ஜமீன் பரம்பரை வைரம்!
அழகாபுரியில் மணிமாறன் என்ற வியாபாரி வாழ்ந்தான். அவன் வட்டித் தொழிலையும் செய்து வந்தான். அதன்மூலம் பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தான். அவ்வூர் மக்கள் அவனுடைய செல்வாக்குக்கு அஞ்சி அவனை எதிர்க்காமல் இருந்தனர். அவ்வூருக்குப் புதிதாக ரங்கன் என்றோரு வியாபாரி வந்து சேர்ந்தான். அவன் சிறு வியாபாரி என்பதால் பணத் தேவை இருந்தது. அதனால் மணிமாறனிடம் சென்று பண உதவி கேட்டான்.

மணிமாறனும் ரங்கன் கடையை ஈட்டுறுதியாக தந்தால் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறினான். ரங்கன் சம்மதித்தான். ஆயிரம் வெள்ளியைக் கடனாகப் பெற்று வியாபாரத்தை ஆரம்பித்தான் ரங்கன். அவன் அதிக ஆசைப்படாதவனாக, நேர்மையானவனாக இருந்தான். குறைந்த விலையில் பொருட்களை விற்றதால் அவன் வியாபாரம் செழித்தது.

ஆறு மாதத்திற்குப் பின் ஒருநாள் கடன் மற்றும் வட்டித் தொகையை எடுத்துக்கொண்டு மணிமாறனைப் பார்க்கப் போனான் ரங்கன். பணத்தை மணிமாறனிடம் கொடுத்து, கடை உரிமையைத் தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான். பணத்தைப் பெற்றுக் கொண்ட மணிமாறன், ரங்கன் எப்போது கடையை ஈட்டுறுதியாக வைத்துக் கடன் வாங்கினானோ அப்போதே கடை தனக்குச் சொந்தமாகி விட்டது என்றும், அதைத் திருப்பித் தர இயலாது என்றும் உறுதிபடக் கூறினான். ரங்கன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் மணிமாறன் கடையைத் தர மறுத்ததுடன், தன் அடியாட்களை வைத்து அவனை ஊரைவிட்டு விரட்டி விட்டான்.

மணிமாறனை எதிர்த்து எதுவுமே செய்ய இயலாத ரங்கன் ஊருக்குத் திரும்பினான். நடந்தைத் தன் அண்ணன் குணசேகரனிடம் கூறினான். வெகுண்ட குணசேகரன் மணிமாறனின் கொட்டத்தை அடக்க ஒரு திட்டமிட்டான். மறுநாள் ஒரு பெரிய வியாபாரி போல வேடமிட்டு, ஒரு குதிரை வண்டியில் அழகாபுரிக்குப் புறப்பட்டான். அங்கே மணிமாறன் வீட்டுக்குப் போனான்.

யாரோ ஒரு பணக்கார வியாபாரி தன்னைச் சந்திக்க வருவதாக நினைத்த மணிமாறன், குணசேகரனை அன்போடு வரவேற்றான்.

குணசேகரன், "ஐயா. நான் பக்கத்து ஜமீனின் வாரிசு. வியாபார விஷயமாக வெளியூர் போய்க் கொண்டிருக்கிறேன். வரும்போது பணம் எடுத்து வர மறந்து விட்டேன். இந்த ஊரில் எல்லோரும் உங்களைப்பற்றி உயர்வாகச் சொன்னார்கள். எனக்கு நீங்கள் ஆயிரம் வெள்ளி கொடுங்கள். வேண்டுமானால் இந்த குதிரை வண்டி இங்கேயே இருக்கட்டும். நான் போய் வியாபாரத்தை முடித்துவிட்டு வந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொள்கிறேன்" என்றான்.

‘ஆயிரம் வெள்ளிக்கு வெறும் குதிரை வண்டியா’ என்று மணிமாறன் யோசித்தான். உடனே கோபம் கொண்டவனைப் போல் நடித்த குணசேகரன், குதிரை வண்டிக்காரனைப் பார்த்து, "டேய், ஐயா நம்மை நம்பவில்லை போலிருக்கிறது. நீ உடனே இந்த குதிரை வண்டியில் திரும்பப் போய் ஜமீனில் நான் சொன்னதாகச் சொல்லிப் பணம் வாங்கி வா. எதற்கும் பல்லாயிரம் மதிப்புள்ள என்னுடைய இந்த வைர மோதிரத்தை அடையாளத்துக்கு வைத்துக் கொள்" என்று கூறி ஒரு மோதிரத்தைக் கொடுத்தான்.

பளபளவென்று ஒளிவீசியது மோதிரம். அதன் ஜொலிப்பிலும் அழகிலும் மயங்கிய மணிமாறன் சுதாரித்துக் கொண்டு, "அடடே! நண்பரே, நான் உங்களை நம்பாமல் இல்லை. வெள்ளிக் காசுகளை சிறிய நாணயங்களாகத் தருவதா அல்லது பெரிய நாணயமாகத் தருவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கோபித்துக்கொண்டு விட்டீர்களே! அந்த மோதிரத்தை என்னிடம் தாருங்கள். அதை ஈடாக வைத்துக்கொண்டு பணம் தருகிறேன். நீங்கள் வண்டியிலேயே போய் வியாபாரத்தை முடித்துவிட்டு வந்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். நான் அதுவரை இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன்" என்று கூறிப் பணத்தைக் கொடுத்தான்.

குணசேகரனும், "நல்லது. பரம்பரை வைர மோதிரம் இது. பல லட்சம் மதிப்புள்ளது. நான் வரும்வரை ஜாக்கிரதையாக வைத்திருங்கள்" என்று கூறி மோதிரத்தைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.

‘பல்லாயிரம் மதிப்புள்ள வைர மோதிரத்தை எப்படி ஏமாற்றி நம் வசப்படுத்துவது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான் மணிமாறன் - பாவம், அது வைரமல்ல. வெறும் கண்ணாடிக் கல் என்பதையும், அவர்கள் இனித் திரும்ப வரவே மாட்டார்கள் என்பதையும் அறியாமலேயே.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com