கிணற்றுக்குள் செல்வம்!
தெனாலிராமன் கிருஷ்ணதேவரராயரின் அவையில் இருந்த விகடகவி. புத்திகூர்மை கொண்டவன். ஊருக்கு வெளியே தோப்புக்கு நடுவிலிருந்த வீட்டில் அவன் மனைவியுடன் குடியிருந்தான். தினமும் காலையிலும் மாலையிலும் கிணற்றில் நீர் இறைத்துத் தோட்டத்துக்குப் பாய்ச்சுவது அவனது வாடிக்கை. ஒருசமயம் கடும் வறட்சி ஏற்பட்டதால் கிணற்றில் தண்ணீர் மிகவும் கீழே போய்விட்டது. பயிர்கள் வாடுவதைக் கண்ட அவன் மனம் வாடினான்.

ஒருநாள் தாமதமாக வீடு திரும்பினான் தெனாலிராமன். கிணற்றடியில் போய் கைகால் சுத்தம் செய்யும்போது அங்கிருந்த மாமரத்தில் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கண்டான். உடனே அவனுக்கு மிகவும் அச்சமாகி விட்டது. வீட்டிற்குள் போய் மனைவியிடம் மெல்லிய குரலில் திருடர்கள் வெளியே மாமரத்தில் ஒளிந்திருப்பதைக் கூறினான். பின் தன் மனைவியிடம் உரத்த குரலில், "இதோ பார். நாட்டில் பஞ்சமும், திருடர் பயமும் அதிகரித்து விட்டது. நமது சொத்துக்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றான்.

"அதற்கு என்ன செய்யணும்?" என்று கேட்டாள் அவன் மனைவி.

"இதோ பார். நம்மிடம் உள்ள தங்க, வைர நகைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் மூட்டையாகக் கட்டு. அதை இந்த மரப்பெட்டியில் வைத்துப் பூட்டு. இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடுகிறேன். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்த பின் நாம் கிணற்றிலிருந்து இதை எடுத்துக் கொள்ளலாம். இது யாருக்கும் தெரியக் கூடாது. ஜாக்கிரதை" என்றான் உரத்த குரலில்.

பின் கல்லையும், மண்ணையும் ஒரு பெட்டியில் கொட்டி, அதை தூக்க முடியாமல் தூக்கிச் சென்று கிணற்றுக்குள் போட்டுவிட்டு வந்தான். தெனாலிராமன் பேசியதைக் கேட்ட திருடர்கள், அவன் கிணற்றுக்குள் பெட்டியைப் போட்டதைப் பார்த்து மனம் மகிழ்ந்தனர்.

"பார்த்தியா. நான் சொன்னேன்ல. அரசாங்கத்துல வேல செய்யுற இவர்கிட்ட பணம், நகைங்க நிறைய இருக்கும்னு. அது உண்மையாப் போச்சு பார்த்தியா?" என்றான் முதல் திருடன்.

"சரி. சரி. இந்தப் பெட்டியை எப்படி வெளிய எடுக்கிறது?" என்றான் இரண்டாம் திருடன்.

"அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. இந்தக் கிணத்துக்குள்ள இறங்கி அதை நாம எடுக்கப் பார்ப்போம். அப்படி முடியலைன்னா, நாம நாலு பேருமா சேர்ந்து ஏத்தம் மூலமா மாத்தி மாத்தி தண்ணிய இறைச்சுக் கொட்டிட்டு பெட்டியை எடுத்துடலாம்" என்றான் மூன்றாம் திருடன்.

நள்ளிரவு வரும்வரை காத்திருந்த நால்வரும் கிணற்றின் அருகே சென்றனர். ஒரே இருள். கிணறு மிக ஆழமாக இருந்தது. அவர்களால் உள்ளே இறங்க முடியவில்லை. அதனால் ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

இதை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீர் தன் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டுவிட்டு, வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான்.

பொழுது விடிய ஆரம்பித்தது. தண்ணீரை இறைத்து இறைத்துத் திருடர்கள் களைத்துப் போயிருந்தனர். ஆனால் கிணற்றின் அடிப்பகுதி தெரியவில்லை. அதனால் பெட்டியையும் எடுக்க முடியவில்லை. "சரி, சரி. நாளைக்கு ராத்திரி மறுபடி வந்து தண்ணிய இறைச்சுக் கொட்டிட்டு பெட்டியை எடுத்துக்கிடலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டவாறே புறப்படத் தயாராகினர்.

அப்போது அங்கே வந்த தெனாலிராமன், "நாளைக்கு வேணாமுங்க. ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு வந்தீங்கன்னா சௌகர்யமா இருக்கும். ஏன்னா, நீங்க இறைச்ச தண்ணி இன்னும் நாலு நாளைக்குப் போதும்" என்றான் சிரித்துக்கொண்டே.

குரலைக் கேட்ட திருடர்கள் தலைதெறிக்க ஓடிப் போயினர்!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com