என்பும் உரியர் பிறர்க்கு
சிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். "தணிகண்ணா, ஹெட் ஆபீஸ் பை தப்பா வந்திருக்கு" கத்தினான் கிட்டாமணி. பையை எடுத்துக் கொண்டு மேலாளரிடம் சென்றார் தணிகாசலம். வழியிலேயே வெடுக்கெனப் பிடுங்கப்பட்டது பை. மேஜை மேலிருந்த கத்தியை எடுத்து இமைக்கும் நேரத்தில் பையைப் பிரித்து விட்டான் நாணு.

"அடடா, இந்தத் தடியனை யார் உள்ளே விட்டது? பையைத் தப்பா பிரிச்சதுக்கு, அதுவும் ஹெட் ஆபீஸ் போறதை இப்படி செஞ்சு வச்சா எஸ்.எஸ்.பி வரை போய்டுமே," புலம்பியபடியே நாணுவை ஓங்கி ஒரு அறை விட்டார் தோத்தாத்ரி. கன்னத்தைப் பிடித்தபடியே "பைத்தாரா, பைத்தாரா, இரு ஒன்னை எர்ரர் புக்லே போட்டு என்ன பண்றேன் பார்" எனக் கத்தியபடி மாடியிலிருந்த அவர்கள் பகுதி நோக்கி ஓடினான் நாணு. வேகமாக அவனைத் தொடர்ந்த தோத்தாத்ரி, "மைதிலி, இந்த சனியனைக் கீழே அனுப்பாதேன்னு எத்தனை தரம் சொல்றது? இவனால நான் சீக்கிரமே டிஸ்மிஸ் ஆகி வீட்டில் உட்காரந்துடுவேன் போலிருக்கு. தினந்தினம் இவனோட தாவு தீர்ந்து போறது," என்று இரைந்தார்.

"மைதிலி, இந்த தோத்து என்னை அடிக்கிறான்; அவனுக்கு மத்தியானம் லங்கணம் போட்டுடு. எதிர் வீட்டு திண்ணைத் தாத்தா தான் கட்டு வந்தாச்சா பார்க்கச் சொன்னார். தணிக அண்ணா, மணி அண்ணால்லாம் பை பிரிக்கலாம், நான் மட்டும் கூடாதோ? நீயும் ஒன் ஆபீசும்" என்றபடி பழிப்புக் காட்டிக் கொண்டே சென்றான் நாணு. கீழே வந்ததும் எல்லோருடைய பரிதாபப் பார்வையைத் தவிர்த்து "அவரவர் வேலையைப் பாருங்க சார். நான் எப்படியாவது இதை சரி பண்ணப் பார்க்கிறேன்" என்றார். இதைப் போல் எத்தனையோ பார்த்த அலுவலர்களும் மனதுக்குள் உச்சுக் கொட்டியபடி வேலையைக் கவனிக்கச் சென்றனர்.

*****


ஐம்பது வருஷங்களுக்கு முன் வக்கீல் வரதாச்சாரி பெயரைக்கூட உரத்துச் சொல்ல மாட்டார்கள்; அவ்வளவு தூரம் எட்டுக்கண் விட்டுப் பறக்கும் அவர் அதிகாரம். கோர்ட்டில் நுழைந்து விட்டால் ஜட்ஜ்கூட எழுந்து நிற்காத குறையாக மரியாதை அளிப்பார். கோடி கொடுத்தாலும் மனதில் தவறு என்று பட்டுவிட்டால் அந்தக் கேஸைக் கையாலும் தொடமாட்டார். இவரது வாதங்களில் எதிராளி வக்கீல் கேஸ் கட்டைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து விடுவார் என்று பேச்சு. தோத்தாத்ரி பிறந்து இருபது வருஷத்துக்குப் பிறகு, அவர் வழியிலேயே சொல்வதென்றால், பெற்றவளுக்கு யமனாகவே பிறந்த பிராரப்த கர்மா நாணு.

வக்கீல் கனவு ஏதும் காணாமல் இளநிலைப் படிப்பை முடித்திருந்த தோத்தாத்ரிக்கு அஞ்சல் துறையில் வேலை கிடைத்தது. மனைவி மைதிலி அனுசரணையாக அமைந்ததும் துறைத் தேர்வுகள் எழுதி மேலாளர் வரை பதவி உயர்வுகள் பெற்றதும் அதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டன. வரதாச்சாரி தம் காலத்துக்குப் பின் சொத்தை மட்டுமின்றி மன வளர்ச்சியற்ற இந்தக் குழந்தையையும் விட்டுச் சென்றுவிட்டார்.

தான் பெற்ற மகன், மகளுக்கு இணையாகத்தான் நாணுவையும் வளர்த்து வருகிறார் தோத்தாத்ரி. நாணு வளர வளர அவனால் தொல்லைகள் அதிகமாகி விட்டன. அவராலும் பொறுக்க இயலாது இப்படி சில சமயம் நேர்ந்துவிடுகிறது. ஆனால் மைதிலி அவனிடம் மற்றவர்களைவிட அதிகப் பாசத்தைப் பொழிந்து வந்தாள். ஆயிரம் முரட்டுத்தனம் இருந்தாலும் மைதிலியிடம் மட்டும் அடங்கி அவள் சொல்கேட்டு நடப்பதுடன் சிறுசிறு உதவிகளும் செய்வான். அவனை யாரும் சீண்டினால் உடனே அவர்களைத் திட்டி வெளிச் சண்டை கொண்டு வந்துவிடுவான். அக்கம் பக்கத்தவர்கள் நல்ல விதமாகப் பழகினால் அவர்களுடைய குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவது போன்ற சிறு ஒத்தாசைகள் செய்வான். அவ்வப்பொழுது இப்படித்தான் 'ஓடம் கவிழ்த்த' கதையாக ஏதாவது செய்து திட்டு அடி வாங்குவானே தவிர அவன்மேல் குடும்பத்தினர் அனைவருக்கும் பாசத்தில் குறைவில்லை.

*****


வேலை முடிந்து அஞ்சலகத்தைப் பூட்டிக் கொண்டிருந்தார் தோத்தாத்ரி. "அண்ணா, மைதிலிக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு; அழுதுண்டே இருக்கா. எனக்கு பயமா இருக்கு" என்றபடி ஓடிவந்தான் நாணு. அவசரமாக தோத்தாத்ரி மேலே ஓடினார். பையனும் பெண்ணும் கவலையுடன் கையைப் பிசைந்துகொண்டு நிற்க புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தாள் மைதிலி. "என்னம்மா, என்ன ஆச்சு?" எனப் பதறிப்போய் விசாரித்தார். "கொஞ்ச நாளாவே அப்பப்ப வயிற்றிலே குத்தற மாதிரி வலி இருந்தது. இன்னிக்குப் பொறுக்கவே முடியலை." என்று தவிப்புடன் கூறினாள். போட்டது போட்டபடி மருத்துவ மனைக்குப் பறந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து உடனே பலவிதமான சோதனைகள் செய்யப்பட்டுத் தற்காலிக வலி நிவாரணத்துக்கும் தூக்கத்துக்கும் ஊசிகள் போடப்பட்டன. அவள் தாய் ருக்கம்மா உடனே ஊரிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

பரிசோதனைகளின் முடிவு வந்தது, பேரிடியாக. மைதிலியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பதாகவும், டயாலிசிஸும் வெகு நாட்கள் தாங்காது; மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் அறிவுறுத்தப்பட்டது. மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தது குடும்பம். இதில் விந்தை என்னவென்றால், நாணு, இவனா ரெண்டுங்கெட்டான் என எண்ணுமளவு மாறிவிட்டான். ருக்குப்பாட்டிக்கு வலக்கையாக வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதுடன் தினம் ஒரு முறையாவது மருத்துவமனை சென்று மைதிலியைப் பார்த்து, "மைதிலி, எப்ப நீ வருவே? நீ இல்லாம வீடே நல்லாயில்ல. பாட்டி பாவம் எப்பப்பாரு அழறா," என்று உருகுவான்.

ஓரளவுக்கு வைத்தியம் செய்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டாலும் மைதிலிக்கு அடிக்கடி டயாலிசிஸ் செய்வதும், வலி, வாந்தியுடன் உணவுண்ணவும் அவள் மிகுந்த சிரமப்படுவதும் அவளுக்காக அனைவரும் பரிதாபப்படுவதுமாக வீட்டுச் சூழ்நிலையே மாறிப்போய்விட்டது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தச் செய்த சோதனைகளில் வீட்டிலுள்ளவர்களின் சிறுநீரகம் எதுவும் பொருந்தவில்லை. வெளிக் கொடையாளி கிடைப்பதிலும் தாமதமாகிக் கொண்டிருந்தது.

*****


தோத்தாத்ரியின் மகள் சிந்துவிடம் நாணு கேட்டுக்கொண்டிருந்தான், "அடி சிந்து, மைதிலிக்கு அந்த, ஏதோ சொல்றாளே, அது கிடைக்காட்டா என்னடி ஆகும்?" அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ, சிந்து சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒருமாதிரி விளக்கிவிட்டு "எல்லாருக்கும் ரெண்டு கிட்னி இருக்கும். ஒண்ணை இந்த மாதிரி ஆனவாளுக்குப் பொருத்தினா பிழைக்கலாம். இதே மாதிரி கண், இருதயம், ஈரல், தோலைக்கூட இன்னொருத்தருக்கு தானம் பண்ணலாம். ஆனா அதெல்லாம் உயிரோட இருக்கும்போது முடியாது என அவனுக்கு வகுப்பு எடுத்துவிட்டு, அம்மாவுக்கு ஏத்த மாதிரி கிடைக்கணுமேன்னு பெருமாளைதான் வேண்டிக்கணும். இல்லேன்னா..." என்று முடிக்காமலே விம்ம ஆரம்பித்துவிட்டாள்.

மாலை வேலையிலிருந்து தோத்தாத்ரி வந்ததும், "அண்ணா, மைதிலிக்கு என் உடம்பிலிருக்கிற, அதான் சிந்து சொன்னாளே, அதை வெச்சுடலாமோன்னோ? ரொம்பக் கஷ்டப்படறாளே; என்னை ஏன் யாரும் கேக்கலை?" என வழிமறித்துக்கொண்டான் நாணு.

அவனைப் புதிதாகப் பார்ப்பது போல் நோக்கிய தோத்தாத்ரி "நீ பெரிய மனுஷன், உன்னைக் கேக்கணுமாக்கும். நம்ம விதி நன்னா இருந்தா எங்களில் யார் கிட்னியாவது பொருந்தி இருக்குமே. இனி எந்த டோனர் கொடுத்து, ஆபரேஷன் ஆகப்போறதோ?" என விரக்தியும் அலுப்புமாகப் பதிலளித்தார்.

ஆனால் நாணு பழைய ரெண்டுங்கெட்டான் பிடிவாதம் பிடித்துகொண்டு "என்னையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போ, நானும் மைதிலிக்கு ஏதாவது செய்யணும்" என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். அவன் பிடுங்கல் தாங்காமல் டாக்டரிடம் கலந்து ஆலோசித்ததில் அதையும்தான் விடுவானேன் என அசிரத்தையுடன் நாணுவைப் பரிசோதித்தனர். "மிஸ்டர் தோத்தாத்ரி, என்ன அதிசயம், உங்க தம்பியின் கிட்னி உங்க மனைவிக்குப் பொருந்துகிறதே. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா அவருடையதையே பொருத்திடலாமே" என மகிழ்ச்சியுடன் அறிவித்தார் மருத்துவர்.

"நம்ம பசங்களுக்குத்தான் நாம் பெத்தவா; ஆனா நாணுவுக்கு நான் காப்பாளர்தான். அவனை நல்லபடியாப் பார்த்துக்க வேண்டிய நாமே அவனை இதில் மாட்டிவிடக் கூடாது. நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்." என மைதிலி மறுத்தாலும் கடைசியில் எல்லோருமாக வற்புறுத்தவே இறுதியில் நாணுவின் சிறுநீரகம் மைதிலிக்குப் பொருத்தப்பட்டு, அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மருத்துவ மனையிலேயே சிறிதளவு நடமாடுமளவுக்கு அவள் உடல்நிலை முன்னேறியது.

நாணுவின் உடல் தேறி வரும்போதே திடீரென்று அவனுக்குக் கடுமையான காய்ச்சல் கண்டது. நோய்த்தொற்று என்றார்கள். எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படாமல் உடல்நிலை மிக மோசமாகி விட்டது. இனி பிழைப்பது அரிது என்றாகிவிடவே, தோத்தாத்ரி அவன் அருகிலேயே மனம் கலங்கி அழுதுகொண்டு நின்றார்.

அவனது நிலை அறிந்த மைதிலியும் அங்கு வந்து கதற ஆரம்பித்துவிட்டாள். நாணுவோ, "பைத்தாரா, பைத்தாரா, இந்த தோத்துவை அழ வேண்டாம்னு சொல்லு மைதிலி. எனக்கு ஏதாவதுன்னா அன்னிக்கி சிந்து சொன்னாளே, கண், ஈரல், இன்னும் எல்லாத்தையுமே யாருக்காவது வைச்சுடணும்னு டாக்டர்ட்ட சொல்லிடு." என்று மிகத் தெளிவாகப் பேசினான்.

அன்றிரவே அவன் ஒருவனாக மறைந்து, நால்வராக வாழப் புறப்பட்டு விட்டான். அவன் விருப்பம் போலவே அவன் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

"சார், இன்ஷ்யூர்டு பார்சல் ஒண்ணு சீல் ஒடஞ்சு வந்திருக்குது, "சலீம் பாய் குரல் கொடுத்தார். "மார்க் பண்ணி, பார்ட்டியை வரவழையுங்க பாய்; மறக்காம எர்ரர் புக்லே ஒரு என்ட்ரி..." என்னும் போதே மேலே தொடர முடியாமல் தோத்தாத்ரியின் குரல் கம்மி, கண்கள் கலங்கின. அனைவரிடமும் பொருள் பொதிந்த மௌனம் கனமாகப் படர்ந்து நாணுவுக்கு அஞ்சலியாக அமைந்தது.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com