பார்வையற்றோருக்கு உதவ ஹரிகதை
செப்டம்பர் 8, 2012 அன்று மாலை 4.00 மணிக்கு மில்பிடாஸ் சாயி மந்திரில் (1221 California Circle, Milpitas, CA-95035) திருமதி சுதா ராஜகோபாலனும் அவரது குழுவினரும் 'புரந்தரதாசர்' என்ற தலைப்பில் ஹரிகதை வழங்க உள்ளனர். இதில் திரட்டப்படும் நிதி அக்செஸ் பிரெய்ல் (Access Braille) என்ற பார்வையற்ற கிராமக் குழந்தைகளுக்கு பிரெய்ல் உதவிப் பெட்டிகளை வழங்கும் அமைப்புக்குச் செல்லும்.

'அக்செஸ் பிரெய்ல்' என்னும் பார்வையற்றோருக்கான கல்வி இயக்கம் விரிகுடாப் பகுதியில் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. இது முதலில் வித்யாவிருட்சம்-அமெரிக்கா என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்த இயக்கம் உலகம் முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவி உள்ளது. அக்செஸ் பிரெய்ல் ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் உள்ள தொலைதூர கிராமங்களின் பார்வையற்ற குழந்தைகளுக்கு பிரெய்ல் உதவிப் பெட்டிகளை அனுப்பிக் கொடுக்கிறது. பத்து டாலர் விலையுள்ள இந்தப் பெட்டிகளில் குழந்தைகளுக்கு பிரெய்ல் போதிக்கும் வழிமுறை விளக்கப்பட்டுள்ளது. சமூக சேவகர்கள் இந்தப் உதவிப் பெட்டிகளைத் தொலைதூர கிராமங்களுக்கு எடுத்துச் சென்று வழங்குவதோடு, கற்க உதவுகிறார்கள்.

அக்செஸ் பிரெய்லின் சமீபத்திய திட்டங்களில் ஒன்று, சிறுகதைகளைக் குறுந்தகட்டில் ஒலிப்பதிவு செய்து பார்வையற்ற குழந்தைகளுக்குத் தருவதாகும். இரண்டாவது, பிரெய்ல் பத்திரிக்கை இதழ்களை உதவிப் பெட்டிகளுடன் கொடுப்பதாகும். இவை, புதிதாக பிரெய்ல் மொழியைக் கற்றுக்கொண்ட குழந்தைகளுக்குப் படிக்கும் திறனை மேம்படுத்த உதவும். எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் ஏற்றபடி எழுதப்பட்ட இந்தப் பத்திரிக்கைகள் www.inclusivevolunteers.org என்ற அமைப்பால் உருவாக்கப்படுகிறது.

அச்செஸ் பிரெய்ல் இந்தியாவில் பல்வேறு கிராமப் பள்ளிகளிலும் நேபாளம், கானா, லைபீரியா போன்ற நாடுகளில் சில பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நிறைவேறிய இந்தியக் காப்புரிமைச் சட்டத் திருத்தம் 2012, லாப நோக்கற்ற அமைப்புகள் புத்தகப் பதிப்பாளர்களின் அனுமதி இல்லாமல் அவற்றைப் பார்வையற்றோரின் தேவைக்கேற்ப மாற்றியமைத்து வெளியிட வழி செய்கிறது. இந்த மாற்றம் பார்வையற்றோர் சமூகத்தில் தற்சார்புடன் செயல்பட வழி வகுக்கும்.

அக்செஸ் பிரெய்லின் 'பார்வை 2020' (vision 2020) திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பார்வையற்ற குழந்தையும் குறித்த வயதில் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு வேண்டிய புத்தகங்களையும் கருவிகளையும் கொடுப்பதாகும். மேலும் விவரங்களுக்கு: www.accessbraille.org

விஜி திலீப்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com