பாரதி தமிழ்ச் சங்கம்: நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் சொற்பொழிவுகள்
சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச் சங்கம் ஜூன் மாதத்தில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியது. நாஞ்சில் நாடன் ஃப்ரீமாண்ட் நகரத்தில் மூன்று தினங்கள் கம்பராமாயணம், தமிழின் தனிப் பாடல்கள், மற்றும் நவீன இலக்கியம் குறித்து உரையாற்றினார். முதல் நாள் உரையில் கம்பராமாயணம் குறித்த விரிவான அறிமுகத்தை அளித்தார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கும்பகர்ணன், விபீடணன் ஆகியோர் குறித்த பாடல்களை விளக்கி இறுதியாக ராவணன் கலங்கி நின்ற பாடல்களின் சுவையை விளக்கினார். மூன்றாவது நாள் உரையில் தமிழின் பிற தனிப்பாடல்களின் சுவை குறித்து விளக்கினார். அன்று விரிவான கலந்துரையாடலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இப்பகுதியின் நவீன தமிழ் இலக்கிய வாசகர்களின் குழுவான சிலிகான் ஷெல்ஃப் மூலமாக எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனின் இரண்டாவது நாவலான 'கலங்கிய நதி' குறித்து வாசகர்களின் பார்வைகள் ஆசிரியர் முன் வைக்கப்பட்டன. அவரது பதிலுரையும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்த வாசகர் அமைப்பு மாதம் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு அது பற்றிய வாசகர்களின் விமர்சனங்களைக் கலந்துரையாடலாக நடத்தி வருகிறது. இந்தக் குழுவில் பங்கேற்க விரும்பும் வளைகுடாப் பகுதி வாசகர்கள் bagsinbox@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இரு எழுத்தாளர்களையும் பாரதி தமிழ்ச் சங்கம் கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூன் 30ம் தேதி அன்று ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா வரவேற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர்கள் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவர்களின் படைப்புகள் குறித்து சுந்தரேஷ், காவேரி கணேஷ், பகவதி பெருமாள், பாலாஜி ஸ்ரீநிவாசன், ஆர்.வி. சுப்ரமணியம், விஸ்வநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

பி.ஏ. கிருஷ்ணன் பேசுகையில் தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பொதுவாகப் படைப்பாளிகள் எவ்வாறு தங்களுக்கு முன்பு நிகழ்ந்திருந்த இலக்கிய உச்சங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் படைப்புகளில் அதையும் மீறிச் சிறப்பாகப் படைக்கிறார்கள் என்பதை விளக்கினார். ஷேக்ஸ்பியர், கம்பன், ஒளைவையார், ஆண்டாள், நம்மாழ்வார் ஆகியோரின் கவித்துவ உச்சங்கள், நயங்கள் குறித்துப் பேசினார்.

நாஞ்சில்நாடன் தனது ஏற்புரையில் மொழிகளிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது, மொழி வெறுப்புக் கூடாது என்பதை வலியுறுத்தினார். நுட்பமான கலை, இலக்கியங்களை நுகரும் வாய்ப்புள்ள அமெரிக்கத் தமிழர்கள் வெறும் பொழுதுபோக்குத் தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் தேங்கிவிடக் கூடாது என்றும் தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள உன்னதக் கலைகளை நுகர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். பிறகு எழுத்தாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. சங்க நிர்வாகிகள் எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும், பத்திரமும் வழங்கி கவுரவித்தனர். பொருளாளர் நித்யவதி சுந்தரேஷ் நன்றியுரை வழங்கினார்.

பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து ஜூன் மாதம் வீடற்ற எளியவர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை நடத்தியது.

வரும் மாதங்களில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உரைகள் மற்றும் வேறு பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யவிருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்:

ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா: 650-793-6508
நித்யவதி சுந்தரேஷ்: 510-857-3714
உத்ரா கோவிந்தராஜன்: batsvolunteers@gmail.com

திருமலைராஜன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com