துணிவே துணை
"பிளைட்ல வந்தாலே டிம்மிக்கு ஒத்துக்கறதில்லை," இளங்கோ முணுமுணுத்தான். ஏசி குளிரில் அவனருகே இருந்த சீட்டில் டிம்மி நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது.

"நாயை எப்படி பிளைட்ல அதுவும் பர்ஸ்ட் க்ளாஸ் சீட்ல உட்கார விட்டீர்கள்?" என யாரோ பிளைட் அட்டெண்டன்டிடம் உரத்த குரலில் கேட்பது இளங்கோவுக்குக் கேட்டது. அதற்கு பிளைட் அட்டெண்டன்ட் என்ன பதில் சொன்னார் என்பது அவனுக்குச் சரிவரக் கேட்கவில்லை. ஆனால் அதன்பின் அந்தக் குரல் அடங்கிவிட்டது.

இளங்கோ மனதுக்குள் சிரித்துக் கொண்டான். மாநில முதல்வரின் ஒரே மகன் நாய் என்ன யானையையே உட்கார வைத்து கூட்டிவரலாம். யார் கேட்பது?

டிம்மி திடீரென எழுந்தது. பாய்ந்தது. எகானமி வகுப்புக்குள் ஓடியது.

"ஹேய் டிம்மி கம் பேக்" இளங்கோ கத்திகொண்டே அதைத் துரத்தினான்.

டிம்மி பயணி ஒருவர் வைத்திருந்த பிஸ்கட் பாக்கட்டைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இளங்கோவைப் பார்த்ததும் சாதுவாக அவன் பின்னே சென்று ஒளிந்துகொண்டது.

"சாரி" என்றான் இளங்கோ பயணியிடம்.

"நாயை எப்படி பிளைட்டுக்குள் விட்டீர்கள். மை காட்" என்றாள் அவர் அருகிலிருந்த பெண். இருவரும் பார்த்தால் ஒரே ஜாடை. அப்பா மகளாக இருக்கலாமோ?

"இவர் முதல்வர் மகன்" என யாரோ அவளிடம் கிசுகிசுத்தார்கள்.

"ஸோ வாட்? முதல்வர் மகன் என்றால் எந்தச் சட்டத்தையும் பின்பற்ற வேண்டியது இல்லையா?"

"நான் சாரி சொல்லிவிட்டேன். டேக் இட் ஆர் லீவ் இட்" என்றான் இளங்கோ. திரும்பினான். டிம்மியுடன் தன் இருக்கையை நோக்கி நடந்தான்.

"இனி ஒருதரம் நாய் இங்கே வந்தால்..." அவள் பின்னால் இருந்து கத்தினாள்.

இளங்கோவுக்குள் ஏதோ அறுந்தது. திரும்பினான்.

"வந்தால் என்னடி செய்வாய்? நான் சாரி சொல்லியும் இன்னும் அடங்காமல் குதித்தாய் என்றால் உனக்கு எத்தனை திமிர் இருக்கணும்! இந்த நாயை மறுபடி அனுப்பறேன். என்ன செய்ய முடியுமோ செய்து கொள்" என டிம்மியை அவள்மேல் ஏவினான்.

அவள் தன் கையில் இருந்த பெப்சி கேனை நாயின் தலையை நோக்கி வீசினாள். டிம்மி வீல் எனக் கத்திகொண்டே விமானத்தில் அங்கும் இங்கும் ஓடியது.

ஆங்கிலத்தில் அவளைப் பெண்நாய் என்று திட்டியபடி டிம்மியைத் துரத்தினான் இளங்கோ. விமானத்தில் அனைவரும் அவனைப் பார்த்துச் சிரிப்பதாகப் பட்டது. நாயை எடுத்துக்கொண்டு அவளிடம் மூச்சிறைக்க வந்தான்.

"விமானம் சென்னையில் இறங்கட்டும். நீ யாராக இருந்தாலும் உன் கதை அத்துடன் முடிகிறது" என்றான்.

"சார் ப்ளீஸ்.." எனக் கெஞ்சிய விமான பணிப்பெண்ணைப் புறக்கணித்தான். தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

"சாரி சொல்லிடு" என அந்தப் பெண்ணை பலரும் கெஞ்சுவது அவன் காதில் விழுந்தது. அவள் அனைவரையும் திட்டினாள், "என்ன செய்து கிழிக்கிறான் எனப் பார்க்கலாம். முதல்வர் மகன் என்றால் பெரிய கொம்பா?" என்று அவள் சொல்வதும் காதில் விழுந்தது.

அவள் தந்தை திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தார்.

"டாக்டர்....டாக்டர்!" பயணிகள் அலறினார்கள்.

டாக்டர் யாரும் இல்லாததால் பைலட் விமானத்தை வழியில் இருந்த சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறக்கினார்.

அந்தப் பெண்ணும், அவள் தந்தையும் விமானத்தில் இருந்து இறங்குவதை இளங்கோ பார்த்தான். அவள் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது. "இது டிராமா" என்று முணுமுணுத்துக் கொண்டான். கறுவினான். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் விமானத்துக்குள் பொலீஸ் ஏறியது.

"மிஸ்டர் இளங்கோ. கொலை மிரட்டல் மற்றும் நாயை விட்டு அசால்ட் செய்த குற்றத்துக்காக உங்களைக் கைது செய்கிறோம். பயணி ஒருவரின் செல்போன் வீடியோவில் அனைத்தும் பதிவாகி இருக்கிறது" என்றார்கள்.

"நான் தமிழக முதல்வர் மகன்"

"அவருக்கு போன் செய்ய உங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். நடவுங்கள்"

இளங்கோ கைவிலங்குடன் விமானத்திலிருந்து இறங்கினான்.

அவள் தூரத்திலிருந்து அவனுக்குக் கை அசைத்து குட் பை சொன்னாள். இளங்கோ பற்களை நறநறத்தான்.

செல்வன்,
டி பியர், விஸ்கான்சின்

© TamilOnline.com