நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர்
பழம்பெரும் நடிகரான ஆர்.எஸ். மனோகர் (81) ஜனவரி 10, 2006 அன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூரை பூர்வீகமாகக் கொண்ட மனோகர் 1925-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும் போதே நாடகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் பல்வேறு நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் மனோகர்.

நடிப்பின் மேல் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம் இவரைத் திரைப்படத் துறைக்குள் நுழைய வைத்தது. 1950-ம் ஆண்டு 'ராஜாம்பாள்' படத்தில் முதன்முதலாக நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

சுமார் 300 படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும் அவருக்கு நாடகங்கள் மேல்தான் அதிக ஆர்வம்.

மனோகர் நடிப்பில் வெளிவந்த 'கைதி கண்ணாயிரம்' மிகப் பெரிய வெற்றிப் படமாகும். சினிமாவில் பெரும்பாலும் இவர் ஏற்று நடித்தவை வில்லன் பாத்திரங்கள்தாம். கைதி கண்ணாயிரம், கொஞ்சும் குமரி, பெற்ற மகனை விற்ற அன்னை, பாபு, வண்ணக்கிளி என்று இவர் நடித்த படங்கள் பலவாகும்.

1954-ம் ஆண்டு 'நேஷனல் தியேட்டர்' என்ற பெயரில் நாடகக்குழு ஒன்றைத் தொடங்கிப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார். மனோகரின் குழுவில் அறுபதுக்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தன் குடும்ப அங்கத்தினராகவே கருதினார்.

எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நேஷனல் தியேட்டர் குழுவினர் நாடகங்களை நடத்தி சாதனைப் படைத்திருக்கின்றனர். இந்தியாவில் மும்பை, கோல்கத்தா, புதுதில்லி, நாக்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதரபாத் போன்ற நகரங்களிலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நாடகங்கள் நடத்தியிருக்கிறார். 1977-ல் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இக்குழுவினர் 78 முறை நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை படைத்தனர். 1982-ம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுமார் 87 நிகழ்ச்சிகள் நடத்தியதும் சிறப்பாகும்.

புராண காலக் கதைகளை கருவாகக் கொண்டு பல்வேறு நாடகங்களைத் தயாரித்து அளித்த மனோகர், ஒவ்வொரு நாடகத்திற்கும் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்துப் பிரமிக்க வைத்தார். இவரது 'இலங்கேஸ்வரன்' நாடகம் சுமார் 1862 முறை மேடையேறியது குறிப்பிடத் தக்கது. புகழ்பெற்ற நாடகங்களான சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், சுக்கிராச்சாரியார், பரசுராமர், ஒட்டக்கூத்தர் போன்ற நாடகங்களும் பலமுறை மேடையேறியிருக்கின்றன. சுமார் 31 நாடகங்களுக்கு மேல் இவர் மேடையேற்றியுள்ளார்.

இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளும், பட்டங்களும் இவரைத் தேடி வந்திருக்கின்றன. குறிப்பாக நாடகக் காவலர், நாடகப் பேரொளி, இசைப் பேறிஞர், முத்தமிழ்க் கலைக்கோன், பரமாச்சாரியர் விருது என்று பல பட்டங்கள் இவற்றில் அடங்கும்.

தன் அண்ணன் மகன் சிவபிரசாத்துடன் இணைந்து 'நரகாசுரன்' என்கிற நாடகத்தைச் சென்னைத் தொலைக்காட்சியில் 1990-ம் ஆண்டு வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சிக்காக ' இந்திரஜித்' என்கிற நாடகத்தைத் தயாரித்து வழங்கியது மட்டுமல்லாமல் அந்நாடகத்தில் ஆதிசேஷன் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

டி.கே. சண்முகம், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி போன்ற புகழ்பெற்ற நாடகக்குழுக்கள் எல்லாம் சினிமாவின் வருகைக்குப் பிறகு செயலிழந்துவிட்ட நிலையில் தன்னுடைய 'நேஷனல் தியேட்டர்' நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்தி வந்த ஆர்.எஸ். மனோகருக்கு 'நாடகக் காவலர்' என்கிற பட்டம் சாலப் பொருந்தும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com