TLG இயல் விருது–2012
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) வழங்கும் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 16ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இம்முறை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் எஸ்.ரா. கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா எனப் பல இலக்கிய வகைப்பாடுகளில் இயங்கியவர். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் இயக்குநருமான மகேஷ் தத்தானி பரிசை வழங்க எஸ்.ரா. பெற்றுக்கொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏற்புரை அற்புதமாக இருந்தது. தன்னுடைய உரையை குடத்தின் அடியில் காணப்பட்ட நீரைக் குடிப்பதற்காகக் கற்களைப் போட்டு நிரப்பிய காக்கையுடன் ஆரம்பித்தார். எல்லா எழுத்தாளர்களுக்கும் அந்தக் காக்கையைப் பிடிக்கும். ஏனெனெனில் அதுதான் முதன்முதல் சிந்திக்கத் தெரிந்த காக்கை. எழுத்தாளன் அதைத்தான் செய்கிறான். எல்லோருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதன் மறைந்ததும் அவனுடைய அனுபவங்களும் மறைந்து விடுகின்றன. ஓர் எழுத்தாளன் தன் அனுபவங்களை கதைகளாக்கிவிடுவதால் அவை காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அவன் மறைந்தாலும் அவன் உருவாக்கிய கதைகள் அவனை நினைவூட்டிக்கொண்டு வாழ்கின்றன.

இரண்டாயிர வருடம் பழமையான இலக்கியம் இன்று வாழ்ந்தால் அதன் பொருள் அதன் படைப்பாளி இன்னும் எம்முடன் வாழ்கிறார் என்பதுதான். எஸ்.ராமகிருஷ்ணன் இந்த விருதைத் தனக்கு முதல் எழுத்து படிப்பித்த ஆசிரியர் சார்பாகவும், தன் மனைவி, பெற்றோர், பிள்ளைகள் சார்பாகவும், இன்னும் தன்னுடன் விருதுபெறும் ஏனைய படைப்பாளிகள் சார்பாகவும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னபோது மிகவும் நெகிழ்வாக இருந்தது. முக்கியமாகத் தன்னை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய தேவதச்சனை நினைவுகூர்ந்தார்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன. புனைவிலக்கியப் பிரிவில் 'பயணக் கதை' நாவலுக்காக யுவன் சந்திரசேகருக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'கெட்டவார்த்தை பேசுவோம்' நூலுக்காக பெருமாள் முருகனுக்கும், கவிதைப் பிரிவில் 'இரண்டு சூரியன்' தொகுப்புக்காக தேவதச்சனுக்கும், 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்புக்காக அனாருக்கும், மொழிபெயர்ப்புப் பிரிவில் 'என் பெயர் சிவப்பு' நூலுக்காக ஜி. குப்புசாமிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் கட்டுரைப் போட்டியில் ராம் அட்ரியன் பரிசு பெற்றார். சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட 'கணிமை விருது' வாசு அரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது. விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

அ. முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com