பெண்மனம்
"என்ன ஆனாலும் சரி வீணா,ஸ்வேதா இங்க வரத யாராலும் தடுக்க முடியாது. இவ்வளவு நாளா என்ன சொல்லியும் உன் மனசு மாறல. இனிமே நான் என் முடிவ எடுக்கத்தான் போறேன்" கத்திவிட்டு வீணாவைப் பார்க்காமல் சென்றான் சேகர். கதவு உடையும்படி மூடும் சத்தம் படுக்கையறையில் அழுதுகொண்டிருந்த வீணாவிற்கு இடியோசை போலக் கேட்டது. தன்னுடைய அலுவல் விஷயமாக முதன்முதலில் சேகரைச் சந்தித்தாள் வீணா. பின் நல்ல நண்பர்களாய் ஆனார்கள். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத சேகரின் நேர்மையான வாழ்க்கை, பிறருக்குத் தன்னால் இயன்ற அளவு தானே சென்று உதவும் பரோபகார குணம், கடவுள் நம்பிக்கை போன்ற உயரிய குணங்கள் அவளை அவன் பக்கம் ஈர்த்தன. எல்லாவற்றையும் விட, பெற்றோர் ஆதரவின்றி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து, இன்று பலரும் மதிக்கும் நல்ல வாழ்க்கை வாழும் சேகரின் தன்னம்பிக்கை அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. இவை அனைத்தும் அவன்மேல் கொண்ட ஈர்ப்பு காதலாக மாறப் போதுமானதாக இருந்தது.

பழைமையில் ஊறிய, சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்ட தன் பெற்றோரால், தன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிந்தும், அவர்கள் சம்மதமின்றியே சேகரைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் கருவுற்ற போது பெற்றோரின் ஆதரவு கிடைத்தது. ஆனால் பெற்றோரின் உறவை மீட்டுத் தந்த கரு ஒரு விபத்தில் கலைந்த பின்பும் அவளுக்கு ஆதரவு பெற்றோரிடமிருந்து தொடர்ந்து கிடைத்தது. மாப்பிள்ளையின் உயர்ந்த குணங்களும் புரிந்தவுடன் பிரபாகரும், விஜயாவும் நிம்மதியாகவே இருந்தனர். ஐந்து வருடங்கள் ஒரு குழந்தையின் வரவை எதிர்நோக்கியே கழிந்தன.

இவை அனைத்தும் கண்முன் திரைப்படம் போல வந்து சென்றன. உலகமே ஸ்தம்பித்து விட்டது போல் இருந்தது வீணாவிற்கு. "இதற்காகவா இவ்வளவு நாட்கள் கனவோடு காத்திருந்தேன். இதற்காகவா பெற்றோரைவிட இவனே முக்கியம் என்று வந்தேன். உலகமே தான்தான் என்று இருந்த சேகரா இன்று தன்மேல் இவ்வளவு வெறுப்பைக் காட்டிச் செல்கிறான்," ஏதேதோ எண்ணம் மனதில்.

தொலைபேசி ஒலித்தது. எடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும் ஒருவேளை சேகர்தான் கூப்பிடுகிறானோ என்ற எண்ணம் அவளைத் தொலைபேசியிடம் இழுத்துச் சென்றது. "ஹலோ" என்றாள் வறண்டுபோன குரலில். வடித்த கண்ணீரில் உடம்பில் இருந்த அத்தனை நீரும் வெளியேறியிருந்தது மறுபக்கத்தில் இருந்தவருக்கும் தெரிந்தது.

"என்ன வீணா, ரெண்டு வாரமா போனே பண்ணல. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" மறுபக்கத்தில் கேட்ட தந்தை பிரபாகரின் குரல், மனதில் இருந்த பாரத்தை அணை உடைந்த வெள்ளம் போல் வெளியே வரச் செய்தது. ஓவென்று அழுகை அவளையும் மீறி வெளியேறியது. ஆசைமகளின் அழுகை பிரபாகரை என்னவோ செய்தது. "என்ன பிரச்சினை அம்மா? ஏன் அழற?"

அவளால் பதில் சொல்லவே முடியவில்லை. அழுகையைத் தவிர வேறேதும் பதிலாகச் சொல்லத் தோன்றவில்லை. "நான் உடனே வரேன். நீ போனை வை" என்று வைத்துவிட்டார்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவள் வீட்டில் இருந்தார். தந்தையை பார்த்ததும் ஓடிப்போய் அணைத்துக்கொண்டாள். அழுதுகொண்டே "சேகர் என்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டார் அப்பா. கொஞ்ச நாளாவே என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நான் எவ்வளவு சொல்லியும் அந்த ஸ்வேதாதான் அவருக்கு முக்கியமாப் படறது. அவர் அளவுக்கு என்னால பிராக்டிகலா யோசிக்க முடியல அப்பா. குழந்தை இல்லாதது என் தப்பா?. இல்ல இனிமே முடியவே முடியாதா? அஞ்சு வருஷமா இது ஒரு பெரிய குறையா தெரியல. ஆனா இப்ப இது பெரிய விஷயமா போயிடுச்சு" என்றாள். பிரபாகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குறை என்று எதுவுமே சொல்ல முடியாத தன் மாப்பிள்ளையின் மனமும் புரிந்தது. முதலில் எதிர்த்தாலும் மாப்பிள்ளையின் குணம் புரிந்தவுடன் தன் மகள் சரியான துணையைத்தான் தேர்ந்தெடுத்தாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுபவர், இன்று அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

திடீரென கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தனர். சேகர் ஸ்வேதாவுடன் அங்கே நின்று கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. "நீ போய் அவர்களிடம் பேசுகிறாயா" என்று வீணாவைச் சுட்டிக் காட்டி ஸ்வேதாவைக் கேட்டான் சேகர். சரியென்று தலை அசைத்துவிட்டு ஸ்வேதா வீணாவிடம் வந்தாள்.

வீணாவின் கையைப் பிடித்துக்கொண்டு தனக்கே உண்டான நான்கு வயது மழலை மாறாமல் "எங்க அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க. நீங்கதான் எனக்கு இனிமே அம்மாவா. எனக்கு அம்மா இல்லன்னு யாரும் சொல்லமாட்டாங்க இல்ல" என்று கேட்டாள் ஸ்வேதா. அழகான விரிந்த கண்கள். கூரிய மூக்கு. சுருள் சுருளாய் நெற்றியில் புரளும் முடி. எப்பொழுதும் புன்னகை தவழும் இதழ்கள். சிறிய தேகம். பிஞ்சுக் கைகால்கள். மொத்தத்தில் தங்க விக்ரகம். பார்ப்பவர் தன்னையும் அறியாமல் இறுகக் கட்டிக்கொள்ளும் சின்னக் குழந்தை. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோரின் பாசத்தில் மூழ்கித் திளைத்தவள், இரண்டு வயதுவரை. பெற்றோர் விபத்தில் விட்டுச்செல்ல தாத்தா பாட்டியிடம் வளர்ந்தாள். பின்பும் குறுக்கே வந்த விதியினால், ஒரு வருடத்தில் அவர்களும் நிரந்தரமாகப் பிரிந்தனர். மூன்று வயதில் சேகர் வளர்ந்த இல்லத்தில் விடப்பட்டாள்.

தான் வளர்ந்த இல்லத்திற்கு அடிக்கடி சென்று உதவும் சேகருக்கு அவள்மேல் தனிப் பாசம் பிறந்தது. மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்து, ஆனால் எதுவென்று தெரியாத அன்பு, அவளை தானே தத்தெடுத்துக்கொள்ளும் எண்ணத்தைத் தூண்டியது. அவ்வாறான எண்ணம் எழுந்தவுடன் முதலில் வீணாவிடமே பகிர்ந்து கொண்டான்.

ஆனால் வீணாவை ஏதோ ஒன்று தடுத்தது. தத்தெடுத்தபின் தன் குழந்தை என்ற பாசம், உரிமை போன்றவை,வளர்ப்புக் குழந்தையிடம் இருக்குமா? அப்படி ஒரு அன்பு செலுத்த முடியாமல் போனால், அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து, தன் வாழ்விலும் விளையாடிவிடுமோ என்று பயந்தாள். தன் குடும்பமே முதலில் என்று வளர்ந்துவிட்ட வீணாவால், சேகரைப்போல் அனைவரையும் உறவினர்களாய்ப் பார்க்கும் மனமுதிர்ச்சியைப் பெற முடியவில்லை.

ஆறு மாதமாகவே இந்த விஷயத்தில் வீணாவுக்கும் சேகருக்கும் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் தொடர்ந்தன. ஆனால் இவ்வளவுக்கும் காரணமான ஸ்வேதா தன்முன் நின்று இப்படிக் கேட்பாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்த வீணாவினால் பொங்கிவந்த அழுகையை அடக்க முடியவில்லை. அவளை வாரி அணைத்து முத்தம் கொடுத்தாள் வீணா. "இல்லம்மா, இனிமேல் யாரும் அப்படிச் சொல்ல மாட்டாங்க..உனக்கு அம்மா நான் இருக்கேன்" என்றாள் தாயுள்ளத்துடன்.

இதுவே நடக்குமென்று நம்பிய மனைவியை அறிந்த சேகர், மாமனாரைப் பார்த்து புன்னகைத்தான். அதன் அர்த்தம் அவ்விருவருக்கும் நன்றாகவே புரிந்தது.

சாயி ரஞ்சனி,
ஃப்ரெடரிக், மேரிலேண்ட்

© TamilOnline.com