ஜூலை 2012: வாசகர் கடிதம்
ஜூன் தென்றலில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் நேர்காணல் அருமை. "இளைஞர்களுக்கு சமூகப் பிரச்னைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர, ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும் ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை என்றும், "அதே சமயம் இளைஞர்கள் இந்தப் பிரச்னைகளைப் பற்றி புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை - இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது - ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?" என்ற அவரது ஆற்றாமையும் ஆதங்கமும் பெரும்பான்மையான சமூக நலம்விரும்பிகளின் எதிரொலியாக இருந்தது.

தமிழ்நாடகக் கலை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் முக்கியமான ஒருவரான 'அவ்வை' டி.கே.சண்முகம் பற்றிய கட்டுரை, தமிழகத்திற்குப் பெருமை தந்த விஞ்ஞான மேதை பத்மபூஷன் சர். கே.எஸ். கிருஷ்ணன் பற்றிய, கட்டுரை, நிகழ்வுகள் பகுதியில், ஜப்பானில் இருக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்த பேரா. நொபோரு கரஷிமா பற்றிய செய்திக் குறிப்பு ஆகியவை அரிய தகவல்களை அளித்தன. ஒவ்வொரு தென்றலையும் வாசித்து முடிக்கும்போது, அறிஞர்களை, எழுத்தாளர்களை, சாதனையாளர்களை நேரில் சந்தித்த உணர்வு ஏற்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விழாக்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது, அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் எந்த அளவுக்குத் தமிழ் சார்ந்த கலைத் துறைகளில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் இனிய தமிழ் நடையில் பயனுள்ள செய்திகளை நேர்த்தியான வடிவமைப்பில் வழங்கிக் கொண்டிருக்கும் தென்றல் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

சென்னிமலை சண்முகம்,
நியூ யார்க்

*****


ஜூன் இதழில் வெளியான கதைகளும், கட்டுரைகளும் மிக அருமை. குறிப்பாக 'ஒரு கடிதத்தின் விலை' சிறுகதை. இடையிடையே நகைச்சுவையுடன் மிளிர்ந்தாலும் இறுதியில் கண்களில் நீரை வரவழைத்தது. இலங்கைவாழ் தமிழ் மக்களின் துயரமும், துன்பமும் நாளடைவில் மறைந்து விடாமல் நினைவூட்ட இதுபோன்ற கதைகளே உதாரணம். பிறந்த மண்ணை விட்டுத் தொலைதூரம் சென்றாலும் அம்மண்ணின் மைந்தர்கள் படும் அவலம் ஆறாத ரணமாக ஆழ்கடல் நீரோட்டம் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான மேதை சர். கே.எஸ். கிருஷ்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரைப் பற்றிய வரலாறு, பெருந்தன்மை, மொழிப்பற்று முதலியவற்றைத் தெளிவாக உணர்த்திய தென்றலுக்கு நன்றி. 'சில மாற்றங்கள்' தொடர் வராதது ஏமாற்றமாய் இருந்தது. டி.கே. சண்முகம் மிகச் சிறந்த நடிகர். அவருடைய சகோதரர் டி.கே. பகவதியும் அவ்வாறே. இளைய சமுதாயத்துக்கு அவரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுபத்ரா பெருமாள்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com