அன்புள்ள சிநேகிதியே,
அன்புள்ள சிநேகிதியே,

இது என்னுடைய நெருங்கிய தோழியின் பிரச்சனை. எத்தனையோ வருடங்களாக அவளைத் தெரிந்திருந்தாலும் தனது கஷ்டங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறாள். என்னைப்பற்றி, என் குடும்ப நிலவரத்தைப் பற்றி மிகவும் அக்கறையாகக் கேட்பாள். நானும் உள்ளது உள்ளபடியே சொல்லுவேன். ஆனால் அவள் ஏதாவது பேசி மழுப்பி விடுவாள். 5-6 வருடங்களாக அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு அளவில்லை. கணவருக்கு வேலை போய்விட்டது. இவள் பல வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து தொழில்ரீதியாக வெளிநாட்டில் இருந்தாள். போதும் என்று இவள் திரும்பி வந்தபோது அவள் கணவருக்கும் வேலையில்லை. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று இருந்தாலும் அவருக்கு கேன்சர் என்று தெரியவந்தது. அவருக்கு 'கீமோதெரபி' என்று அலைந்து கொண்டிருந்தபோது அவளுடைய மகனுக்கு திடீரென்று கண்பார்வை மங்கிப் போய்விட்டது. அவனுக்கு அறுவை சிகிச்சை என்று அலைந்து கொண்டிருந்தாள். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் நடுவில், அவளுக்கு வலி பொறுக்க முடியாமல் இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்தது. அவளுடைய இன்னொரு பையன் தனது மேல்படிப்பை நிறுத்திவிட்டு அவ்வப்போது எல்லோரையும் Medical Appointmentக்கு கூட்டிப் போய் வந்து கொண்டிருக்கிறான். வேறு யாரும் உதவிக்கு இல்லை. நான் போன் செய்து உதவி வேண்டுமா என்று கேட்டாலும் மறுத்து விடுவாள். அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரியுமே தவிர, உடனுக்குடன் தெரியாது. அவளுக்கு தன்னுடைய அறுவை சிகிச்சை, அதற்குப் பின்னால் ஏற்பட்ட வலி, Physical Theraphy, மகனி கண் கோளாறு எல்லாம் கொஞ்சம் சரியாகும் நேரத்தில், கணவர் மிகவும் சீரியசாகப் போய் விட்டார். அது ஒரு வருடப் போராட்டம். சமீபத்தில் அவரை இழந்தாள். அந்த துக்கத்தைக்கூட நினைத்துப் பார்க்க முடியாமல், கணவர் இறந்த 10 தினங்களுக்குள் அவளுடைய மகன் நரம்பியக்கத் தடையில் (Neuropathy) துடிக்க ஆரம்பித்தான். என்ன மருத்துவம் செய்தாலும், அந்த வலி போகவில்லை. எதனால் வலி என்று கண்டுபிடிக்க மருத்துவப் பரிசோதனை செய்யும்போது, இந்த வலிக்குச் சம்பந்தமே இல்லாமல் அவன் கழுத்தினுள் ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்து, அவனுக்கு உடனே சர்ஜரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறாள். இன்னும் அவனுடைய ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்படவில்லை. போனவாரம் அவளுடன் பேசும்போதுதான் முதன்முறையாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுது தீர்த்துவிட்டாள். பலநூறு மைல் தள்ளியிருக்கிறேன். என்னால் அடிக்கடி போனில்தான் பேச முடிகிறது. அதுவும், பாதி நேரம் அவள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு எந்த வகையில் உதவி செய்வது என்று புரிபடாமல் குழம்புகிறேன். பெருமாளைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அவள் என்னுடன் மனம்விட்டு எப்படிப் பேச வைப்பது?

இப்படிக்கு
.............

அன்புள்ள சிநேகிதியே

நீஙள் இன்னும் சில சோகமான செய்திகளை விவரித்துச் சொல்லியிருந்தீர்கள். என்னால் எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உங்கள் நட்பின் ஆழம், உங்கள் சிநேகிதிக்குத் தொடர்ந்து ஏற்படும் துயரம் எல்லாம் இந்தப் பகுதியைப் படிக்கும் ஒவ்வொரு தென்றல் வாசகர் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்தத் துயரம், வேதனை மறைந்து உங்கள் நட்பின் ஆழம் கூடவேண்டும் என்ற வேண்டுதல்தான் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். சொந்தத்தாலும் பந்தத்தாலும் மட்டும் உறவுகள் உண்டாவதில்லை பெயர் தெரியாத, ஊர் தெரியாத, உருவம் தெரியாத உறவுகளின் ஊக்கம் கூட ஒருவருடைய வேதனைகளைக் குறைப்பதற்குப் பாலமாக இருக்கும். அந்த வகையில் உங்கள் தோழியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் பலன் இருக்கும்.

பல வருடங்களாக நண்பர்களாக இருந்தும் அவர் மனம்விட்டுப் பேசவில்லை என்றால் இது அவருடைய குணாதிசயம். பலபேர் தங்கள் சோதனைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கம்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுப்பது போன்ற ஒரு உணர்ச்சியைத் தரும். சிலருக்கு தங்களுடைய அந்தரங்கத்தை தங்களுக்கு வேண்டியவர்களிடம் பங்குபோட்டுக் கொண்டால்தான் அந்தப் பாதுகாப்பு உணர்ச்சி கிடைக்கிறது. கணவன்-மனைவி உறவுக்குள்ளேயே நான் இதுபோல் பார்த்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவைத் தொடர்ந்து போன்மூலம் தெரிவியுங்கள். அனுதாபம், ஆறுதல் இதெல்லாம் சிலருக்குப் பிடிப்பதில்லை. அவர் மனம்விட்டுப் பேசாவிட்டாலும், உங்கள் அந்தரங்கத்தையும் உண்மையான சிநேகிதத்தையும் புரிந்து கொள்வார். வாழ்க்கைத் துணை, குடும்பம் என்று இருந்த சமயத்தில் நிறைய உங்களுடன் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமலும் இருந்திருக்கலாம். இப்போது தனிமையும், வெறுமையும் கூடும்போது, உங்களுடைய தோழமை நிறைய வேண்டியிருக்கும். சுபாவத்தை மீறிச் சிறிது மனம் திறந்து பேசவும் வாய்ப்புகள் உண்டு.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com