அரங்கேற்றம்: ஷ்ருதி சந்திரா
நாட்டிய தருமி நடனப் பள்ளி மாணவி ஷ்ருதி சந்திராவின் அரங்கேற்றம் மிச்சிகனின் சீஹோம் ஹைஸ்கூலில் நிகழ்ந்தது. வழுவூர் பாணியில் நடனம் பயின்று வரும் ஷ்ருதி முதலில் எடுத்துக் கொண்ட பாடல் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 'பிறை அணியும் பெருமான்'. ஞான சபேசர் ஸ்தோத்திரத்திற்கு அற்புதமாய்ப் பதம் வைத்தார். பிறகு புஷ்பாஞ்சலி, மல்லாரி, ஜதிஸ்வரம் ஆகியவற்றை விறுவிறுப்புடன் ஆடினார். சப்தத்திற்கு பாபநாசம் சிவனின் 'நீ இறங்காயெனில்”, வர்ணத்திற்கு மதுரை முரளிதரனின் 'ஆடல் நாயகன்' ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். புரந்தரதாசரின் 'ஜகதோத்தாரணா' அருமை. தில்லானாவுக்குப் பின் நூரணி சிவராமன் இயற்றிய 'சுவாமி பொன்னையப்பன்' பாடலுக்கு ஆடி, பின் லவாங்கி ராகத்தில் அமைந்த 'ஓம்கார காரிணி' பாடலுக்கு ஆடியது வெகு நேர்த்தி. மங்களத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

குரு சந்தியா ஆத்மகூரி வழுவூர் பாணியில் பலரை பயிற்றுவித்து வருகிறார். சமீபத்தில் காலமான வேம்பட்டி சின்னசத்தியத்தின் பிரதான சிஷ்யைகளில் சந்தியாவும் ஒருவர். ஷ்ருதியின் தாத்தா நூரணி சிவராமன் நாம சங்கீர்த்தனத்தில் வல்லுநர். தன் பேரன், பேத்தி என அனைவருக்கும் இக்கலையை பயிற்றுவித்து ஊக்குவிக்கிறார். ஷ்ருதியின் தந்தை நூரணி சந்திரா திரை இசைக்குழு நடத்தி வருகிறார். சுனாமி போன்ற பலவற்றுக்கு நிதி திரட்டி அளித்திருக்கிறார். குரு சந்தியா ஆத்மகூரி (நட்டுவாங்கம்), பத்மா சுந்தர் (வாய்ப்பாட்டு), பார்கவி பிரபு (வயலின்), ஜெயசிங்கம் (மிருதங்கம்). அநிருத் ஸ்ரீதர் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர். ஷ்ருதியின் தந்தை நூரணி சந்திராவும் பாடியது சிறப்பு.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com