மனச்சாட்சி
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். பழைய வண்டியாக இருந்தாலும் டாக்சியாக ஓடி, அவன் குடும்பத்துக்கு தினமும் படியளக்கும் தெய்வமல்லவா அது! உள்ளேயிருந்து அவன் மனவி கனகாவின் காலை 'சுப்ரபாதம்' பலமாக வெளியே கேட்டது, அவனைச் சங்கடப்பட வைத்தது, "ஏண்டி செண்பகம்! பள்ளிக்கூடத்துக்குப் பணம் கட்டணும்னா வாசல்ல நிக்கிற உன் அப்பனைப் போய்க் கேளு. எங்கிட்டே என்ன கொட்டியா வெச்சுருக்குது, என்னை வந்து கேக்கிறே? ஓட்டை வண்டியை வச்சுகிட்டு உசிரை வாங்குறாரு. எத்தன பேரு எப்படி எல்லாம் பொழக்கிறாங்க. இது ஒரு துப்புக்கெட்ட ஜன்மம். ஊரே கொள்ளை போகுது. இவரு மாத்திரம் நேர் வழிலே சம்பாதிப்பாராம். அப்படிப்பட்ட சாமியாரெல்லாம் இன்னைக்கு கோடிக் கணக்கிலே பணம் வச்சசிருக்காங்க. பொண்ணு மேலே படிக்கணும். கல்யாணம் பண்ணனும் எதாவது அக்கறை இந்த ஆளுக்கு இருக்கா! இதை கட்டிகிட்ட நாள்லே இருந்து என்னத்தைக் கண்டேன்" என்று பொரிந்து தள்ளினாள்.

இதைக் கேட்டு வேதனையுடன் வீட்டுக்குள் வந்தான் செல்வம். "அப்பா! இந்த வாரம் சம்பளம் கட்டணும். பணம் கொடுப்பா" என்று கெஞ்சினாள் செண்பகம். "சரி, கட்டிடலாம். ராத்திரி பணம் வாங்கிக்கோ" என்று ஆறுதலுக்காக எதோ சொல்லி முடித்தான் செல்வம்.

"ஹ்க்கும், ராத்திரி மட்டும் பணம் எங்கிருந்து கொட்டுமாம்!" கனகாவின் நக்கல்.

செல்வத்தின் அன்றாட வாழ்க்கை காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து நடு இரவு வரை நீடிக்கும். பிரதான ரயில் நிலையங்களில் சவாரியைத் தேடி, நட்சத்திர ஹோட்டல்கள், விமான நிலையம் போன்ற இடங்களில் காத்திருந்து மறுபடியும் நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவான்.

ஒருநாள் இரவு ஒரு ஹோட்டலில் இருந்து வந்த சவாரி மிகவும் வசதியான புள்ளியாக இருந்தான். அவன் போட்டிருந்த உடையும் கடியாரமும் அவன் வசதியை எடுத்துக் காட்டின. அவன் காரில் வரும்பொழுதே தமிழ்க் கவிதை ஒன்றை முணுமுணுத்து கொண்டே வந்தான். அடையாறு பகுதியில் உள்ள 'சர்வீஸ் அபார்ட்மென்ட்' ஒன்றுக்குப் போகச் சொன்னான்.

அந்த முகவரியில் பெரிய பங்களா ஒன்று இருந்தது. வாசலில் கூர்க்கா காவல் இருக்க, உள்ளே போர்டிகோவில் மூன்று நடுத்தர வயதுப் பெண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உள்ளே ஹாலில் பெரிய விநாயகர் சிலை ஒன்று மாலையுடன். "இந்த இடத்தைத் தெரிந்து வைத்துக் கொள். யாராவது கேட்டால் தங்குவதற்கு எல்லா வசதிகளுடன் 'எல்லாம்' கிடைக்கும். இதை நடத்துபவர்கள் பழைய, பெயர்போன, வசதியான பெரும் பெண்புள்ளிகள். சர்வீஸ் அபார்ட்மென்ட் என்ற பெயரில் விபச்சார விடுதியை கூட்டாக நடத்துகிறார்கள்".

இப்படி அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெண்மணி வெளியே வந்து, வந்தவனை வரவேற்றாள். "வாங்க மைனர் சார்! ரொம்ப நாளா காணோம்" என்று விசாரித்தாள். பிறகு செல்வத்தைப் பார்த்து "டிரைவர். யாராவது வசதியான பார்ட்டி இதுமாதிரி வந்தா கூட்டிட்டு வாங்க. இங்கே 'எல்லாமே' கிடைக்கும். உங்களுக்கும் நல்ல கமிஷன் கொடுப்போம்" என்றாள். வந்தவன் டாக்ஸிக்கு வாடகை கொடுக்கும் போது ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை நீட்டினான். "வாடகை போக பாக்கியை நீயே வைத்துக்கொள்" என்றான்.

அன்று கிட்டதட்ட ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்த மகிழ்ச்சியில் செல்வம் வீடு திரும்பினான். விடிந்தவுடன் செண்பகத்திடம் பள்ளிக்குப் பணம் கொடுத்துவிட்டு, காரைத் துடைக்க ஆரம்பித்தான். காரின் பின்சீட்டில் எதோ ஒரு காகிதம் இருக்க, அதை எடுத்துப் பார்த்தான். ஒரு தமிழ்க் கவிதை கையால் எழுதப்பட்டிருந்தது. கவிதையின் தலைப்பு 'விலைமாது'. முந்தைய இரவில் கவிஞன் சென்ற இடமும், விட்டுச் சென்ற அவன் கவிதையும் மிகவும் பொருத்தமாக இருந்தன.

அவன் படித்த வரிகளில் கவிஞன் விலைமாதின் வேதனைகளை விவரித்துவிட்டு, முடிவில் அந்தத் தொழிலே அழிந்து போக வேண்டும் என்று எழுதிவிட்டு, பிறகு அவனே அதைத் தேடிப் போகிறான். இப்படி மாறுபட்ட பரிமாணங்களை கொண்ட மனிதர்கள் வந்து போகும் இடங்களில் பணம் எண்ணி அளக்காமல், கொட்டி அளக்கப்படுகிறது. உல்லாசத் தேவைகளின் கட்டாயத்தால் மனச்சாட்சிக்குச் சமாதி கட்டிவிட்டு, பணத்தைத் தகாத முறையில் சம்பாதித்து உல்லாச வாழ்க்கைக்கு அதை வீணாக்குவது இன்றை நாகரீகத்தின் அடையாளச் சின்னங்கள். அப்படிப் பட்டவர்களுக்குச் சமுதாயம் பதவி கொடுத்துத் தலைவர்கள் ஆக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய நடைமுறையில் மனச்சாட்சிபடி அன்றாட வாழ்க்கை நடத்துவது சாத்தியமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி!

இப்பொழுதெல்லாம் செண்பகத்தின் மேல்படிப்பும் கல்யாணமுமே செல்வத்தின் கண்முன்னே காட்சியாகத் தாண்டவமாட, அதற்குத் தீர்வு காண ஒரே வழி மனச்சாட்சியை அடக்குவது. பணம் விளையாடும் இடத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. மனச்சாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உல்லாசக் கூட்டத்திற்குச் 'சேவை' செய்யச் செல்வம் முடிவெடுத்தான்.

மறுநாளிலிருந்து இரவு நேரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் 'வசதியான சவாரிகள்' அதிகமாகக் கிடைக்க அந்த விடுதிக்கு அதிகச் சேவை செய்தான். சவாரிகளின் அன்பளிப்பும், விடுதியின் கவனிப்பும் செல்வத்தின் அன்றாட வருமானத்தைப் பல மடங்கு பெருக்கியது. இந்தத் திடீர் வருமானத்தின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது செல்வத்தின் குடும்பம். புது கலர் டிவி, மிக்சி, கிரைண்டர், கேஸ் சிலிண்டர் இவையெல்லாம் வசதியின் அடையாளங்களாக வீட்டை நிரப்பின.

ஒருநாள் இரவில் விமான நிலையத்திலிருந்து சவாரி ஒன்றை இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்த கொண்டிருந்தான். விடுதித் தெரு வழியாக வரும்பொழுது அந்த பங்களாவின் முன் ஒரு காரிலிருந்து ஒரு நடுத்தர வயது பெண் மயக்க நிலையில் இறக்கப்பட்டு, அவளை ஒரு முரட்டு ஆள் தூக்கிக்கொண்டு உள்ளே செல்வதை கவனித்தான். காரை ஓட்டிவந்த டிரைவர் மாத்திரம் வெளியிலேயே நின்றிருந்தான். செல்வம் அவனருகில் சென்று "யாரது? மயக்கமாக உள்ளே கொண்டு போனாங்க?" என்று கேட்டான். "நீங்க யாரு?" என்று பதிலுக்கு அந்த டிரைவர் கேட்க, செல்வம் தானும் ஒரு டாக்சி டிரைவர் என்றும் இந்த இடத்திற்கு 'கிராக்கிகளை' அடிக்கடி கொண்டு வருபவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"இப்போ மயக்கி கடத்திக்கிட்டு வந்த பெண்ணை இந்த விடுதியிலே வாங்கி அதுக்கு நல்ல பணம் கொடுப்பாங்க. என் பங்குக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன்" அந்த டிரைவரின் பதில், செல்வத்தை மேலும் கேள்வி கேட்டு அதில் பெரிய தொகையும் அடிக்கடியும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டான். டிரைவரின் இந்த விவரங்கள் செல்வத்தின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஓரு பெண்ணைக் கடத்தி, மயக்கி, பிறகு அவளை இவர்களுக்கு விற்கவேண்டும். இவையெல்லாம் அவ்வளவு எளிதாக அவனால் செய்யமுடியுமா என்ற கேள்வியை நினைத்து பார்க்கக் கூட விரும்பவில்லை. கணிசமாக விரைவில் கிடைக்கும் பணம்தான் அவனுக்குப் பெரியதாய்த் தெரிந்தது. அடுத்தவனால் முடியும்போது நம்மால் ஏன் முடியாது என்ற ஒரு அசட்டுத் துணிச்சல். இதில் அடங்கி இருக்கும் பாதகமான பின்விளைவுகளைப் பற்றி அவன் மனச்சாட்சி எச்சரித்தும், வாழ்க்கையில் வேகமாக முன்னேற இதுமாதிரிச் செயல்களைத் துணிச்சலாகச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய புதிய வேதாந்தம். இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு எதிரான மனச்சாட்சியின் குரல் ஆழமாக புதைந்துவிட்டது.

சமுதாயத்தோடு ஒத்து வாழவேண்டும் என்பது எழுதப்படாத நியதிதான். ஆனால் சாமியார்கள் சிலர்கூடக் கடவுளின் பெயரால் சமுதாயத்தை ஏமாற்றி வசதியாக வாழும்போது, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காகத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன தவறு? முந்தைய தலைமுறைச் சமுதாயங்கள் நியாயத்துக்கும் பண்பாட்டுக்கும் புறம்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களை தண்டித்து தலைகுனிய வைத்தது. அதனால் மனச்சாட்சிக்கு பயந்தார்கள். ஆனால் இன்றய சமுதாயமோ அவர்களைத் தலைவர்களாக்கி முக்கிய பதவிகளையும் கொடுக்கிறது.

அன்று இரவு விடுதியில் சவாரியை விட்டுவிட்டு வெளியே வரும்பொழுது, கார் ஒன்று வந்து நின்றது. வாசலில் இருந்த கூர்க்கா உள்ளே வேலையாக சென்றிருந்தான். செல்வம் சிறிது மறைவாக இருந்து என்ன நடக்கிறது என்பதை பார்த்து கொண்டிருந்தான். அன்று வந்த அதே கார். அதே டிரைவர்! "அவனுக்கு இவ்வளவு சீக்கிரம் இன்னுமொரு 'கடத்தல்' சவாரியா? நல்ல பணமாச்சே! இவனும் இதுமாதிரி ஒரு விடுதியை விரைவில் நடத்தி பணத்தைக் கொட்டி அளப்பான்" என்று பெருமூச்சு விட்டான்.

பின்சீட்டில் இருந்து ஒரு ஆள் இறங்கி, உள்ளே இருந்த இளம்பெண்ணை மயக்க நிலையில் இறக்கிக் கொண்டிருந்தான். தானும் இது மாதிரி வேகமாகச் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தான். அந்தப் பெண் மஞ்சள் சுரிதார் அணிந்து இருந்தாள். அவளை இறக்கினார்கள். ரோடு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவள் முகம் நன்றாகத் தெரிய, செல்வம் நிலைகுலைந்து போனான். அவன் நெஞ்சம் வெடித்தது. யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போன்ற உணர்வு. கை கால்கள் சக்தி இழந்து ஆடிப்போயின. கண்களில் கண்ணீர் மல்க, துக்கம் தொண்டையை அடைக்க, "விட்டுடுங்கடா. அவ என் பொண்ணுடா" என்று ஆவேசத்தோடும் பாசத்தோடும் அலறினான்.

வேகமாக வந்து அந்த ஆளிடமிருந்து செண்பகத்தை ஒரே மூச்சில் வாங்கி, வலிக்கும் மனத்துடன் அவளைத் தன்மேல் சாய்த்துக் கொண்டு காரை நோக்கி ஓடினான். அந்த ஆளும் டிரைவரும் பயந்து காரில் ஏறி அந்த இடத்தைவிட்டே மறைந்தனர்.

பாசத்தைக் கொட்டி வளர்த்த சொந்த மகளை விபசார விடுதியின் வாசலில் விலைபொருளாகப் பார்த்த காட்சி! மனச்சாட்சிக்கு எதிராக அதே தொழிலில் சம்பாதிக்கத் தான் திட்டமிட்டது எவ்வளவு கேவலமானது என்று மனம் கூக்குரலிட்டது.

வீட்டு வாசலில் காரை நிறுத்தினான். காரின் சத்தம் கேட்டுக் கனகா வாசலுக்கு ஓடிவந்து "செண்பகம் பள்ளிகூடத்திலே இருந்து இன்னமும் வரலேங்க. எத்தனை தடவை உங்களை செல் போன்லே கூப்பிட்டேங்க" என்று பதறினாள். செல்வம் எதுவும் பேசாமல் செண்பகத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போனான். "என் செல்போன் சார்ஜ் இல்லாமே இருந்திச்சு. பயப்படாதே! செண்பகத்திற்கு ஒண்ணும் ஆகல்லே. மத்தியானம் சரியா சாப்பிடலே போல இருக்கு. மயக்கம் போட்டு ரோட்லே விழுந்துட்டா. நல்ல வேளை நான் அந்த பக்கம் போனதினாலே கூட்டம் இருந்த இடத்துலே பார்த்துக் கூட்டி வந்தேன்." இந்தப் பொய்யை சொல்வதற்குள் செல்வத்தின் முகம் வெளுத்துவிட்டதை கனகா கவனிக்காமல் இல்லை.

படுக்கையில் படுத்த செல்வத்தின் கண்முன் அன்று இரவு விடுதியில் நடந்த அந்தக் கோர சம்பவம் நிரந்தரமாக நின்றது. அவன் மனச்சாட்சியின் முன் இன்று ஒரு குற்றவாளி. பத்து நிமிடங்கள் முன்னாலேயோ பின்னாலேயோ விடுதியில் இருந்து செல்வம் கிளம்பி இருந்தால், செண்பகம் சின்னா பின்னமாகி இருப்பாள்!

மறுநாள் காலை எழுந்தவுடன் செண்பகம் நடந்தை விவரமாகக் கனகாவிடம் எடுத்துச் சொன்னாள், "பள்ளியில் இருந்து திரும்பொழுது நடுவழியில் யாரோ ஒருவன், அப்பாவை ஒரு லாரி அடிச்சு ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்கன்னு சொன்னான். காரில் ஏறு, சீக்கிரம் போகலாம்னான். முகத்திலே துணியாலே அழுத்தினதும் நான் மயக்கமானேன்" என்றாள்.

"யாரோ மனச்சாட்சி இல்லாதவங்கதான் செண்பகத்தைக் கடத்தி விற்க முயற்சி செஞ்சிருக்காங்க. அவன் கையும் காலும் விளங்காமப் போகணும்!" ஆத்திரத்தின் சிகரத்தில் கனகா அலறினாள். கனகா சொன்னதெல்லாம் தன்னைக் குறிவைத்துச் சொன்னது போல செல்வத்தின் மனதிலே ஒரு குற்ற உணர்ச்சி. முந்தைய இரவின் கோர அனுபவம் அவன் மனநிலையை பாதித்தாலும், மனச்சாட்சி என்பது ஒவ்வொரு மனித உள்ளத்தில் இருக்கும் உருவமற்ற உன்னத வழிகாட்டி என்பது அவனுக்குப் புரிந்தது. .

பி. கிருஷ்ணமூர்த்தி,
ஜெர்சி சிடி, நியூ ஜெர்சி

© TamilOnline.com