செப்டம்பர் 2012: வாசகர் கடிதம்
தென்றல் ஆகஸ்ட் இதழ் ஒரு பொக்கிஷம். அப்பப்பா! பாரதி மணியின் நேர்காணல் அற்புதம். அவர் ஒரு சகலகலா வல்லவன். இந்த வயதிலும் அயராமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார். ராஜேஸ்வரி, ஷைலஜாவின் சிறுகதைகள் மனதை உருக்கின. டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரனின் 'அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரியவேண்டும்' அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பிரதிபலிக்கிறது. அடுத்த தென்றல் எப்போது வீசும் என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறோம்.

பிராந்தியன்கரை ராமபத்ரன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா.

*****


'தென்றல்' ஜூலை 2012 இதழ் பார்த்தேன். ர.சு. நல்லபெருமாள் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. அவர் எழுதிய 'கடல் தாண்டிய உறவுகள்' சிறுகதை அருமை. எல்லே சுவாமிநாதன் எழுதிய 'பொருத்தம்' சிறுகதையைப் படித்து மகிழ்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சீதா துரைராஜ் எழுதிய அழகர் கோயில் கட்டுரை அருமை. அவர் கட்டுரையில் “இம்மலை எப்போது தோன்றியது என அறிய முடியாத பழமை வாய்ந்தது” என்று எழுதியுள்ளார். மலை தோன்றியது பற்றிய விவரத்தை 'திருவிளையாடற் புராணம் கதைச்சுருக்கம்' (லிஃப்கோ வெளியீடு) நூலில் 'மாயப் பசுவை வதைத்த படலம்', 'நாகமெய்த படலம்' என்ற கட்டுரைகளில் காணலாம். பேரா. ஸ்ரீநிவாச வரதனின் நேர்காணல் சிறப்பு. அவரது அடக்கமும், பண்பும் குறிப்பிடத் தக்கன. மரு. வரலட்சுமி நிரஞ்சனின் கட்டுரை பயனுள்ளது.

பி.பி. சுந்தரேசன்,
ஸ்டோன்ஹாம், மாசசூசெட்ஸ்

*****


ஒவ்வொரு மாதமும் தென்றல் இதழை ஆவலுடன் படிப்பேன். இம்மாதம் ஷைலஜா எழுதிய 'ரங்கதாசி' சிறுகதை என் நெஞ்சைத் தொட்டது. அதில் வர்ணிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான பூங்கோதை தன்னைக் கெட்ட சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ரயிலிலிருந்து காவிரியில் பாய்ந்தது, பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரைக்கூடப் பெரிதாகக் கருதுவதில்லை என்பதைக் காட்டியது. ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.

கௌசல்யா சுவாமிநாதன், ப்ளசண்டன், கலிஃபோர்னியா

*****


ஆகஸ்ட் 2012 இதழில் 'மதுரை மணி ஐயர்' நினைவுப் பார்வை மிகவும் அருமை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோத்ஸவ இசைக் கச்சேரியில் அவர் 'காணக் கண் கோடி வேண்டும்' (காம்போதி), 'கருணை நிலவு பொழிவதனம்' (மோகனம்), 'எப்போ வருவாரோ' (ஜோன்புரி), பாரதியாரின் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே', 'வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்' பாடல்கள் அனைவரின் உள்ளம் கவர்ந்தவை. அவரது இங்லீஷ் நோட்ஸ் 1968ல் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம் பெற்றது.

ஆராவமுதன்,
கொலம்பஸ், ஒஹையோ

*****


தென்றல் ஜூலை இதழில் பேரா. சீனிவாச வரதன் நேர்காணல் அவருடன் நேரில் பேசுவது போல் இருந்தது. அதேபோலவே அமைந்திருந்தது ஆகஸ்ட் இதழில் பாரதிமணி நேர்காணலும். பேரா. ஜார்ஜ் ஹார்ட்டின் தன்னலமற்ற தமிழ்ச்சேவை பாராட்டுதலுக்கும் அப்பாற்பட்டது. தென்றல் சிறுகதைகள் யாவுமே சிறப்பு. எல்லே சுவாமிநாதன் என்றவுடன் நகைச்சுவையை எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. 'சில மாற்றங்கள்' கதையின் முடிவு எதிர்பாராததாக, சில பகை உணர்வு கொண்ட உள்ளங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தது. 'ஹரிமொழி' திருக்குறளைப் புதிய கண்ணோட்டத்தில் கண்டு ரசிக்கவும் மேலும் புதிய குறட்பாக்களைக் கற்கவும் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. ஆசிரியரின் எழுத்து நடை குறும்பும் நகை உணர்வும் கூடியதாக உள்ளது.

சுபத்ரா பெருமாள்,
கூபர்டினோ, கலிபோர்னியா

*****


என்போன்றவர்களுக்குத் தென்றல் செய்துவரும் சேவைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நம் குழந்தைகளுக்கு நாம் யார், நமது அடையாளம் என்ன என்று காண்பிப்பதில் தென்றல் ஆற்றிவரும் பங்கு மிகப் பெரியது. வாழ்த்துக்கள்.

ரங்க சந்தானம்,
ஸ்ட்ரீம்வுட், இல்லினாய்.

*****


'தென்றல்' ஆகஸ்ட் இதழில் பி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'மனசாட்சி' கதை நேர்மையாக வாழ நினைக்கிற மனிதரின் வலி எப்படியிருக்கும், அவர்களின் சூழல் அவர்களை எப்படியெல்லாம் மாறத் தூண்டுகின்றது, மாறவைக்கிறது என்பதையும், அந்த மாற்றத்தால் வலி வந்தவுடன் மனசாட்சி எப்படித் தன் மனதை வேதனைப்படுத்துகிறது என்பதையும் ஒரு திரைப்படம் போலக் கதை வடிவாக அமைத்துள்ளது அருமை. பாராட்டுகள்.

ப.ராமசாமி,
டிராய், மிசிகன்

© TamilOnline.com