கோளாப்பூ
தேவையான பொருட்கள்
வாழைப்பூ நறுக்கியது - 1 கிண்ணம்
சோயா உருண்டைகள் - 12
சிறிய வெங்காயம் - 12
கோதுமை ரொட்டி - 16 துண்டுகள்
ரொட்டித் தூள் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 5
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
உருளைக் கிழங்கு - 1
பட்டை - 1 சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
வாழைப்பூவில் உள்ள பூக்களில் கள்ளனை (நடுவில் உள்ள நரம்பு) எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வாணலியில் வதக்கி, சூடானதும் எடுத்து வைத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் சிறிது ஊறவைத்துப் பின் அதையும், வெங்காயம், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பட்டை போட்டு மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து அதையும் நறுக்கிய வாழைப்பூவையும் அரைத்த மாவுடன், உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு அதை உருண்டைகளாக உருட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து பிரெட் ஸ்லைசுகள் இரண்டை எடுத்து, தண்ணீரில் லேசாக நனைத்து, அவற்றுக்கு நடுவில் பிரெட் தூளில் புரட்டிய ஒரு உருண்டையை வைத்து பிரெட்டைச் சேர்த்து மூடி, அழுத்தி ,கோள வடிவில் செய்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். அடுப்பை நிதானமாக எரியவிட வேண்டும். சூடான கோளாப்பூ தயார். (பொட்டுக்கடலை இல்லையென்றால் மைதா மாவு (ஆல் பர்ப்பஸ்) சேர்த்துக் கொள்ளலாம்.)

இதைத் தக்காளி சாஸ் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். சத்துள்ள பொருட்களே இதில் பயன்படுத்தப் பட்டுள்ளன. எல்லா வயதினருக்கும் உகந்தது.

கமலா சுவாமிநாதன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com