போட்டிகள்: சப்தமி அறக்கட்டளை
2012 நவம்பர் 2-3 தேதிகளில் சப்தமி (SAPTAMI-Selecting Assisting and Promoting Talented Artists (who are) Musically Inclined) அறக்கட்டளை அமெரிக்காவில் இந்தியப் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலும், இங்கேயே பிறந்து வளரும் சந்ததியினரின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டும் இசை, நடனப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பரத நாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, கதக் என இந்திய நடனங்கள், இசைக்கருவிகள், கர்நாடக இசை என வெவ்வேறு பிரிவுகளில் வருடந்தோறும் போட்டிகள் நடத்தி வருகிறார்கள். நிகழ்ச்சி ப்ளேனோவில் உள்ள லெகசி சர்ச் ஆடிடோரியத்தில் நடைபெறும்.

இவற்றில் வெற்றி பெறுவோர் 'சப்தமி ஸ்டார்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அடுத்த வருட நிகழ்ச்சிவரை, அந்தப் பிரிவில் பிரபல கலைஞர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பிரபலங்களின் முன்னிலையில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சப்தமி போட்டிகளின் மூலம் புதிய திறமைசாலிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

போட்டிகளில் பங்கேற்க, வட அமெரிக்கா முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நிகழ்ச்சிகள் டெக்சாஸ் மாகாணம், டாலஸில் நடந்த போதிலும், தொலைதூர மாகாணமான வாஷிங்டனிலிருந்தும் வந்து பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 2010ம் ஆண்டு 125, 2011ம் ஆண்டு 200 என்று போட்டியாளர் எண்ணிக்கை பெருகி வருகிறது. 2012ம் ஆண்டு இன்னும் அதிகப் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போட்டிகளில் நடுவர்களாகவும், சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கவும் இந்தியாவிலிருந்து பிரபல கலைஞர்கள் வருகை தர உள்ளனர்.

கூடுதல் தகவல்களுக்கு: www.saptami.org

ஜெயகுமார்,
டாலஸ், டெக்சாஸ்

© TamilOnline.com