ர.சு.நல்லபெருமாள்
தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமிக்க படைப்பாளியாக விளங்கியவர் ரவணசமுத்திரம் சுப்பையாபிள்ளை நல்லபெருமாள் என்னும் ர.சு. நல்லபெருமாள். வீரியமிக்க எழுத்துக்கும், மரபார்ந்த சிந்தனைகளுக்கும் புதிய வடிவம் கொடுத்த இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரவணசமுத்திரத்தில் சுப்பையாபிள்ளை, சிவஞானத்தம்மாள் தம்பதியினருக்கு, 1930ல் மகனாகப் பிறந்தார். தந்தை அஞ்சல்துறை அதிகாரியாக இருந்ததால் பல இடங்களில் கல்வி கற்க வேண்டிய நிலை. பாளையங்கோட்டையில் உயர்நிலை வகுப்பை முடித்தவர், திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். அக்கால கட்டத்தில் திருமணம் நிகழ்ந்தது. சில கால சென்னை வாசத்துக்குப் பின் திருநெல்வேலிக்குச் சென்ற நல்லபெருமாள், வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது அப்போதைய அனுபவங்களும், அவர் எதிர்கொண்ட பல வழக்குகளும் அவரை எழுதத் தூண்டின.

இயல்பாகவே அவருக்கு எழுத்தார்வம் இருந்தது. தீவிர வாசிப்பார்வம் அதை வளர்த்தது. அவருடைய முதல் சிறுகதை 'இரு நண்பர்கள்' கல்கியில் வெளியாகி அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. சிறுகதையைப் பாராட்டியும், தொடர்ந்து எழுதும்படியும் கல்கி. கிருஷ்ணமூர்த்தி ஊக்குவித்துக் கடிதம் எழுத, தொடர்ந்து எழுதினார். கல்கி வெள்ளி விழா நாவல் போட்டிக்கு அவர் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவல் அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. ராஜாஜி பரிசளித்து கௌரவித்தார். இந்த நாவலில் வரும் ரங்கமணி கதாபாத்திரம் அக்கால வாசகர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்நாவலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை நல்லபெருமாள் எழுத்தில் விவரித்திருக்கும் பாங்கு படிக்கும் வாசகருக்கும் அதில் பங்கேற்ற உணர்வைத் தரக் கூடியதாய் இருக்கும். "கல்கியின் 'அலை ஓசை' நாவலுடன் ஒப்பிடத் தகுந்தது 'கல்லுக்குள் ஈரம்'" என்ற சிட்டி, சிவபாதசுந்தரத்தின் கூற்று இங்கே கருதத்தக்கது. 'விடுதலைப் புலிகள்' அமைப்பின் தலைவரான பிரபாகரன், "உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது எது?" என்ற கேள்விக்கு, "ர.சு. நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' என்ற கதைதான். அது கல்கியில் தொடராக வந்தபோது அதை நான் திரும்பத் திரும்பப் படித்தேன்," என்று சொன்னதன்மூலம் அந்த நாவலுக்கு இருந்த செல்வாக்கை அறியலாம். பிரபாகரன் மட்டுமல்ல; அக்காலத்து இளைஞர்கள் பலரது மனம் கவர்ந்த நாவல் அது.

முதல் நாவலே பரிசு பெற்றதைத் தொடர்ந்து நாவல்கள் எழுதுவதில் அதிக கவனம் செலுத்தினார் நல்லபெருமாள். தொடர்ந்து அவர் எழுதிய 'போராட்டங்கள்' நாவல் அவருக்குள் இருக்கும் சமூகப் போராளியை அடையாளம் காட்டியது. கம்யூனிச இயக்கத்தைச் சேர்ந்த பலர் தனக்கு நண்பராக இருந்தபோதும் கூட அந்தக் கொள்கைகளில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதில் எழுதியிருந்தார். இந்நாவல் மூலம் அவர் சில எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது என்றாலும் தொடர்ந்து எழுதினார். பின்னர் இந்த நாவல் ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. 1981ல் வெளியான இவரது 'நம்பிக்கைகள்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு (ரூ.10000/-) பெற்றது. 'உணர்வுகள் உறங்குவதில்லை' நாவல், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது பெற்றது. 1985ல் இவர் எழுதிய 'தூங்கும் எரிமலைகள்' என்ற நாவல் தீவிரமான எதிர்ப்பைச் சந்தித்தது. பிறப்பால் பிராமணனான ஏழை இளைஞன் ஒருவன், தனக்கு தகுதி, திறமை இருந்தும் மேல்படிப்பு படிக்க முடியாததால் தீவிரவாதியாக மாறுவதை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார் நல்லபெருமாள். பல பத்திரிகைகள் அக்கதையை வெளியிட்டால் தங்கள் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றஞ்சி வெளியிட மறுத்தன. இறுதியாக தினமணி கதிரில் அந்நாவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்திய, நேருவிய கொள்கைகளின் போதாமையை மையமாக வைத்து இவர் எழுதியிருந்த 'மரிக்கொழுந்து மங்கை' வரலாற்று நாவலும் இவருக்கு எதிர்ப்பைத் தந்தது. போலி வேடதாரிகளை அடையாளம் காட்டிய 'திருடர்கள்'; மருத்துவத் துறையை, அதைச் சீரழிக்கிற மருத்துவர்களைக் குறித்தும் அதனால் சமூகம் படுகிற துன்பங்களைக் குறிக்கும் 'எண்ணங்கள் மாறலாம்' மற்றும் 'கேட்டதெல்லாம் போதும்' போன்றவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆத்திகம், நாத்திகம் இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த 'மயக்கங்கள்' நாவல் கட்டமைப்பில் மிகச் சிறப்பான ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. இவர் இந்திய வரலாறு பற்றி எழுதியிருக்கும், 'சிந்தனை வகுத்த வழி' நூல் குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. அரசியல் சிந்தனை பற்றி இவர் எழுதியிருக்கும் 'இந்தியச் சிந்தனை மரபு' நூலும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்திய தத்துவ மரபுகளைப் பற்றிய விரிவான அறிமுகமாகவும் அலசலாகவும் உள்ள நூல், இவர் எழுதிய 'பிரும்ம ரகசியம்'. புராண கதாபாத்திரமான நசிகேதஸ், அந்தந்தத் தத்துவங்களைப் படைத்த ஞானிகளைச் சந்தித்து அவர்களிடமே தனது சந்தேகங்களை நேரிடையாகக் கேட்டு விளக்கம் அறிவது போல அந்த நூலை மிகச் சுவையாக படைத்திருப்பார் நல்லபெருமாள். உபநிடதத்தில் தொடங்கி, லோகாயதம், சமணம், பௌத்தம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், மீமாம்சம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம் என அனைத்துத் தத்துவங்களையும் மிக விரிவாக அலசும் நூல் இது. இதற்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. 'பாரதம் வளர்ந்த கதை' வரலாற்று நூலும் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. இவருடைய 'சங்கராபரணம்', 'இதயம் ஆயிரம் விதம்' போன்ற சிறுகதைத் தொகுதிகளும் குறிப்பிடத் தகுந்தனவாகும். இருப்பினும் சமூக நாவல்கள் பேசப்பட்ட அளவுக்கு அவரது பல சிறுகதைகள் பெரிதாகப் பேசப்படாததற்குக் காரணம், வணிக நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து அவர் எழுத விரும்பாததுதான்.

பத்து சமூக நாவல்கள், இரண்டு சரித்திர நாவல்கள், ஒரு தத்துவ நூல், இரண்டு சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூல் என மொத்தம் 37 படைப்புகளை எழுதியுள்ளார் ர.சு. நல்லபெருமாள். அவரது மொத்தப் படைப்புகளையும் படித்து, ஆய்வு செய்து 'கல்லுக்குள் சிற்பங்கள்' என்ற ஆய்வு நூலை எழுதியிருக்கிறார் டாக்டர். பேரா. அய்க்கண். மாணவர் பலர் ர.சு. நல்லபெருமாளின் நூல்களை ஆய்வு செய்து எம்.பில், பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகங்களும் தனது பாடத்திட்டத்தில் இவரது நூல்களை இடம் பெறச் செய்து கௌரவித்துள்ளன. 'ஹே ராம்' திரைப்படம் இவரது 'கல்லுக்குள் ஈரம்' நாவலைத் தழுவியது என்ற கருத்துமுண்டு. "நல்லபெருமாள், இலக்கியம் என்பது கருத்துப் பிரசாரத்திற்கும் உணர்ச்சிவசப்படாத புறவயமான ஆய்வுக்கும் உரிய ஒரு மொழிக்களம் என நினைத்தவர். பெரும்பாலான படைப்புகளை தர்க்கத்தன்மையுடன் புறவயமான அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார். எதையும் கொந்தளிப்புடன் அணுகும் ஒரு சமூகத்தில் அவ்வகையான அணுகுமுறை பல புதிய வாசல்களை திறக்கக்கூடியதாக அமைந்தது" என்கிறார் ஜெயமோகன்.

ர.சு. நல்லபெருமாள் நேர்மையின் உதாரணமாகத் திகழ்ந்தவர். தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு ஏதுமில்லாமல், சமரசமில்லாமல் வாழ்ந்தவர். ஏப்ரல் 20, 2011 அன்று நெல்லை அருகே பாளையங்கோட்டையில் அவர் காலமானார். அவரது மகன்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன்; மகள்கள் சிவஞானம், அலமேலுமங்கை ஆகியோரும் இலக்கிய ஆர்வம் உடையவர்களே. அமெரிக்காவில் வசிக்கும் மகள் அலமேலு மங்கை, நல்லபெருமாளின் இலக்கிய வாரிசாகத் திகழ்கிறார். 'அம்மு சுப்ரமணியம்' என்ற புனைபெயரில் எழுதி வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com