இரவாகவே விடிந்தது
தற்செயலாகத்தான் அன்று நாட்டுக்கூத்துக்கு போவதென்று முடிவானது. விஜய மனோகரன் என்னும் தென்மோடி நாட்டுக்கூத்து கனடிய கிறிஸ்தவக் கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை, 11 ஆகஸ்ட் அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் கனடாவில் மேடையேறிய நாட்டுக்கூத்துகள் என் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. ஆகவே அரைமனதோடுதான் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். அன்று நான் போகத் தவறியிருந்தால் அந்த இழப்பு எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என இப்போது உணர்கிறேன்.

கிராமங்களில் கூத்து இரவு நேரத்தில் தொடங்கி அடுத்தநாள் காலைதான் முடியும். நடிகர்கள் எட்டுக்கட்டை சுருதியில் பாடும் குரல்வளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்; பாடவும் ஆடவும் நடிக்கவும் வசனம் பேசவும் தெரிவது அவசியம். இந்த நிலைமையில் கனடாவில் எப்படி கூத்துப் போட முடியும்? ஆனால் இத்தனை பிரச்சனைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இலங்கையில் தேசியவிருது பெற்ற பிரபல நெறியாளர் ம. ஜேசுதாசன். நாட்டுக்கூத்தை இரண்டரை மணி நேரத்துக்குச் சுருக்கி வழங்கிவிட்டார் இவர். நடிகர்களை தேர்வுசெய்து நாலு மாத காலமாகத் தீவிர பயிற்சி கொடுத்த பின்னர் கூத்தை மேடையேற்றியிருக்கிறார். ஒவ்வொரு நடிகரின் உடையிலும் கண்ணுக்குத் தெரியாமல் ஒலிவாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் அரங்கத்தின் கடைசியில் இருந்தவருக்கும் குரல் கணீரென்று கேட்டது. மிகச்சிக்கலான மின்விளக்கு அமைப்புக் கொண்ட மேடையை நாடகத்துக்கு பொருத்தமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

விஜய மனோகரன் நாட்டுக்கூத்து யாழ்ப்பாணக் கரையோரப் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. கதைச்சுருக்கம் இதுதான்: ராச்சிய பரிபாலனத்தில் சோர்வடைந்த கோதி மன்னன் ஒருநாள் நாட்டின் விடிவுக்காகத் தவம் செய்ய எண்ணி ஆட்சியை ஆஞ்சலோ பிரபுவிடம் ஒப்படைத்துவிட்டுக் காடு செல்கிறான். அரசனாகப் பதவியேற்ற ஆஞ்சலோ நாட்டின் சட்டதிட்டங்களை மாற்றி மக்களை வதைத்து கொடிய ஆட்சி புரிகிறான். இவனது ராச்சியத்தில் விக்கிரமசிங்கன், உக்கிரமசிங்கன் என்னும் நண்பர் இருவர் கொலை கொள்ளை கற்பழிப்புகளை அரசனின் அனுசரணையுடன் செய்து வந்தனர். விஜயன், மனோகரன் ஆகிய இருவர் நேர்மை நெறி தவறாது வாழும் நண்பர்கள். விக்கிரமசிங்கன், விஜயனின் தங்கையான ஞானத்தைத் திருமணம் செய்ய வெறிகொண்டிருக்கிறான். இதற்கு விஜயனும் அவனது தங்கையும் சம்மதம் கொடுக்காத காரணத்தால் ஞானத்தைக் கடத்திச் செல்ல முயன்றபொழுது விஜயனின் நண்பன் மனோகரன் அவளைக் காப்பாற்றுகிறான். இதனால் கோபமடைந்த விக்கிரமசிங்கனும், உக்கிரமசிங்கனும் அரசன் ஆஞ்சலோவிடம் விஜயனும் மனோகரனும் அரசனுக்கெதிராகச் சதிசெய்கிறார்கள் எனப் பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆஞ்சலோ விஜயனையும் மனோகரனையும் தூக்கிலிடக் கட்டளையிடுகிறான். வனம் சென்ற கோதி மன்னன் இதையறிந்து மீண்டும் நாட்டிற்கு வந்து விஜயனையும் மனோகரனையும் காப்பாற்றி நாட்டையும் மீட்டெடுக்கிறான்.

நடிகர்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்ததால் பெயர் சொல்லிப் பாராட்டத் தேவையில்லை. எனினும் ஓரிருவரின் நடிப்பைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆஞ்சலோவாக நடித்த ஜோசப் அந்தோனிப்பிள்ளை, கண்களை உருட்டி, நெஞ்சை நிமிர்த்தி மிடுக்குடன் கால்களை தாளக்கட்டுக்கு உதைத்து ஆடியது நினைவில் நிற்கிறது. விஜயனாக நடித்த அன்ரன் அருக்கன்சிப்பிள்ளை வசனம் பேசும்போது அத்தனை நறுக்காகவும் உச்சரிப்பு சுத்தமாகவும் பேசினார். விக்கிரமசிங்கனாக நடித்த அல்ஃபிரெட் பிலிப்புபிள்ளையின் அகலமான உடற்கட்டும், ஆடையலங்காரமும், காத்திரமான குரலும் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்து, அவர் மேடையில் தோன்றும் போதெல்லாம் சபையில் சலசலப்பு ஏற்படக் காரணமாயிருந்தது. விஜயன் நீண்ட வசனம் பேசி நிறுத்த விக்கிரமசிங்கனிடம் பதிலாக 'ஊம்' என்ற உறுமல் மாத்திரம் வரும். சபையில் கரகோஷம் எழும். கதாநாயகி ஞானமாக நடித்த பெண் லெஃபன்ரா அந்தோனிப்பிள்ளை. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், அருமையான தமிழ் உச்சரிப்பில் பேசியும், பாடியும் ஆடியும் நடித்தும் சபையோர் மனத்தில் இடம்பிடித்தார்.

ஒரு காட்சி முடிந்து திரை விழுந்ததும் 'அட, இத்தனை அழகாகச் செய்திருக்கிறார்களே! அடுத்த காட்சி என்னவாயிருக்கும்?' என்று யோசனை எழும். உடனேயே அடுத்த காட்சி தொடங்கும். அதைப் பார்த்தால் முந்திய காட்சியிலும் பார்க்க ஒருபடி மேலானதாகத் தோன்றும். அடுத்த காட்சிக்கு தயாராவோம். அது இன்னும் மெருகேறிக்கொண்டு போகும். இப்படி ஒவ்வொரு காட்சியும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு நிற்கும். என் நண்பர் ஒருவர் பனிக்காலத்தில் ஐஸ்லாந்துக்கு போனார். அங்கே இரவு முடிந்து அடுத்த நாளுக்குக் காத்திருந்தபோது அடுத்த நாளும் இரவாகவே விடிந்தது என்றார். அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

கோதி மன்னன் காட்டுக்குத் தவம் செய்யப் புறப்பட்டபோது ராணி அவனைப் போகவேண்டாம் என்று தடுப்பார். மன்னனோ மனம் மாறவில்லை, ஆனால் ராணி தொடர்ந்து கெஞ்சுவார். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் சீஸரை அரசவைக்குச் செல்லவேண்டாம் என மன்றாடும் கல்பூர்னியாவை இந்த இடம் ஞாபகமூட்டும். சொற்ப நேரமே ராணி மேடையில் தோன்றினாலும் நாடகம் உயிர்பெறுவது அங்குதான். ராணியின் அழகும், உணர்ச்சி பாவமான நடிப்பும், பாட்டும், ஆட்டமும், வசனமும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன. இதிலே எல்லோரையும் ஆச்சரியப்படவைத்த விசயம் ராணியாக நடித்தவர் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்.

ஒரு மேடை நிகழ்வு நல்லது என்று முடிவு செய்வதற்கு அதில் ஆகக் கடைசியான பாத்திரம் எப்படி நடித்தது என்பதையும் பார்க்கவேண்டும். உதாரணத்துக்குக் கதாநாயகி ஞானத்தின் தோழியாக வந்த பெண். அவருக்கு வசனமே இல்லை. கதாநாயகியின் பின் செல்வதுதான் அவர் வேலை. இருந்தும் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் தன் இருப்பை முக்கியமாக்கி சபையோரின் கவனத்தை ஈர்த்துவிட்டார். நெறியாளரின் நுணுக்கமான கவனிப்பு சிறுசிறு பாத்திரங்களையும் மெருகேற்றிவிட்டது.

'இந்த வெற்றியின் ரகசியம் என்ன?' என்று இசைத்தென்றல் ம. ஜேசுதாசனிடம் கேட்டபோது அவர் சொன்னார், 'வடமோடி நாட்டுக்கூத்தில் ஆட்டத்திற்குத்தான் முக்கிய இடம். ஆனால் தென்மோடி நாட்டுக்கூத்தில் இசைதான் அதன் ஆதாரம். ஆகவே எல்லா நடிகர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே இசைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இசை அறிவுக்கு ஏற்றமாதிரிப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் ரகசியம் ஒன்றுமில்லை. ராகசுத்தம், சுருதி, தாளம் அவ்வளவுதான். இவை சரிவந்தால் கூத்து சரிவருகிறது என அர்த்தம்.'

இந்தக் கூத்தின் வெற்றிக்கு காரணம் பிரபலமான அண்ணாவியார் ம. ஜேசுதாசன் நெறியாள்கை மற்றும் பிற்பாட்டு வந்து இணைந்து நடிகர்களை அணைத்துக்கொண்டு போனதுதான். ஜேசுதாசன் கீபோர்டில் வாசிக்க அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அன்ரன் சுவகீன்பிள்ளை, ஜூட் நிக்கொலஸ், கலாசினி பரமநாதன், மனுவல் ஜேசுதாசன்; டோலக் ஜெகதீஸ் மற்றும் தபேலா டின்சன் வன்னியசிங்கம்.

இதைத் தயாரித்த எஸ்.ஜே.வி. ஆனந்தன், பாரம்பரியக் கலையை அதன் ஆத்மா கெடாமல் நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தியிருந்தார். மேடையமைப்பு, உடையலங்காரம், ஒப்பனை ஆகியவற்றைத் தனியொருவராகப் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருப்பது இவரது சாதனை. இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி கனடா சன்னிபுரூக் மருத்துவ நிலையத்தின் கேன்சர் பிரிவுக்கு வழங்கப்படுகிறது. தென்மோடி நாட்டுக்கூத்து கலையை மேலும் வளர்த்தெடுத்து இன்னும் பல மேடையேற்றங்களை ஆனந்தன் செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.

அ.முத்துலிங்கம்

© TamilOnline.com