உபக்ருதி: ஏழைகளுக்குக் கல்வி
ஜூலை 8, 2012 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் 'உபக்ருதி' (www.upakritiorg) அமைப்பு பெங்களூரின் SOCARE அமைப்பின் நிறுவனர் மணி அவர்களுக்கு வரவேற்பு விழா ஒன்றை நடத்தினார்கள். சென்ற ஆறு ஆண்டுகளாக, உபக்ருதி சமுதாயத்தின் கீழ்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி தர உதவும் இந்திய நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றது. இதில் முக்கியமான ஒரு நிறுவனம் பெங்களூரில் உள்ள சோகேர்.

1999ல் நிறுவப்பட்ட சோகேர், இந்தியாவில் ஏழைக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக, குழந்தைகளின் தாயோ அல்லது தந்தையோ பயங்கரக் குற்றவாளிகளாக இருப்பதால் ஆதரவிழக்கும் குழந்தைகளைப் பராமரிப்பது சோகேரின் சிறப்பு. மணி இந்தியாவின் மத்திய வங்கியில் பணி செய்து, ஓய்வு பெற்றவர். தன் வீட்டையே சோகேருக்காக ஒதுக்கி வைத்து, தொண்டர்கள் உதவியாலும், பலரின் நன்கொடையாலும் இந்த நற்பணியைச் செய்து வருகிறார். மேலும் இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 500 குழந்தைகளைப் பராமரிப்போம் என்று அவர் குறிப்பிட்டார். உடல்நலம் மட்டுமல்லாது, அவர்களின் மனநலத்தையும் பாதுகாப்பதை விளக்கினார். சோகேரில் அஸ்ஸாமியக் குழந்தைகளும் உள்ளனர்.

சோகேர் மணி அவர்களுக்கு சமீபத்தில் CNN-IBN விருது தந்து கௌரவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் இவரைச் சிறப்பித்தது. சோகேரின் சேவைப் பணிகளுக்கு உபக்ருதி மூலம் ஆதரிக்கலாம்.

டாக்டர். ராம் ஸ்ரீனிவாசன்,
லாஸ் ஆல்டோஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com