரத்தில் குரு பகவான் சன்னிதி, 108 மகாதேவர் சன்னிதி உள்ளது. இங்கு ஒரே லிங்கத்தில் 108 சிவலிங்கங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே லிங்கத்துக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முருகன், சூரனை வதம் செய்யும் காட்சி, முருகன் கைவேல் மாமரத்தை துளைத்துச் சென்று சூரன் வயிற்றில் பாய்வது போல் சிற்பம் உள்ளது. தொடர்ந்து பல இறை சன்னிதிகள், துலாபார காணிக்கை செலுத்தும் இடம், முருகன் வரலாற்றுக் கூடம் போன்றவை காணப்படுகின்றன.

இரண்டாவது பிரகாரத்தில் குமரவிடங்கப் பெருமான், மேதா குரு பகவான், 63 நாயன்மார்கள், ஆலயத் திருப்பணிகள் செய்த சாமியார்களின் உருவச் சிலைகள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், காலபைரவர், கொடிமரம் போன்றவை உள்ளன. மூன்றாவது பிரகாரத்தில் கரிய மாணிக்க விநாயகர், பார்வதி தேவி, ஜயந்தி நாதர், ஷண்முகர் சன்னிதிகளும், நடுவில் சுப்ரமணிய சுவாமியும் அருள்புரியும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

மூலவரான சுப்ரமணிய சுவாமிக்குப் பின்னால் பஞ்ச லிங்க சன்னிதி உள்ளது. மூலவர் சன்னிதிக்கும், பஞ்சலிங்க சன்னிதிக்கும் இடையே உள்ள சுவரில் சில துவாரங்கள் உள்ளன. அவற்றின் வழியாகச் சூரிய ஒளி நுழைந்து பஞ்சலிங்கங்களின் மீது படுவது போல் மிக நுணுக்கமாக ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூன்று பிரகாரங்களிலும் சிவலிங்கங்கள் இருப்பது சிறப்பு. முருகனுக்கு மட்டுமல்லாமல் சிவனுக்கும் உரிய கோயில் என்பதை இவை காட்டுகின்றன.

இத்தலத்தில் இலை விபூதி, சந்தனம் முக்கியப் பிரசாதங்களாகும். பன்னீர் இலையில் மடித்துத் தரப்படும் திருநீறு, இலைவிபூதி என்று பிரசித்தம். இவ்விபூதியை உண்ட ஆதிசங்கரரின் நோய் தீர்ந்தது என்பது வரலாறு. இங்கேதான் அவர் 'சுப்ரமண்ய புஜங்கம்' பாடினார். இந்திரன் செந்தூர் முருகனை வணங்கி, துர்வாசர் கொடுத்த சாபம் நீங்கப் பெற்றான். இந்திரனின் வெள்ளை யானை நாரதரிடம் சடாக்ஷர மந்திர உபதேசம் பெற்று முருகனின் பாத கமலங்களை அர்ச்சித்து வரம் பெற்றது. ஊமைக் குழந்தையாக இருந்த குமரகுருபரரைப் பேச வைத்து 'கந்தர் கலிவெண்பா' பாட வைத்தது இம்முருகனின் அருள்தான். பிரம்மன் சிவ சாபம் நீங்க முருகனைத் துதித்து பஞ்சாக்ஷரம் சொல்லி சிவபூஜை செய்து செந்தூர் தீர்த்தத்தில் மூழ்கி, இழந்த தலையைப் பெற்றார்.

இங்கே ஆவணி, மாசித் திருவிழாக்களின்போது நடக்கும் தேரோட்டம் வெகு சிறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் விநாயகர், அம்மன், முருகன் தேர் ஆகியவற்றை பக்திப் பரவசத்துடன் இழுத்துச் செல்வர். எட்டாம் நாள் திருவிழாவில் பச்சைப் பட்டில் முருகன் காட்சி தருவார். கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் மிகச் சிறப்பாகக் கடற்கரையில் நடக்கும். அச்சமயத்தில் இயற்கைக் காட்சிகளில் கூட மாற்றங்கள் ஏற்படும். கடல், ஆகாயத்தின் நிறம் செந்நிறமாகக் காட்சி தரும். சம்ஹாரம் முடிந்து இறுதியில் மாமரமாகத் தோன்றும் சூரனை ஜெயித்த முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமும் செந்தூர் செல்வோம். செல்வக் குமரனின் அருள் பெறுவோம்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com