பேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம்
திருக்குறளின் ஒப்புரவு அதிகாரத்தில் 'பேரறிவாளன் திரு' எப்படி 'ஊருணி நீர் நிறைந்ததைப்' போன்றது என்பதைப் பார்த்தோம். இப்போது 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று' என்பதையும் 'நயனுடையான்' எத்தகையவன் என்பதையும் எடுத்துக்கொள்வோம். 'கொட்ட துப்பி நட்ட மரம் பூத்துக் குலுங்குது--அட, கொம்ப வளச்சு பழம்பறிக்க வீட்டுக்கு வாங்க' என்று எழுதினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்பதற்காக அயல்நாடுகளுக்குப் போய் போர்புரிந்த மகன், வீட்டுக்குத் திரும்ப வரப்போகிறான் என்ற நினைப்பில் பூரித்துப் போகும் தாயாகக் கனிந்து சொன்ன வாசகம் இது. தின்றுவிட்டு எறிந்த மாங்கொட்டை மரமாக முளைத்துப் பூத்துப் பழுத்துக் குலுங்குகிறது அப்பா! அதில் பழம் பறிக்கவேண்டாமா! அதற்காக வீட்டுக்கு வா! கொத்தமங்கலம் சுப்புவின் பாட்டிலும் ஒரு பயன்மரம் இருக்கிறது. இது எப்படி நம் குறளுக்கு இசைந்து வருகிறது என்பதைக் காண்போம்.

பயன்மரத்தைச் சொன்ன வள்ளுவர், அதேபோன்ற இன்னொரு மரத்தையும், செல்வத்தையும் சுட்டிக்காட்டினார். 'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று' (1008). நன்றியில் செல்வம் என்பது அதிகாரத் தலைப்பு. செல்வத்தில் நன்றியில்லாத செல்வம் என்று ஒன்றுண்டா என்று பேசப் புகுந்தால், பெருகும். வேறொரு சமயத்தில் இதை விரிப்போம். இந்தக் குறளில் என்ன சொல்ல வருகிறார்? 'விரும்பப்படாதவனுடைய செல்வம், நட்டநடு ஊரில் நச்சு மரம் பழுத்ததைப்போல்'. இதன் பழம், ஒருவருக்கும் பயன்படாது; தப்பித் தவறித் தெரியாமல் எவனாவது தின்று தொலைத்துவிட்டால் அவன் செத்தே போவான். இப்படிப்பட்ட மரம் ஊருக்கு வெளியே, எங்கேயாவது ஒரு காட்டில் இருந்திருந்தாலாவது அதிகத் தீங்காவது ஏற்படாது. இப்படி நடு ஊரில் நச்சு மரம் பழுத்தால், அதனால் யாருக்கு என்ன லாபம்? அட, அதனால் அந்த மரத்துக்குத்தான் என்ன லாபம்?

ஆள், நச்சப்படாதவன். யாராலும் விரும்பப்படாதவன். கருமி; கொடூரன்; அடாவடி ஆசாமி! அவன் சேர்த்து வைத்த செல்வமோ, ஊருக்கு நடுவில் இருக்கின்ற காரணத்தால் எப்படி, நச்சுக் கனி என்பதறியாமல் யாராவது உண்டு வைத்தால், சாவை விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ, அப்படி. யாருக்கும் பயனில்லாமல் இப்படிக் கிடக்கிறதே, இதை ஏதாவது நல்ல காரியத்துக்காவது பயன்படுத்துவோம் என்று எவருக்காவது எண்ணம் ஏற்பட்டு, அதைத் தொட்டுகிட்டு வைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? தொட்டவன், உயிர் விட்டவன். அவ்வளவுதான். ஆக, அந்த மரம் பழுத்ததால், ஊருக்கும் பயனில்லை. மரத்துக்கும் பயனில்லை. இந்த ஆசாமி செல்வத்தைச் சேர்த்ததால், மற்றவர்களுக்கும் உபயோகமில்லை. அவனுக்கேயும் அது பயன்படப் போவதில்லை. என்ன, அதிகம் போனால், உயிரிருக்கும் வரை, அனுபவிக்கலாம் என்ற நினைப்பாவது இருந்தால் அனுபவிக்கலாம். அதுவும் இல்லாத கருமி என்றால், கேட்கவே வேண்டாம்.

இப்ப ஒரு கேள்வி கேட்கத் தோணுது, இல்ல? 'நச்சப்படாதவன் செல்வம் அவனுக்கே பயன்படாமல் போவது என்னவோ புரிகிறது. நச்சு மரம் பழுத்தால், அதனால் அந்த மரத்துக்கு என்ன பலன்னு சொல்றீரே, அதென்னது அது? ஊர்ல எந்த மரம் தன்னிடம் பழுத்த பழத்தைத் தானே திங்குது? இந்த மரம் பழுத்தா, பழம் உதிரப் போவுது. அழுகப் போவுது. காயப் போவுது. உலரப் போவுது..... 'ம்ம்ம்? கேட்டு முடித்துவிட்டீர்களா? தொடருங்கள். உலரப் போகிறது. அப்புறம்? அதன் கொட்டை அல்லது விதை, மரத்தடியிலேயே கிடக்கப் போகிறது. அங்கேயே இன்னொரு மரம் முளைக்கப் போகிறது. கூடிய விரைவில் ஒரு நச்சுத் தோப்பு உருவாகலாம்.

உருவாகலாமா? முடியுமா? எந்த மரத்துக்கு அடியிலாவது இன்னொரு மரம் முளைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா, வாழை ஒன்றைத் தவிர? ஆலமரத்துக்கு அடியில் புல்லும் முளைக்காது என்று சொல்வார்கள். அட ஒரு பேச்சுக்குன்னு வச்சிக்கங்களேன். பெரிய விருட்சத்தின் அடியில் நிழல் வேண்டுமானால் இருக்கலாம். இன்னொரு மரம் முளைக்க முடியாது. இன்னொரு மரம் வேர்பிடிக்க மண்ணில் இடம் வேண்டாமா?

சரிப்பா. பயன்மரம்னு தொடங்கி, நச்சு மர ஆராய்ச்சில எறங்கிட்ட. என்ன பண்ணப் போறதா உத்தேசம்னு கேக்கறீங்க. அதுதானே? கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். ஆந்திராவில் பழுத்த மாம்பழம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. ஆகிறதா? அங்கே யாராவது வாங்கிச் சாப்பிடுவார்கள். சாப்பிடுவார்களா? அப்புறம்? மாங்கொட்டையைத் தூக்கிக் குப்பையில் எறிவார்கள். எறிந்த கொட்டை விழுந்த இடத்தில், பருவநிலை, தட்பவெப்பம் போன்ற இதர சூழல்கள் ஒத்திருந்தால், இசைவாக இருந்தால், அங்கே ஒரு மரம் முளைக்கும். ஆந்திராவில் பழுத்த பழம் அமெரிக்காவில் இல்லாவிட்டாலும், அடையாறிலாவது முளைக்கும் அல்லவா?

ஆமாம். அதுக்கென்ன இப்ப? அதானே நீங்க கேக்கறது? ஒன்றை கவனியுங்கள். கையில் ஒரு பழத்தை எடுக்கும்போது, 'இது எங்கே பழுத்த பழம்' என்ற எண்ணம் உங்களுக்குள் எப்போதாவது ஓடியதுண்டா? உங்கள் கையில் உள்ள பழம் எவ்வளவு தூரத்தைக் கடந்து உங்கள் கைகளை அடைந்திருக்கிறது என்று யோசித்ததுண்டா? அடுத்தமுறை அமெரிக்காவில் மாம்பழம் வாங்கும்போது யோசியுங்கள். 'இவர் எங்கே பழுத்திருப்பார்? இவருடைய தாய்மரம் எங்கே நின்றுகொண்டிருக்கும்?' எதுக்கு அந்தக் கவலையெல்லாம் என்கிறீர்களா? சரி. இந்தப் பழம், லாரியேறி, ரயிலேறி, கப்பலேறி, விமானமேறி, கடல்கடந்து நீங்கள் பழம் வாங்கிய கடையை அடைந்ததே, அது ஏன்? அதை யோசிக்கலாமல்லவா? அதன் சதைப்பற்றும், சுவையும்தானே காரணம்? அதன் கொட்டையைப் பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறோமா? தின்று முடித்ததும் வீசி எறிவது ஒன்றுதானே வேலை! அட சரிதான். இந்தியாவைப் போல வீதியில் வீச முடியாவிட்டால் உங்கள் முறைப்படி குப்பைக்குப் போகப் போகிறது. இப்போது, மரம் செய்திருக்கும் தந்திரம் புலப்படுகிறதா?

மரம், உங்களுக்குப் பயன்படும் ஒன்றைக் கொடுக்கிறது. சதைப் பற்று நிறைந்த, சுவையும் ஊட்டச் சத்தும் கலந்த ஒன்றை, நன்றாக வெளியில் தெரியுமாறு வைத்திருக்கிறது. போதாக் குறைக்கு மணமென்றால் அப்படியொரு மணம் வீசி, உங்களை, 'வா, வா, வந்து என்னைப் பறி' என்று தூண்டுகிறது. நீங்களும் பறிக்கிறீர்கள். கொஞ்ச தூரத்துக்கோ அல்லது ரொம்ப தூரத்துக்கோ அந்தப் பழத்தைக் கொண்டு செல்கிறீர்கள். பழம் தின்று கொட்டையையும் போட்டுவிடுகிறீர்கள்! அதுதானே மரத்துக்கு வேண்டியது! அதற்காகத்தானே, உங்களுக்குத் தேவைப்படுவதை வெளியில் வைத்து, உங்களுக்குக் கொஞ்சமும் தேவைப்படாத, ஆனால் தனக்கு அத்தியாவசியமான ஒன்றை, அந்தக் கனியின் உள்ளே பதுக்கி வைத்திருக்கிறது! இந்தச் சுவையான சதைப்பற்று இல்லாவிட்டால், யார் இந்தப் பழத்தை இவ்வளவு தொலைவுக்குத் தூக்கிச் செல்லப் போகிறார்கள்? இதன் விதை இன்னொரு இடத்தை எவ்வாறு சென்றடையும்?

இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். இனிப்புப் பண்டங்களை வாங்குகிறோம். அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு அட்டைப்பெட்டியைப் பிரித்ததும், தவறாமல் ஒரு சீட்டைப் பார்க்கலாம். அந்த இனிப்புப் பெட்டியை வாங்கிய கடையின் விலாசம், தொலைபேசி எண் அச்சடிக்கப்பட்ட சீட்டு அது. பெரும்பாலானோர் அதைப் படிக்கக்கூட மாட்டோம். தற்செயலாக அது அப்படியே கிடந்து, யாராவது, 'அட! இந்த இனிப்பு இவ்வளவு சுவையாக இருக்கிறதே! எந்தக் கடையில் வாங்கியது இது?' என்று அந்தச் சீட்டைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை அந்தப் பக்கம் செல்லும்போது அந்தக் கடையின் நினைவு வரும். கடைக்குச் சென்று வாங்கத் தோன்றும். ஆயிரத்தில் ஒன்று, பத்தாயிரத்தில் ஒன்று என்றுதான் இப்படி நிகழும். ஆனால், ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் இந்த விவரம் இருந்தால்தானே, யாரோ ஒருவருக்காவது 'எந்தக் கடையில் வாங்கியது' என்று பார்க்கத் தோன்றும்? இந்த ஒரு நபருக்காகத்தான் இத்தனைப் பெட்டிகளுக்குள் இந்தச் சீட்டை வைத்தது. 'ஒவ்வொன்றும் பலனளிக்கிறதா என்று பார்க்காதே. கல்லை விட்டெறிந்துகொண்டே இரு. ஏதாவது ஒரு கல், கனியை வீழ்த்தலாம்'.

பயன்மரமும் அதைத்தான் செய்கிறது. லட்சம் கனிகளில் ஒன்று முளைக்கலாம். ஆனால் லட்சம் கனிகளுக்குள்ளும் விதை இருந்தே ஆகவேண்டுமே! ஒரே ஒரு விந்தணுதான் மகவாகிறது. ஆனால் அதற்காக லட்சக்கணக்கான விந்தணுக்கள் வெளிப்படுவதில்லையா! அப்படித்தான் பயன்மரம் உள்ளூரில் பழுப்பது. ஊருக்கு வெளியே பழுத்தாலும் பறிக்காமல் விடப்போவதில்லைதான். ஆனால், பருத்தி புடவையாகவே காய்த்துவிட்டதைப்போல், இந்தப் பயன்மரம், 'உள்ளூரில்' பழுத்திருக்கிறது. பழத்தை நீங்கள் சுமந்து சென்றீர்கள். அல்லது யாரோ சுமந்து கொண்டுவந்து கொடுத்தார்கள். உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். தேவையற்றதை விட்டெறிந்தீர்கள். அங்கே, தகுந்த சூழலிருந்தால் இன்னொரு மரம் முளைக்கிறது.

இங்கேதான் 'நயனுடையான்' என்ற சொல்லின் வலிமையான ஆட்சி புலப்படுகிறது. நயன் அல்லது நயம் என்பது எப்போதும் வெளிப்படத் தோன்றாது. தென்படாது. புலப்படாது. ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும். இப்போது நாம் இந்தக் குறளைப் பேசுகிறோமே, அதற்கு என்னவென்று பெயர்? நயனுரைத்தல். அதாவது, வெளியில் அவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்காத பொருளை எல்லோரும் உணரும்படி எடுத்து விரித்துரைத்தல். நயன் உள்ளே மறைந்திருக்கிறது. சாதாரணமாகக் கண்ணுக்குத் தென்படுவதில்லை. மிக ஆழமாக யோசித்துப் பார்த்தாலொழிய நமக்கு அது எட்டுவதில்லை. பலருக்கு அது தேவையுமில்லை. கிடைத்த பொருளின் முதல் தேவை பூர்த்தியானதா? அப்புறம் என்ன பேச்சு? பயன்படாத பாகத்தைத் தூக்கி எறி!

இங்கேதான் அந்த முடிச்சை வைக்கிறார் வள்ளுவர். இந்தச் செல்வந்தனும் கொடுக்கிறான். ஊருக்கெல்லாம் பயன்படும்படியாகத்தான் கொடுக்கிறான். அவன் கொடுப்பதால் ஊரெல்லாம், உலகெல்லாம் பசியாறுகிறது; வாழ்வின் சுவையை அனுபவிக்கிறது. அதே சமயம், கொடுத்தவனுடைய குலம் தழைக்கிறது. அவன் கொடுக்கும்போதே, தன் குலம் தழைப்பதற்கான வித்தை உள்ளே வைத்தே கொடுக்கிறான். இது யாரையும் ஏமாற்றும் வித்தை இல்லை. உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். வேண்டாததை வீசிவிடுங்கள். அப்புறம் நடப்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். வேண்டாட்டி, இயற்கை பார்த்துக் கொள்ளும்னு வச்சிக்கலாமே!

இந்தப் பயனெல்லாம் அந்த நச்சு மரத்துக்குக் கிட்டுமா? அதன் கனியை ஆந்திராவிலிருந்து அமெரிக்காவுக்கு யாராவது வரவழைப்பார்களா? அதன் விதையெல்லாம் எங்கே விழும்? அதன் குலம் தழைக்குமா! வேண்டாம். தழைக்க வேண்டாம். ஊருக்கு ஒரு நச்சுமரமே மிக அதிகம்!

ஊருணி, ஊருக்குப் பருக நீரைக் கொடுத்து, அதே சமயத்தில் தன்னை சுத்திகரித்துக் கொண்டு, ஊரின் பாதுகாப்பையும் பெற்றது. பயன்மரமோ, உங்களுக்குத் தேவைப்படுவதைக் கொடுத்து, கூடவே, உங்களுக்குத் தேவைப்படாத, ஆனால் அதற்கு அத்தியாவசியமான ஒன்றையும் உள்ளேயே பொதிந்து கொடுக்கிறது. ஊருணி, தன்னை மட்டும் பாதுகாத்துக் கொண்டது. பயன்மரம், தன் குலத்தையே தழைக்கச் செய்கிறது. அதுவும் எப்படி? ஊருக்கு உதவியபடி. யாருக்கும் எந்தத் தொந்தரவுமின்றி. மாறாக, அத்தனைப் பேரும் தேடிவந்து, நாடிப் பெற்றுக்கொண்டு செல்லும்படியாக ஒன்றைக் கொடுத்து, அதற்குள்ளே தன் குலம் தழைக்கும் வித்தையும் பொதிந்து வைத்து. வெளிப்படத் தெரியாமல், தனக்கு வேண்டியதை 'நைச்சியமாக' தொலைதூரத்துக்குச் சென்று விழும்படியான ஏற்பாட்டைச் செய்துகொள்ளும் இந்தக் கொடையாளனுக்கு 'நயன் உடையான்' என்ற அடைமொழி பொருத்தந்தானே? இந்த இரண்டு கொடைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு புலப்பட்டதா?

அடுத்தாகப் பெருந்தகையானைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com