கல்லீரலும் காமாலையும்
அமெரிக்காவில் 1945-65 ஆண்டுக் காலத்தில் பிறந்தவர்களைக் கல்லீரல் அழற்சி (Hepatitis C) என்ற நச்சுயிரித் (virus) தாக்குதல் நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ளச் சொல்லி CDC அண்மையில் ஓர் அறிக்கை விட்டிருக்கிறது. இது குறித்துப் பல கேள்விகளும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளன. அதனால் கல்லீரல் பற்றியும், மஞ்சள் காமாலை பற்றியும் இங்கே பார்ப்பது அவசியமாகிறது. உடலில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மருந்து, மாத்திரைகளின் நச்சுத்தன்மையை ரத்தத்திலிருந்து அகற்றவும் உதவுகிறது. பிலிருபினாக இங்கே மாற்றப்படும் ரசாயனம் பின்னர் குடல்வழியாக வெளியேற்றப்படுகிறது. குடலில் உணவைச் செரிக்கவும் கல்லீரல் உதவுகிறது. ஒருவருக்கு ஒரு கல்லீரலே உண்டென்பதால் இது பழுதடைந்தால் உயிருக்கு அபாயம் ஏற்படுகிறது.

கல்லீரல் பாதிப்புக்கான காரணங்கள்
வைரஸ் போன்ற நுண்ணுயிர்க் கிருமிகளின் தாக்குதல் (Viral Hepatitis).
மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு (Drug induced Hepatitis).
மிக அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு (Alcoholic Hepatitis).
உடலில் தன்னெதிர்ப்புச் சக்தி மிகுவதனால் ஏற்படும் பாதிப்பு (Autoimmune Hepatitis).
உடல் பருமன் அதிகமாகி, கொழுப்புச் சத்து மிகுவதால் ஏற்படும் பாதிப்பு (Fatty liver).

இவை தவிர, இருதயம் சரியாக வேலை செய்யாத போதும், சிறுநீரகம் வேலை செய்யாவிட்டாலும் கல்லீரல் பாதிக்கப்படும்.

அறிகுறிகள்
கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள் பெரும்பாலும் உடல் முழுவதுமே பாதிக்கும் அறிகுறிகளாக இருக்கும் (Generalized symptoms). இதனால் நோய் இருப்பதைச் சட்டென்று கண்டுபிடிப்பது கடினம். கல்லீரல் குறுகிய காலகட்டத்தில் பழுதடைந்தால் அறிகுறிகள் மிக சீக்கிரத்தில் தீவிரமாகும். மது அருந்துதல் போன்றவற்றால் மெல்ல மெல்ல ஏற்பட்டால், பல வருடங்களுக்குப் பிறகு தெரியவரும்.

  • சோர்வு
  • குமட்டல் வாந்தி
  • பசியின்மை
  • காய்ச்சல்
  • வயிற்று வலி
  • தோல் மஞ்சளாகவும், சிறுநீர் அடர்மஞ்சளாகவும் மாறுதல்
  • மலம் வெளிர்நிறம் அடைதல்
  • மயக்கம் ஏற்படுதல்
  • மனக் குழப்பம் உண்டாதல்


போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மஞ்சள் காமாலை என்பது வைரஸ் நுண்ணுயிர்க் கிருமி தாக்குவதால் மஞ்சள் பொடி நிறத்தில் காணப்படுவது. இதற்கு ரத்தத்தில் பிலிருபின் அளவு மூன்றுக்கு மேல் செல்லவேண்டும்.

பரிசோதனைகள்
மேற்கூறிய அறிகுறிகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தால் மருத்துவரை நாடவேண்டும். ரத்தப் பரிசோதனை வழியே கல்லீரல் செயல்பாட்டை அறியலாம். AST(SGOT), ALT(SGPT) என்ற பரிசோதனைகளும் பிலிருபின் அளவும் கல்லீரல் செயல்பாட்டைச் சொல்லிவிடும். பிலிருபின் அளவு கல்லீரல் செயல்பாடு
குறைவதாலோ அல்லது ஏதேனும் அடைப்பு ஏற்படுவதாலோ அதிகமாகலாம். அதை வைத்துக் கல்லீரல் மற்றும் கணையம் அல்ட்ராசவுண்டு பரிசோதனை (Ultrasound) செய்ய வேண்டி வரலாம். வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை காமாலை எதிர்மங்களின் (Hepatitis antibodies) அளவை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

மூன்று வகை வைரஸ்கள் தாக்கலாம். அவை Hepatitis A, B மற்றும் C.

Hepatitis A
இது உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடியது. சுகாதாரம் குறைந்த நாடுகளுக்கு பயணம் செய்கையில் காய்ச்சின தண்ணீர் மற்றும் நன்கு சமைத்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தாக்காமல் தவிர்க்கலாம். சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த வைரஸ் தாக்கினால் நோய் தீவிரமாக இருக்கும். இதற்குத் தடுப்பூசி கிடையாது.

Hepatitis B
இந்த வைரஸ் ரத்தம் பெறுதல், போதை ஊசிகள், தகாத உடலுறவு மூலம் பரவும். பல வருடங்களுக்கு முன்னால் இவை நடந்திருந்தாலும், 1992க்கு முன்னர் ரத்தமாற்று (Blood transfusion) பெற்றிருந்தாலும் இந்த வைரஸ் உடலில் மறைந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் மருத்துவத் துறையில் வேலை செய்பவர்கள், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்க வாய்ப்பு உண்டு. இவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள் அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பார்ப்பதால், அவர்களையும் இந்த வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள CDC அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு மூன்று ஊசிகள் போட்டுக்கொள்ள வெண்டும். முதல் ஊசி போட்டபின் ஒரு மாதம், பின்னர் ஆறு மாதங்களில் அடுத்தடுத்த ஊசிகள் போடவேண்டும். இது தாக்கியிருந்தால் இவர்களது கல்லீரல் மருந்துகள் அல்லது மதுவின் காரணமாக மேலும் பாதிப்பு அதிகரிக்கும். அதனால் இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Hepatitis C
Hepatitis C வைரஸும் B வைரஸ் போலவே பரவக்கூடியது. குறிப்பாக 1992க்கு முன்னர் ரத்தமாற்று (blood transfusion) அல்லது டயாலிசிஸ் (Dialysis) செய்தவர்களாக இருந்தாலோ, போதை ஊசிகள், தகாத உடலுறவு கொண்டிருந்தாலோ வைரஸ் தாக்கியிருக்க வாய்ப்பு மிக அதிகம். இதனால்தான் 1945-65 காலகட்டத்தில் பிறந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென CDC அறிவுறுத்துகிறது. இந்த வைரஸுக்குத் தடுப்பூசி இல்லை. மேலும் இது கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுத்தலாம். அதனால் நோயின் அறிகுறிகள் இல்லாதபோதும் மருந்துகள் தேவைப்படலாம்.

இவை தவிர, மது அருந்தும் பழக்கம் கல்லீரலைப் பாதிக்கும். நோயின் அறிகுறிகள் இல்லை என்பதால் கல்லீரல் பாதிக்கப்படவில்லை என்று நினைப்பது தவறு. நோய்க்குறிகள் முற்றிய நிலையிலேயே தெரியவரும். ஆண்கள் தினம் இரண்டு கோப்பைக்கு மேல் மது அருந்தினால் கல்லீரலைப் பாதிக்கும். வயது ஆக ஆக பாதிப்பு அதிகம். தினம் அருந்தாத போதும், அடிக்கடி அதிகம் அருந்துவதும் கெடுதல்தான். மதுபானத்தின் வகைக்கேற்ப அதிலிருக்கும் ஆல்கஹாலின் அளவு வேறுபடும். அதைப் பொறுத்து பாதிப்பும் மாறுபடும். பொதுவாக பெண்களுக்கு மதுவைச் செரிக்கும் திறன் குறைவு. அதனால் நாள் ஒன்றுக்கு ஒரு கோப்பைக்கு மேல் அருந்தினாலே கல்லீரல் பாதிக்கப்படலாம்.

எல்லா மருந்துகளும் கல்லீரலைப் பாதிக்கலாம். குறிப்பாக வலி மற்றும் காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளும் Acetaminophen (Tylenol, Calpol, Crocin) அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவர் கொடுக்கும் மருந்துகளில் பலவும் கல்லீரலை பாதிக்கலாம். அடிக்கடி கல்லீரல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பாதிப்பை எளிதில் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக, கொழுப்புச் சத்துக்குக் கொடுக்கப்படும் Statin மருந்துகள் எடுத்துக் கொள்பவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை
கல்லீரல் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரத்தைப் பொறுத்துச் சிகிச்சை தேவைப்படும். மருந்துகளை அல்லது மதுப் பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம். வைரஸுக்கான மருந்துகளைப் பல மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிவரும். தீவிரம் அதிகமானால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிவரும். நல்ல மருத்துவக் கண்காணிப்பின் மூலம் நோய் குணமடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் சில வேளைகளில் நோய் முற்றிவிடவும் வாய்ப்பு உண்டு. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படலாம். நோயின் காரணம், தீவிரம், நோயாளியின் பிற நலக்கேடுகளைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com