உயர்ந்த உள்ளம்
"என்னடா இது பொழுது விடிஞ்சு பொழுது போனா இந்த வீட்டில சண்டையும் வாக்குவாதமும்தானா?. தினமும் எதற்காவது சண்டை ஆரம்பித்துக் கடைசியில் தாத்தா, பாட்டி மேல போய் முடியும். யார்? எங்க அப்பா, அம்மாதான் இப்படி வீட்டை அமைதியில்லாமச் செய்யறாங்க. அதிலும் அம்மாதான் ஆரம்பிக்கிறது, சண்டையை. இதற்கு ஒரு முடிவே இல்லையா?" மனதுக்குள் நொந்து புலம்பினான் சுனில். இந்த வருடம் பத்தாவது படிக்கும் அவன் பாடத்தில் மனதே போகாமல் தவியாய்த் தவித்தான்.

அம்மா அடம் பிடித்துப் படுத்திய பாட்டில் சண்டை முற்றிவிட அப்பா பாவம் தாத்தா-பாட்டியை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டார். ஆயிற்று இரண்டு வருடம். அப்பா மட்டும் சனி, ஞாயிறில் போய்ப் பார்த்து விட்டு வருவார். கூடவே நானும் போவேன். போய்ப் பார்த்து விட்டு வருவது அம்மாவுக்குப் பிடிக்காது.

அன்று இரவு சாப்பிட உட்காந்தோம். அப்பா மெதுவாக, "கௌரி, அப்பாவுக்கு இன்னும் இரண்டு மாசத்தில எண்பது வயது முடியறதே சதாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டாமா?" சாதாரணக் குரலில் கேட்டவுடன், அம்மா பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள். "என்னது எண்பதாம் கல்யாணமா? சரிதான் காடு வா வாங்கறது. வீடு போ போங்கறதுன்னு சொல்வாங்க. இப்ப சதாபிஷேகம்தான் குறைச்சல்" நெருப்பைக் கொட்டிய மாதிரி பேசவும், அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "சீ நீயும் ஒரு மனுஷியா? இப்படி அபசகுனமாப் பேசறயே. பாவம் என்னைப் பெத்தவங்க. அவங்களுக்கு சதாபிஷேகம் செஞ்சா நமக்கும் புண்ணியம். அவங்களுக்கும் ஒரு திருப்தி. இவ்வளவு ஆக்ரோஷமாய்ப் ப்சாறே. இது நல்லாயில்லை."

"ஆஹா.. நாமதான் செய்யணுமா? உங்க கூடப்பிறந்த அருமைத் தம்பி இல்லையா? அவருக்கும் செய்யற கடமை, உரிமை எல்லாம் உண்டே... அவங்க ஏற்பாடு செய்யட்டுமே கொஞ்சம். புண்ணியம் அவங்களுக்கும் போகட்டுமே," கோபத்துடன் வார்த்தைகள் வெடித்தன.

அப்பா மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அரைகுறைச் சாப்பிட்டிலேயே எழுந்து போனார். எனக்கும் சாப்பாடே இறங்கவில்லை. "என் அம்மா இப்படி ராட்சசத்தனமா நடந்துக்கறாங்களே" வெறுப்பு மனதில் மண்டியது.

"என்னடா முழிக்கிறே... ஒழுங்காச் சாப்பிட்டு, படிக்கற வழியைப் பாரு," ஒரே அதட்டல். நானும் சரிவரச் சாப்பிடாமல் எழுந்து விட்டேன். அது என்னவோ தாத்தா பாட்டி பேச்சை எடுத்தலே இந்த அம்மா இப்படிப் பாயறாங்களே..

எனக்கு ஒரு சித்தப்பா. அவர் மைலாப்பூரில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் இருக்கிறார். ரெண்டு பெண் குழந்தைங்க. அவர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். சித்தியும் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூலில் டீச்சர். கஷ்ட ஜீவனம்தான். பாவம், ரெண்டு பேரும் நல்ல அமைதியான சுபாவம். எப்பவாவது வருவாங்க. பிரியமாய் இருப்பாங்க. எனக்குப் பரீட்சை நெருங்கி விட்டது. மனதுக்குள் தாத்தா பாட்டி ஞாபகம்தான். பாவம் எண்பது வயசிலேயேயும் கூட பேரன், பிள்ளைன்னும் சந்தோஷமாய் இருக்க முடியலையேன்னு வருத்தப்பட்டேன்.

"ஏண்டா மோட்டு வளையைப் பார்த்துக்கிட்டு, கவனமாப் படி... ஃபைனல் இயர் நல்ல மார்க் வாங்கணும். தண்டப்பயலே" அம்மாவின் கர்ண கடூரக் குரல் என்னை உலுக்கிற்று. தேர்வு நெருங்கி விட்டது. என்னுடைய உழைப்பு கை கொடுத்தது. மாவட்டத்தில் முதலாவதாகத் தேறி பள்ளியிலும் முதல் மாணவனாகத் தேறினேன்.

வீட்டில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுக்கு நடுவே நான் முதலாவதாக வருவேன் என்று நினைக்கவேயில்லை. செய்தி கேட்டவுடன் எனக்குத் தலைகால் புரியவில்லை. ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு முதியோர் இல்லம் சென்று தாத்தா, பாட்டியிடம் சொன்னேன். தாத்தா என்னைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். வீட்டுக்கு வந்தால் அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அப்படி என்ன கொள்ளை போற அவசரம்? உடனே ஓடணுமா? உதவாக்கரை..." என்று சீறினாள். நான் லட்சியம் செய்யவில்லை. ஊரெல்லாம் என்னைப் பற்றிய பேச்சுதான். அம்மா அப்பாவுக்குப் பெருமை பிடிபடவில்லை.

பள்ளியில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தனர். கலெக்டர் தலைமையில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். எனக்குப் பரிசுகளும் பாராட்டுக்களும் அளித்தனர். அம்மா மகிழ்ச்சியில் மிதந்தாள். எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.

விழாவெல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தோம். "சுனில் உனக்கு ஸ்வீட் செஞ்சு வச்சிருக்கேன்" என்று ஆசையுடன் கொடுத்தாள். பிறகு மெல்ல என் தலையைக் கோதியபடி, "சுனில் கண்ணா, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. சின்னதா ஒரு வைர மூக்குத்தி வாங்கிக்கணும். நீ அப்பாவுக்கு என்ன வேணுமோ வாங்கிக் கொடு. ஏதோ வந்த பணத்தை நல்லதாச் செய்யலாமே. முதல்ல அம்மா அப்பாக்குத்தான் நீ செய்யணும். இவ்வளவு தூரம் நீ முன்னுக்கு வந்திருப்பது எங்களால் தானே!" நைச்சியமாகப் பேசினாள் அம்மா.

நான் மெல்ல ஆரம்பித்தேன். "ஒரு மகன் தன் தாய் தகப்பனுக்கு எண்பது வயது ஆனதும் சதாபிஷேகம் செய்து வைத்தால் தேவர்களும் திருப்திப்படுவார்கள். கடவுளும் வாழ்த்தி உயர்நிலைக்குக் கொண்டு போவார் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆகையால் அந்தப் பணத்தில் ஒரு பைசாகூட நாம எடுத்துக்கக் கூடாது. அப்படியே தாத்தா, பாட்டி சதாபிஷேகத்தை நல்லமுறையில் செய்வதற்காகச் சித்தப்பாவிடம் தருவதாகச் சொல்லி விட்டேன். அதுக்காகத்தான் நானும் முழு முயற்சியாப் படிச்சேன். அவங்க சந்தோஷம் எனக்கு முக்கியம்" என்றேன் மூச்சு விடாமல்.

அப்பாவும், அம்மாவும் பேச்சே வராமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com