ஸ்ரேயா ரமேஷ் நாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 7, 2012 அன்று பாலோ ஆல்டோ கபர்லி அரங்கத்தில் ஜயேந்த்ர கலாகேந்திராவின் மாணவி ஸ்ரேயா ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக முரளிதர கவுத்துவமும், அலாரிப்பும் நடந்தன. இதில் கார்முகில் நிறத்தவனே, வெண்ணை உண்ட மாயவனை, மண்ணைத் தின்ற பாலகனே ஆகியவற்றுக்கு முகபாவம் மிகச் சிறப்பு. எல்லப்ப பிள்ளை இயற்றிய ஜதீஸ்வரத்தில் (ஹிந்தோள ராகம்) தாளம், ஸ்வரம், நிருத்தம் ஆகியவற்றைச் சிறப்பாக ஆடினார் ஸ்ரேயா.
பாபநாசம் சிவனின் நாட்டைக்குறிஞ்சி ராக வர்ணத்தில் 'ஸ்வாமி நானுந்தன் அடிமை, 'ராமாம்ருத பானமே என் ஜீவனமே' என அபிநயம் காட்டியது தத்ரூபம். 'சேவடி தரிசனத்துக்கு ஏங்கினேன்' பாடலில் முகபாவம் மிக உருக்கம். 'பள்ளிகொண்ட ரங்கநாதா' என்னும் பாடலில் பத்து அவதாரங்களையும் நாட்டியத்தில் கொணர்ந்து, ஜயதேவர் அஷ்டபதியுடன் கிருஷ்ணாய துப்யம் நம என முடித்தது சிறப்பு. அடுத்து கேதார கௌளையில் திருமதி லலிதா இயற்றிய கீர்த்தனத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய பராசக்தி திக்விஜயம் செய்து, சங்கரனைக் கண்டு வெட்கி, ஒன்றிணைந்து, சிவசக்தியாக ஆடிக் காண்பித்தது ஜோர். கனம் கிருஷ்ணய்யர் இயற்றிய பதத்தில் 'எந்தன் குறை தீர்க்கக் கூட்டி வா; பதம் பாடி மோடி செய்யாமல் அழைத்து வா' என்பதற்கு அபிநயித்த விதம் சபையோரைக் கவர்ந்தது. கடைசியாக பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய பிருந்தாவனி ராகத் தில்லானாவில் விறுவிறுப்புடன் துள்ளி ஆடி மிருதங்க வித்வானின் பெண் என்பதை வெளிப்படுத்தி குருவிற்கு பெருமை சேர்த்தார். ஸ்கந்தா வெங்கட்ரமணி (வாய்ப்பாட்டு), குரு சுகந்தா ஸ்ரீநாத் (நட்டுவாங்கம்), திவ்யா ராமச்சந்திரன் (வயலின்), அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), ரமேஷ் சீனிவாசன் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com