ஓவியர் மாருதி
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் முத்திரை பதித்து வருபவர். பார்த்ததும் 'மாருதியின் ஓவியம் இது' எனச் சொல்லிவிடலாம், அப்படி ஒரு உயிர்த்துடிப்பு. அவர் வரைந்த ஓவியம் வெளிவராத பத்திரிகை கிடையாது. 'உளியின் ஓசை' படத்திற்கும் 'வீர மங்கை வேலு நாச்சியார்' ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிவமைத்ததுண்டு. 'ராஜராஜன் 1000' விழா மலரை அலங்கரித்தவை இவரது படங்கள். செம்மொழி மாநாட்டு விழா மலரிலும் இடம் பெற்றுள்ளன. புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் 'ஓவியக் கலைமாமணி' விருது பெற்றவர். அவருடனான சந்திப்பிலிருந்து...

கே: உங்களுக்குள் ஓர் ஓவியர் இருப்பதை எப்போது அறிந்தீர்கள்?
ப: அப்பா ஸ்கூல் டீச்சர். அவர் வரலக்ஷ்மி விரதத்தின் போது, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கலசத்தில் லக்ஷ்மி முகத்தை வரைந்து தருவார். அது எனக்கு முதல் தூண்டுதல் என்று சொல்லலாம். அப்பாவின் சாக்பீஸ் துண்டுகளை வைத்துத் தரையில், சுவர்களில் ஏதாவது வரைவேன். காரணம், புதுக்கோட்டையில் ஒருவர் சுவர்களில் எல்லாம் ஐயப்பன், அனுமார், அம்மன் என்று ஏதாவது சாக்பீஸால் வரைந்து, கீழே 'Mad Man of Mysore' என்று கையெழுத்துப் போட்டிருப்பார். நானும் அதுபோல வீட்டில் வரைந்தேன். பின்னர் பென்சிலால் வரையத் துவங்கினேன். தீப்பெட்டிப் படம், சிகரெட் படம், பக்கத்து வீட்டு விகடன், கல்கியில் இருக்கும் சில்பி, கோபுலு, மணியம் படங்களைப் பார்த்து அப்படியே வரைந்து பாரப்பேன். கே. மாதவனின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படித்தான் ஆரம்பித்தது ஓவியப் பயணம்.

கே: 'ஓவியம்தான் இனி என் வாழ்க்கை' என்று முடிவு செய்தது எப்போது?
ப: நான் நாலாவது ஃபார்ம் படித்துக் கொண்டிருந்தேன். அதீத ஓவிய ஆர்வத்தால் சரியாகப் படிக்காமல் ஃபெயில் ஆகி விட்டேன். அப்பா கோபித்துக் கொண்டார். ஓவியம் எல்லாம் வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராது என்று அட்வைஸ் பண்ணினார். நான் கேட்கவில்லை. சரி, நீ ஹைஸ்கூல் பாஸ் பண்ணி விடு. உன்னை கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்து விடுகிறேன் என்றார். நானும் முக்கி முனகிப் படித்துப் பாஸ் பண்ணினேன். என்னை புதுக்கோட்டை மன்னர் காலேஜில் சேர்த்துவிட்டார். எனக்கு அங்கு இருப்பே கொள்ளவில்லை. ஓவியம் பற்றிய நினைவும், கனவுமே என்னைத் துரத்தியது. எப்படியாவது சென்னைக்குப் போய்விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. புதுக்கோட்டை டவுன் ஹாலில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். சென்னையிலிருந்து பெரிய ஆட்கள் வந்து அங்கு பேசுவார்கள். அவர்களில் சிலரிடம் சென்னைக்குச் சென்று ஓவியர் வேலை செய்வது பற்றிக் கேட்டேன். "வேண்டவே வேண்டாம். படம் போடறவனுக்கெல்லாம் அங்க சாப்பாடே கிடைக்காது. ஒருவேளை நல்லா அழகா லெட்டரிங் எழுதத் தெரிஞ்சா சினிமாக் கம்பெனில வேலை கிடைக்கும். அதுவும் நிச்சயம்னு சொல்ல முடியாது" என்றார்கள். படம் போடுவதோடு சினிமா நோட்டீஸ், விளம்பரங்கள் எல்லாம் பார்த்து விதவிதமாகத் தலைப்புகள் எழுதவும் கற்றுக் கொண்டேன். ஒருநாள் துணிந்து சென்னைக்குப் புறப்பட்டேன்.

கே: சென்னை வாழ்க்கை எப்படி?
ப: ரொம்பக் கஷ்டம் தான். எனக்கு சென்னையில் யாரையுமே தெரியாது. வீட்டாரின் எதிர்ப்பை மீறி 1959 மார்ச் 11ம் தேதி நான் சென்னை வந்து சேர்ந்தேன். உதவிக்கும் யாரும் இல்லை. மைலாப்பூரில் ஒரு சினிமா விளம்பரக் கம்பெனியில் வேலை கிடைத்தது. மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்து, படம் இரண்டுமே வரையும் வேலை. அதோடு நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போதுதான் இவ்வளவு வண்ணங்கள் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிந்தது. புதுக்கோட்டையில் கலருக்கெல்லாம் சாத்தியமே இல்லை. எல்லாமே கறுப்பு, வெள்ளைதான்.

கே: முதல் ஓவியம் எப்போது வெளியானது?
ப: நான் விளம்பரக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கோபுலு, மணியம், சில்பி மூன்று பேரும் எனது மானசீக குருநாதர்கள். நான் சென்னைக்கு வந்ததே அவர்களைப் போலப் பத்திரிகை ஓவியன் ஆகவேண்டும் என்றுதான். ஒரு நாள் என் படங்களை எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.பி. அவர்களைப் பார்க்கப் போனேன். அவர் அவற்றை வாங்கிப் பார்த்தார். பின் சில சிச்சுவேஷன் சொல்லி, "இதை வரைஞ்சிக்கிட்டு வாங்க. பார்த்துட்டு சான்ஸ் தர்றேன்" என்று சொன்னார். அப்போது குமுதம் மாதம் மூன்று முறை வெளியாகிக் கொண்டிருந்தது. நான் வரைந்து கொண்டு போனேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு கதையைக் கொடுத்துப் படம் வரையச் சொன்னார். வரைந்தேன். என் பெயர் ரங்கநாதன். அதே பெயரில் ஓவியம் வெளியானால், நான் பார்த்துக் கொண்டிருந்த விளம்பரக் கம்பெனி வேலை போய்விடும். குமுதத்தில் மாதம் ஒருமுறை மட்டுமே சான்ஸ் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த பில்டிங்கின் பெயர் மாருதி ஃபார்மஸி பில்டிங். என் அப்பா ஒரு ஆஞ்சநேய பக்தர். அதனால் 'மாருதி' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன். அந்தப் பெயரில் அந்த ஓவியம் வெளியானது. சிறுகதையின் பெயர் 'அய்யோ பாவம்'. கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் என் நிலையும் அதுதான். அதுதான் பத்திரிகையில் நான் வரைந்த முதல் பத்திரிகை ஓவியம்.

கே: அதன் பின்....
ப: நான் வேலை பார்த்த விளம்பரக் கம்பெனி நலிவடையவே அந்த வேலையை விட்டுவிட்டேன். எஸ்.ஏ.பி. அதிக வாய்ப்புகள் தர ஆரம்பித்தார். அதே சமயம் போர்ட்ரெய்ட், ஆயில் பெயிண்டிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஓவியர் மாதவன் ஒரு மிகப் பெரிய மேதை. என்.எஸ். கிருஷ்ணனுக்கு அவர் அசோசியேட். டி.கே.எஸ். போன்றோரின் நாடகங்களுக்குப் பின்னணி செய்திருக்கிறார். அவருடைய கலரிங் சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சந்தித்து அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவரது உறவினர் நடராஜன் பேனர் எல்லாம் அற்புதமாக வரைவார். நடிகர் சிவகுமாருக்கு அவர்தான் குரு. யதேச்சையாக அவரைச் சந்தித்தேன். அவர், "நான் உனக்குத் தனியாக கற்றுத்தர முடியாது. நீ என் இடத்திற்கு வந்து நான் எப்படி வரைகிறேன் என்று அருகில் இருந்து பார்த்து கற்றுக்கொள். அதில் எனக்குப் பிரச்சனையில்லை" என்றார். தினமும் சென்று ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இரவில் வீட்டுக்கு வந்து வரைந்து பார்ப்பேன். இன்று நான் வரையும் பாணி, மாதவன், நடராஜன் ஆகியோர் பாணிதான். அவர்கள் இருவரும்தான் நேரடி குருநாதர்கள். படிப்படியாகப் பல பத்திரிகைகள், காமிக்ஸ், நூல்களுக்கு முகப்பு ஓவியம் என்று வேலை வந்தது.

கே: பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியம் வரைந்துள்ளீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
ப: எல்லாப் பிரபல எழுத்தாளர்களுக்கும் வரைந்திருக்கிறேன். ஜெயகாந்தன் கதைகளுக்கு வரைந்தது எனக்கு மிகப் பிடித்தது. நான் அவர் எழுத்தின் தீவிர ரசிகன். பல கதைகளை தேடித் தேடி வாசித்தவன். அவர் மாதிரி ஓர் எழுத்தாளர் மிகவும் அரிது. நீதியை, அறத்தை, புரட்சிகரமான சிந்தனைகளை, மன மாற்றத்திற்கு வலியுறுத்தும் கருத்துக்களை மையமாக வைத்து எழுதிய மிக முக்கியமான எழுத்தாளர் அவர். அவருடைய ஒரு படைப்பு கூட சோடை போனதில்லை. பிராமணர்கள் வாழ்க்கையாகட்டும், குப்பத்து ஏழை மனிதர்கள் வாழ்க்கையாகட்டும் அப்படியே படம் பிடித்துக் காண்பிப்பார். இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞன் ஜெயகாந்தன். 'கோகிலா என்ன செய்தாள்', 'ஒரு உயிரின் மரணம்', 'உண்மை சுடும்', 'பாரிசுக்குப் போ', 'உன்னைப் போல் ஒருவன்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என அவரது எல்லாப் படைப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு வரைந்தது எனக்கு மிகவும் பெருமையையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்த ஒன்று. அதுபோல நா.பா.வுக்கு வரைந்ததும் மறக்க முடியாது. லக்ஷ்மி எழுதுவதை விட்டுவிட்டு, ஆப்ரிக்காவில் போய் செட்டில் ஆகி, பின் மீண்டும் தமிழகம் வந்து இருபது வருடம் கழித்துத் திரும்ப எழுத ஆரம்பித்தார். எஸ்.ஏ.பி. அவரது 'கதவு திறந்தாலும்' என்ற அந்தத் தொடர்கதையை வெளியிட்டார். உணர்ச்சி மயமான அந்தத் தொடருக்குப் படம் வரைந்தது நான்தான். அதுபோல சுஜாதாவின் 'பத்து செகண்ட் முத்தம்' தொடருக்கு வரைந்திருக்கிறேன்.

கே: முன்போல் பத்திரிகைகளில் ஓவியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: உண்மைதான். முன்பெல்லாம் நிறைய சிறுகதைகள், தொடர்கள் வரும். இப்போதுதான் கதைகளே வருவதில்லையே. அதனால் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பத்திரிகை ஓவியத்தை மட்டுமே நம்பி ஒரு ஓவியன் வாழ முடியாது. முன்பும் இல்லைதான். ஆனால் பத்திரிகை ஓவியங்களோடு பிறவற்றையும் செய்து முன்னேற முடிந்தது. போட்டோஷாப், அனிமேஷன் தெரிந்தால் கொஞ்சம் பிழைக்கலாம். மேலும் மிகமிகக் குறைவான தொகைதான் ஓவியத்திற்குச் சன்மானமாகத் தரப்படுகிறது. இரண்டாவது, எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுப்பது போல ஓவியத்திற்குக் கொடுப்பதில்லை. ஒருமுறை வரைந்து கொடுத்தால், அது அவர்களுக்கே உரிமையாகி விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் திரும்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓவியர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். சங்கம் எல்லாம் வைத்து இதைக் கேட்க முடியாது. கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஓவியர்களுக்குச் சாதகமான நிலைமை பத்திரிகைகளில் தற்போது இல்லை என்பதுதான் உண்மை.

கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார்?
ப: நான் முன்பே சொன்னது போல மாதவன், நடராஜன், கோபுலு, சில்பி, மணியம் ஆகியோர்தான். எல்லோருமே பிறவிக் கலைஞர்கள். மணியம் ஒருமுறை கல்கியின் தொடருக்கு படம் வரைந்துகொண்டு போய் கல்கியிடம் கொடுத்தாராம். அதை வாங்கிப் பார்த்த கல்கி வெகுநேரம் பதில் பேசாமலே இருந்தாராம். கல்கியைப் பொறுத்தவரை அவர் படம் பார்த்துவிட்டு 'வச்சிட்டுப் போங்க' என்றால் படம் 'ஓகே' என்று அர்த்தம். இல்லாவிட்டால் அங்கேயே அமர்ந்து அவர் திருப்தியாகுமாறு படத்தைத் திருத்திக் கொடுக்க வேண்டும். அன்று வெகுநேரம் படத்தையே பார்த்துக் கொண்டிருந்த கல்கி பின் 'சரி, போங்க' என்றாராம். மணியத்துக்கு ஒரு சந்தேகம், தன் ஓவியம் அவருக்குப் பிடிக்கவில்லையோ என்று. அதனால், "ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்? படம் சரியில்லையா? வேறு வரைந்து தரவா?" என்றாராம். உடனே கல்கி, "அதெல்லாம் இல்லை. நான் எழுதிய கதையைவிட இந்த ஓவியம் தூக்கலாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி கதையில் என்ன மாற்றம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாராம். அப்படிப்பட்ட கலைஞர் மணியம். அப்படி கலைஞர்களுக்குச் சம மரியாதை அளித்து ஊக்குவித்தவர் கல்கி. கோபுலுவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தில்லானா மோகனாம்பாள் ஆகட்டும்; வாஷிங்டனில் திருமணம் ஆகட்டும். எல்லாம் விதவிதமாக மிக நுணுக்கமாக வரைந்திருப்பார். சில்பியைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. ஓவியத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவர்கள் எல்லாம் வெறும் பத்திரிக்கைக்காகவும், பணத்துக்காகவுமா வரைந்தார்கள்? இல்லவே இல்லை. இவர்கள் கலைஞர்கள். கலைக்காகவே வரைந்தார்கள். அவர்கள் யாருமே இதன்மூலம் பெரிதாகப் பணம் சம்பாதித்தார்கள் என்று சொல்லவே முடியாது. ஒரு தவம்போல இதைச் செய்தார்கள். அவையெல்லாம் தொகுக்கப்பட்டுப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

கே: குண்டு முகம், புசு புசு கன்னங்கள், சுருள் முடிகள், அழகான பெரிய விழிகள் என உயிரோட்டத்துடன் உங்கள் ஓவியப் பெண்கள் அமைந்துள்ளனர். இதற்கென்று ஏதாவது தனிப்பட்ட காரணம் உள்ளதா?
ப: எல்லோரும் வாலிபப் பருவத்தைத் தாண்டித்தான் வருகிறோம். அந்த வாலிபத்தில் ஒரு பெண்ணின் மீது காதல் இருக்கலாம். எனக்கும் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் காதலிக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதார நிலை இல்லை. அதை ஓவியம் சார்ந்த ஒரு ரசனை என்று சொல்லலாம். என்னை ஈர்த்த அந்தப் பெண்ணை அப்போது நான் விதவிதமாகப் பல கோணங்களில் வரைந்து பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணின் சாயல் என்னுடைய பல ஓவியங்களில் வெளிப்படுவதாகச் சொல்லலாம்.

கே: எழுதுவதற்கும், அதற்கு ஓவியம் வரைவதற்கும் என்ன வித்தியாசம்?
ப: "அவன் சென்ட்ரலில் வந்து இறங்கினான்" என்று ஒரு எழுத்தாளர் எழுதுவதற்கு அதிகபட்சம் 30 நொடிகள் ஆகியிருக்கும். ஆனால் இதையே படமாக வரைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய விஷயங்கள் தெரிந்தால்தான் அந்தப் படம் சாத்தியமாகும். வந்து இறங்கியவன் இளைஞனா, வயதானவனா, வேலை பார்ப்பவனா, வேலை இல்லாதவனா, ஸ்டூடண்டா, படித்தவனா, கிராமத்திலிருந்து வருகிறானா, நகரத்திலிருந்து வருகிறானா, அவன் கையில் ப்ரீஃப்கேஸ் வைத்திருக்கிறானா அல்லது பை வைத்திருக்கிறானா, சோகத்தோடு வருகிறானா அல்லது மகிழ்ச்சியான உணர்வில் வந்திருக்கிறானா என இப்படிப் பல விஷயங்களை படத்தில் கொண்டுவர வேண்டும். சென்ட்ரலையும் படத்தில் கொண்டுவர வேண்டும். காரணம் இது விஷூவல் மீடியம். இதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும்தானே! நிறையக் கற்பனை உணர்வும் நுணுக்க அறிவும் வேண்டும். அதனால்தான் மற்றவற்றை 'கலைகள்' என்றும் ஓவியம், சிற்பம் போன்றவற்றை 'நுண்கலைகள்' என்றும் அழைக்கிறார்கள். ஓவியம் என்பது ஒருவிதத்தில் தவம். தியானம். அதன் அளவுகோல் பணமல்ல. பணம் தேவைதான். ஆனால் ஒரு ஓவியத்தால் அதை வரைபவனுக்கும், அதைப் பார்த்து ரசிப்பவனுக்கும் ஏற்படும் திருப்தி, புரிந்துணர்வுதான் அதன் அளவுகோல். பணத்தை வைத்து ஓவியத்தை அளக்க முடியாது.

கே: நீங்கள் மிகவும் சிந்திக்கும் ஒரு விஷயம் என்ன?
ப: அரசியலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பிற துறைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான். பல எழுத்தாளர்களின், கவிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. அது நல்லது, வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டுடைமையான கல்கியின் எழுத்துக்களுக்குப் படம் வரைந்த மணியத்தின் படைப்புகள் நாட்டுடைமையானதா என்றால் இல்லை. சில்பி, கோபுலு, மணியம் எல்லாம் மிகப் பெரிய சாதனையாளர்கள். அவர்களது படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது அரசின் நிதி ஆதாரத்தையும், கொள்கையையும் பொறுத்தது. ஆனால் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களைச் சேகரித்து அவற்றைப் பொது இடங்களில் கண்காட்சியாக, நிரந்தர கேலரியாக வைக்க வேண்டும். அவர்களது வாழ்க்கை வரலாறு, சாதனைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த வேண்டும். இதை அரசு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். அரசால் முடியாவிட்டால் பிற அமைப்புகள் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் இந்தப் படைப்புகள், இவற்றை உருவாக்கியவர்கள் பற்றி வருங்காலத் தலைமுறைக்குத் தெரியாமலேயே போய்விடும். இது என் மனதில் இருக்கும் மிகப்பெரிய ஏக்கமும் கூட.

"எனது ஓவியப் பணிக்கு இடையூறு நேராமல் கவனித்துக் கொள்பவர் என் மனைவி விமலா. இன்று நான் இருக்கும் ஹவுஸிங் போர்ட் வீட்டை ஜர்னலிஸ்ட் கோட்டாவில் வாங்க அந்தக் காலத்தில் உதவிய, மறைந்த வலம்புரி ஜான் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். மனிதன் நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது" என்கிறார் மாருதி. புன்சிரிப்பு மாறாமல் தனது தீபாவளி மலர்களுக்கு வரையும் பணிக்குத் திரும்புகிறார். நீண்ட நேரம் ஒதுக்கி உரையாடியமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


எஸ்.ஏ.பி.
எஸ்.ஏ.பி. ஒரு ஜீனியஸ். குமுதத்தில் ஆரம்பத்தில் 'வர்ணம்' படம் வரைந்து கொண்டிருந்தார். பின்னர் ஜெயராஜ். அதன் பின்னர் நான் வந்தேன். குடும்பப் பாங்கான கதைகளுக்கு நான். சற்றே செக்ஸியான இளமைத் துடிப்புள்ள கதைகளுக்கு ஜெயராஜ் என்று எஸ்.ஏ.பி. பிரித்து வைத்திருந்தார். நான் கொஞ்சம் கவர்ச்சியாக இளமைத் துள்ளலோடு கதாநாயகியை வரைந்தால் கூட அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். "வேண்டாம். மாருதி. மாராப்பை மூடுங்க" என்று சொல்வார். ஜராசுவிடம் (பாக்கியம் ராமசாமி) அவர் "மாருதி செக்ஸியா படம் வரைந்தால் அக்செப்ட் பண்ணாதீங்க' என்று சொல்லி வைத்திருந்தார். பத்திரிகைகளுக்காகத்தான் ஓவியர்களே தவிர, ஓவியர்களுக்காகப் பத்திரிகைகள் இல்லை என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். அந்தக் காலத்தில் அட்டைப் படத்திற்கான போட்டோக்களை ட்ரான்ஸ்பரன்ஸிக்காக பம்பாய்க்கு அனுப்பித்தான் ப்ராசஸ் செய்ய வேண்டும். அதுவும் முன்னாலேயே அனுப்பி வைத்தால்தான் அது ப்ராசஸ் ஆகி வரும். அதற்கே ஒரு மாதம் ஆகி விடும். எஸ்.ஏ.பி., வர்ணம் அவர்களை வைத்து ரஃப் ஆக ஒரு படம் ரெடி செய்து கொள்வார். அதை மாடலாக வைத்து அதே கலர், ட்ரான்ஸ்பரன்ஸி அடுத்தடுத்த வாரங்களில் அட்டைப்படமாக வரக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதனால்தான் வாராவாரம் அட்டையில் அவரால் வித்தியாசம் காட்ட முடிந்தது. அவரிடம் தயாரானதால் என்னிடமும் அந்த நுணுக்க உணர்வு நிறையவே உண்டு. அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் பட்டறையில் தயாரான பெருமை எனக்கு உண்டு.

மாருதி

*****


சில்பியின் ஆசி
நான் அப்போது ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை விகடனில் திருக்கோகர்ணம் கோயில் பற்றிய படம் வந்திருந்தது. சில்பி வரைந்திருந்தார். நானும் என் நண்பனும் அந்தப் படங்கள் வந்த இதழை எடுத்துக் கொண்டு கோயிலின் பின்புறத்துக்குப் போனோம். அங்கே சிறியதாக ஒரு குன்று இருக்கும். அதிலிருந்து சில்பி வரைந்திருந்த அந்த கோபுரங்களைப் பார்த்தோம். கோபுரத்துக்கு முன்னால் தெரியும் மரத்தின் இரண்டு கிளைகள், கீழே தெரியும் சிறு பாறைகள், சுதைச் சிற்பங்கள், அவற்றில் ஒரு சிலவற்றின் மேல்பாகம் வெயில் பட்டு வெளுப்பாக இருப்பது, கீழ்ப்பாகம் பாசி படர்ந்து அழுக்காக இருப்பது, தொலைவில் சில மலைகள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக வரைந்திருந்தார் சில்பி. ஆகா எப்பேர்ப்பட்ட மகா கலைஞன் என அங்கிருந்தே அவருக்கு மானசீகமாக நமஸ்காரம் செய்தேன். சென்னைக்கு வந்ததும் அவரை எப்படியாவது சந்தித்து ஆசி பெற வேண்டுமென நினைத்தேன். பலமுறை முயற்சித்தும் நிறைவேறவில்லை. அவர் டூர் போய்க்கொண்டே இருந்தார். வருடங்கள் ஓடின. ஒருநாள் குமுதத்தில் இருந்து நான் மைலாப்பூர் செல்ல பேருந்துக்கு நின்று கொண்டிருந்த போது சில்பி கையில் சில பேப்பர்களுடன் ஒரு பஸ்ஸில் ஏறினார். நானும் அதே பஸ்ஸில் ஏறினேன். கூட்டமாக இருந்ததால் நின்று கொண்டே வந்தார். பின்னர், அவர் அமர்ந்த சீட்டுக்கு அருகிலேயே நானும் அமர்ந்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரைப் பார்க்க விரும்புவது பற்றிச் சொன்னேன். "பெரும்பாலும் நான் கார்த்தால மடியோட பூஜையிலே இருப்பேன். நீங்க 10.30-10.45 மணிக்கு வந்தா பார்க்கலாம். அதுக்கப்புறம் பூஜையில உட்கார்ந்திட்டா என்னைப் பார்க்க முடியாது. நான் சீதம்மா காலனில இருக்கேன்" என்றார். நான், "சார். வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுக்கணும்ங்கறது என்னோட எண்ணம் இல்லை. சின்ன வயசுல இருந்து உங்க ஓவியத்தைப் பார்த்து வரைஞ்சி கத்துக்கிட்டவன். எனக்கு உங்களோட ஆசிர்வாதம் வேணும். அவ்ளோதான். எனக்கு சில்பி இருக்குற இடம்தான் முக்கியம். அது வீடா இருந்தா என்ன, இந்த பஸ்ஸா இருந்தா என்ன?" என்று சொல்லி அங்கேயே குனிந்து அவர் காலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டேன். அவர் "நன்னா இருப்பேள்... நன்னா இருப்பேள்..." என்று ஆசிர்வதித்தார். இது நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். சில்பி காலமாகி விட்டார் என்று தகவல் வந்தது. நான் மட்டும் அன்று அவரைச் சந்தித்து ஆசி பெறாதிருந்தால் என் வாழ்நாள் முழுக்க அது தீராத ஏக்கமாகவே இருந்திருக்கும்.

மாருதி

*****


"அவ நிஜமா இருக்காய்யா!"
நான் லாட்ஜில் தங்கி இருந்த காலம். ஓவிய வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம். சபலம் உள்ள ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட கதை ஒன்றிற்கு வரையுமாறு குமுதத்தில் கேட்டிருந்தார்கள். நானும் அழகான ஒரு பெண்ணை வரைந்து கொடுத்தேன். அதை எஸ்.ஏ.பி. பார்த்துவிட்டு, "இந்தப் படம் அழகாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதைக்குப் பயன்படுத்த முடியாது. மாருதியிடம், கதையை மீண்டும் ஒருமுறை நன்றாகப் படித்துவிட்டு வரையச் சொல்லுங்கள். இந்தக் கேரக்டர் படத்தில் வர வேண்டும். படத்தில் அது தெரிய வேண்டும்" என்று சப்-எடிட்டரிடம் சொல்லி அனுப்பி விட்டார். கதையை மீண்டும் நன்றாகப் படித்து அந்தப் பெண்ணின் பகட்டு, பல்வரிசை, மூக்குத்தி, சுருள் முடி, காதுத் தொங்கல்கள், உடல் பாவனை என எல்லாவற்றையும் கற்பனை செய்து வரைந்து கொடுத்தேன். அது அப்ரூவ் ஆகி இதழும் வெளியாகி விட்டது. புத்தகம் வெளியான மறுநாள் நான் தங்கியிருந்த லாட்ஜுக்கு ஒரு போன், "மாருதி இருக்கிறாரா?" என்று. நான் அப்போது வெளியே போயிருந்தேன். நான் திரும்ப வந்ததும் மீண்டும் போன். பேசியவர் அந்தக் கதையை எழுதிய எழுத்தாளர். "குமுதத்துல உங்க நம்பர் வாங்கினேன். நான் உடனே வந்து உங்களைப் பார்த்தாகணுமே. நீங்க எங்க தங்கியிருக்கீங்க?" என்றார். நான் மைலாப்பூரில் இருக்கும் இடத்தைச் சொன்னேன். அவர், "நான் பக்கத்துல அஜந்தா ஹோட்டல் பின்னாடி, டீச்சர்ஸ் காலனிலதான் இருக்கிறேன். இப்ப உங்கள பார்க்க வரட்டுமா?" என்றார். நான் சரி என்றேன். சிறிது நேரத்தில் அவர் வந்தார். ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே வந்தவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, "எப்படிய்யா உனக்குத் தோணிச்சி. அந்தக் கேரக்டரை அப்படியே வரைஞ்சிருக்கியேய்யா. அவ நிஜமா இருக்காய்யா. நான் எதை நினைச்சி எழுதினேனோ அதை நேர்ல பார்த்தது மாதிரி அப்படியே கொண்டு வந்திட்டியேய்யா!" என்று கைகுலுக்கிப் பாராட்டினார். அந்தக் கதையின் பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் மிகப் பெரிய ஹிட். எக்கச்சக்க வாசகர் கடிதங்கள். எழுத்தாளரின் மனம் திறந்த அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது. இடம் தேடி வந்து அந்தக் காலத்தில் என்னைப் பாராட்டியவர், இன்றைய எழுத்துலக ஜாம்பவான் பாலகுமாரன்தான்.

மாருதி

© TamilOnline.com