அரங்கேற்றம்: வர்ஷினி ராமநாதன்
ஆகஸ்ட் 25, 2012 அன்று பாலடின் (இல்லினாய்) கட்டிங் ஹாலில் வர்ஷினி ராமநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு வித்யா பாபுவின் பதாஞ்சலி நாட்டியப் பள்ளியில் பத்து வருடங்களாகப் பயின்று வரும் வர்ஷினிக்கு வயது பதினான்குதான். சபா வந்தனத்தைத் தொடர்ந்து, 'ஸ்ரீ விக்ன ராஜம் பஜே' பாடலுடன் அரங்கேற்றம் துவங்கியது. பின், 'முத்தைத்தரு' என்று துவங்கும் திருப்புகழில், சொல்கட்டு, ஜதிகளைக் கச்சிதமாக கோர்த்த அலாரிப்பு ஆனந்தப்படுத்தியது. அடுத்ததாக 'மாதே மலயத்வஜ' என்ற வர்ணம் மலயத்வஜ பாண்டியனின் குமாரி வளர்ந்து ஆளான கதையை அற்புதமாக விவரித்தது. புரந்தரதாசரின் 'தேவகி நந்தன' பாடலுக்குக் கிருஷ்ணரை அபிநயித்து மகிழ்ச்சி அளித்தார் வர்ஷினி. 'ஹரி ஹரி ராம நாம' பாடலில் அகல்யா சாப விமோசனம், சீதையை அபகரித்தல், ஜடாயு மரணம் ஆகியவை நெகிழ்வு தரும்படி நடனம் ஆக்கப்பட்டு இருந்தன.

கால் மாறி ஆடிய கனகசபேசனைக் கலை நயத்துடன் ஆடினார் வர்ஷினி. இசை இடைவேளையில் குரு வித்யாவும், மிருதங்க வித்வான் ஸ்ரீராமும் ஆதி தாள ஜதிக் கோர்வைகளை கொடுத்த விதம் பிரமாதம். ஸ்ரீராம் மோர்சிங்கிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதை நிரூபித்தார். 'என்ன தவம் செய்தனை' பாடலை இனிமையாக வயலினில் வாசித்தார் வெங்கடேஷ் பத்மநாபன். அடுத்து வந்தது காளிங்க நர்த்தன தில்லானா. வித்யாவின் உணர்ச்சி பூர்வமான உச்சரிப்பும், அற்புதமான ஜதிகளும், வர்ஷினியின் வளைந்து நெளிந்த பாம்பு போன்ற நடனமும் ஒன்றோடு ஒன்று போட்டி இட்டன.

வித்யா பாபுவின் நட்டுவாங்கம், மீனு பசுபதியின் வாய்ப்பாட்டு, ஸ்ரீராம் பாலசுப்ரமணியனின் மிருதங்கம், வெங்கடேஷ் பத்மநாபனின் வயலின் அரங்கேற்றத்துக்கு அழகு சேர்த்தன. அபிராமி விஜயனும், அனீஷ் ராமநாதனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். வர்ஷினியின் பெற்றோர்களான ராம்-ரேவதி நன்றியுரை கூறினர்.

© TamilOnline.com