ஃப்ளூ வைரஸ்
இன்ஃப்ளுயென்சா என்ற இந்த நோய் பரவலாக ஃப்ளூ என்ற பெயரில் அறியப்படுகிறது. இலையுதிர்காலம் முதல் குளிர்காலம் வரை ஃப்ளூ வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம். இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது. வருடா வருடம் அமெரிக்காவில் மட்டும் பல ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த வைரஸ் தாக்கி அவதிப்படுகின்றனர். ஃப்ளூ தாக்கினால் மருத்துவமனையில் சேர நேரிடலாம். மரணமும் ஏற்படலாம். இந்த வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது. இதை ஆறு மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளும், பெரியவர்களும் ஆண்டுதோறும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று CDC வலியுறுத்துகிறது.

ஃப்ளூ என்றால் என்ன?
ஃப்ளூ வைரஸ் இருமல், சளி மூலம் பரவக்கூடியது. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், பள்ளிகள், மருத்துவமனை போன்றவற்றிலும் இது மிக வேகமாக பரவும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரையுள்ள மாதங்களில் அதிகம் தாக்கும்.

அறிகுறிகள்
- காய்ச்சல்
- உடல்வலி
- மூக்கடைப்பு, சளி
- இருமல்
- மூக்கில் இருந்து நீர் கொட்டுதல்
- மூச்சு விடச் சிரமப்படுதல்.

பிற வைரஸ் தாக்கினாலும் இதே அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் ஃப்ளூ வைரஸ் தாக்கினால் நிமோனியாவில் கொண்டு விடக்கூடும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தீவிரமாகத் தாக்கலாம். இவர்களுக்கே மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகம். சின்னக் குழந்தைகளை, குறிப்பாக நான்கு வயதுக்குட்பட்டவர்கள், மருத்துவமனையில் சேர்க்க நேரிடலாம்.

தடுப்பூசி யாருக்கு
ஆறு மாதத்துக்கு மேலான குழந்தைகளும், பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு வியாதியும் இல்லாதவர்களும், மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4 வார இடைவெளியில் ஒரு ஊசி வீதம் இரண்டு தேவைப்படலாம். இவர்கள் 2010 முதல் ஃப்ளூ வைரஸ் தடுப்பூசி போட்டிருந்தால் ஒரு ஊசி போதுமானது. மூக்கில் மருந்து மூலமும் இந்தத் தடுப்பு மருந்தை வழங்கலாம். எந்த நோயும் இல்லாமல் நல்ல உடல் நிலையில் இருப்பவர்களுக்கு 2-49 வயதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கலாம்.

தடுப்பூசி வகைகள்
ஊசி மூலம் கொடுக்கலாம், மூக்கில் சொட்டு மருந்து மூலமும் அளிக்கப்படலாம். ஒவ்வோர் ஆண்டும் ஆராய்ச்சி மூலம் வைரஸின் தன்மையை அறிந்தபின் இந்த ஊசி மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி மூன்று வகை வைரஸ்களுக்கானதாக உள்ளது. அதனால் சென்ற வருடம் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் இந்த வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்விளைவு
இந்தத் தடுப்பூசி அதிகப் பின்விளைவு இல்லாதது. இதைப் போட்டுக்கொண்டால் ஃப்ளூ வைரஸ் தாக்காது. முற்றிலும் செயலிழக்கச் செய்த வைரஸ், ஊசியாகத் தயாரிக்கப்படுகிறது. இதனால் உடல் வலி, சளி மூக்கடைப்பு ஏற்படாது. முட்டை ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இந்த ஊசி ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவர்கள் மருத்துவர் அலுவலகத்தில் முப்பது நிமிடங்கள் வரை இருக்க வேண்டி வரலாம்.

2009ம் ஆண்டில் H1N1 என்று சொல்லப்படும் ஃப்ளூ வைரஸ் தாக்கிப் பலர் உயிரிழந்ததை நாம் அறிவோம். ஆனால் அந்த வைரஸுக்கும் தடுப்பூசி உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் பல உயிர்கள் பிழைத்தன. கர்ப்பிணிப் பெண்கள் இந்த தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இவர்கள் மூக்கு மருந்து எடுத்துக் கொள்ள முடியாது. ஊசிதான் போட்டுக்கொள்ள வேண்டும்.

முகத்தை மூடிக்கொண்டு நடமாடுவதும், கைகளை நன்றாக சோப்புப் போட்டுத் தேய்த்து கழுவுவதும் வைரஸ் பரவலைத் தவிர்க்க உதவும். ஆனாலும் இந்த தடுப்பூசி மிக அவசியம்.

இதை மருந்துக் கடைகளிலும், மருத்துவ மனைகளிலும் போட்டுக் கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களும் குறைந்த விலையில் இந்த ஊசி போட்டுக் கொள்ள முடியும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com