நடன அரங்கேற்றம்: அக்ஷயா ராஜ்குமார்
ஜூன் 23, 2012 அன்றுஆபர்ன் ஹில்ஸில் உள்ள அவன்டேல் உயர்நிலைப் பள்ளியில் செல்வி அக்ஷயா ராஜ்குமாரின் நடன அரங்கேற்றம் நடந்தது. விறுவிறுப்பான ஹம்சத்வனி, ஷண்முகப்ரியா தேவமனோஹரி ராகங்களில் முறையே விநாயகர், ஷண்முகர், நடராஜரை வணங்கும் கவுத்துவங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடந்து நாட்டையில் அமைந்த பஞ்சநடை அலாரிப்பும், கல்யாணியில் ஜதிஸ்வரமும் மிக அருமை. 'ஹிந்து டெம்பிள் ரிதம்ஸின் கோபால் வெங்கட்ராமன் இயற்றிய ஸ்ரீ ராமா ரகுராமா என்னும் 'ஷப்தம்' ஹமீர் கல்யாணியில் மனத்தைக் கவர்ந்தது. நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான வர்ணம் முருகன் மேல் மையல் கொண்ட நங்கையின் மோகத்தையும், விரகத்தையும் விவரிக்கும் விதத்தில் குரு சுதா சந்திரசேகரால் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. வாரணம் ஆயிரத்தில் ஆண்டாளாக ஜொலித்த அக்ஷயா, நவரச கானடாவில் அமைந்த பதத்தில் துர்கையாகவும், மீராவாகவும் மனங்கவர்ந்தார்.

ராகமாலிகையில் அறுபடை முருகனையும், பின்னர் 'ஆனந்த நடமிடும் ராஜனே' என்று சிவனையும் துதித்தார். துல்லியமான தில்லானாவுக்குப் பின்னர், 'வஞ்சி வந்தாள்' என்ற குற்றாலக் குறவஞ்சி நடனத்தில் எழில்மிகு குறத்தி வேடத்தில் நிறைவு செய்தார் அக்ஷயா. 50 வருடங்களாக அரங்கேற்றங்கள் நடத்தி வரும் 'நாட்டிய வேத பாரதி' சுதா சந்திரசேகரனின் பயிற்சி அபாரம். வித்யா சந்திரசேகர், கோபால் வெங்கட்ராமன், கிருத்திகா ராஜ்குமாரின் பாடல்களோடு, ஜெயசிங்கத்தின் மிருதங்கம், ஜெயதேவனின் வயலின், பிரபா தயாளனின் வீணை அற்புதமானத் துணை நின்றன. குரு சாரதா குமார் அக்ஷயாவை வாழ்த்திப் பேசினார். பெற்றோர் ராஜ்குமார் மற்றும் கங்கா ஆகியோரின் ஈடுபாடு பாராட்டத் தக்கது. சகோதரி கிருத்திகா ராஜ்குமார் சிறு வயதிலிருந்தே வடஅமெரிக்காவில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றவர். அக்ஷயாவும் நடனம், படிப்பு, விளையாட்டு, பாட்டு, வயலின் என்று பலதுறைத் திறமை பெற்று விளங்குகிறார்.

கல்பனா ஹரிஹரன்,
ட்ராய், மிசிகன்

© TamilOnline.com