தென்றல் பேசுகிறது...
ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில், குறிப்பாக அலாஸ்கா கடற்கரை ஓரம், எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் வேலை ஜூலை மாதத்தில் தொடங்கிவிடும் என்று தனது 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' உரையில் அதிபர் ஒபாமா கூறியது சுற்றுச்சூழல் அக்கறையாளர் மற்றும் அறிவியலாளர் மத்தியில் பெரும் கவலையைத் உண்டாக்கியிருக்கிறது. "யூஎஸ் ஜியலாஜிகல் சர்வேயின் (USGS) பரிந்துரைகளை (அமெரிக்க) நிர்வாகம் பின்பற்ற வேண்டும். ஆர்க்டிக் பெருங்கடலில் புதிய எண்ணெய், இயற்கை வாயுவுக்கான பணிகளை அங்கீகரிக்கு முன்னர் இவ்வாறு செய்வது, அமெரிக்காவின் சூழல் மற்றும் கலாசாரத்தின் தேசிய முக்கியத்துவத்தை மதிப்பதாகும்" என்று 573 அறிவியல் ஆய்வாளர்கள் கையொப்பமிட்டு ஒரு கடிதத்தை அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளனர். பனியுறைந்த ஆர்க்டிக் பகுதி உலகின் மிக மாறுபட்டதொரு சூழலமைப்பைக் கொண்டது. புவி வெப்பமயத்தின் காரணமாகப் பனி உருகுவது அதிகமாகிவிட்டதென்ற கவலை ஏற்பட்டுள்ள இந்தச் சமயத்தில், தீவிர எண்ணெய் தோண்டுதல் பணிகள் அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பத்திலும் உயிரினங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்; அங்கு வசிக்கும் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் என்ற கருத்தில் நியாயம் உள்ளது.

ஆனாலும், வீழ்ந்து வரும் கச்சா எண்ணெயின் விலை இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்ற நம்பிக்கையை உண்டாக்குகிறது. கேஸின் விலை ஏறியதுமே சுத்திகரிப்பு ஆலைகளில் கச்சா எண்ணெய்க் கையிருப்பு ஏறிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தில் நுகர்வோர் நம்பிக்கைக் குறைந்து போனது. சுத்திகரிப்பு ஆலைகள் தமது செயல்திறனை உயர்த்தி, கேஸின் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, கேஸ் நுகர்வை மட்டுப்படுத்தி தம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொண்டனர். இவையெல்லாம் காலத்துக்கேற்ப நம்மால் மாறமுடியும் என்பதைத் தெளிவாகக் காட்டியது. சூழல் அக்கறையாளர்கள், அறிவியலாளர்களோடு சாதாரணப் பிரஜைகளும் ஒரு தனி லாபியைவிட தேசத்தின் நலம் முக்கியம் என்பதை உரத்துக் கூறுவது அவசியம்.

*****


போதிய ஊட்டமில்லாமல் வயிறு வீங்கி, கால் சூம்பி, கண் செருகிய ஆப்பிரிக்கக் குழந்தைகளின் படங்களை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஓர் ஆண்டில் வளர்ந்த நாடுகள் மட்டுமே 222 மிலியன் டன் நல்ல உணவுப் பொருளை - இவற்றில் பழம், காய்கறிகள் அடக்கம் - வீணாகக் குப்பைத் தொட்டியில் வீசுகின்றன. குறைந்த விலைக்குக் கிடைக்கிறதென்பதற்காக வாங்கி, பின்னர் உண்ணாமல் எறியப்படும் உணவுப்பொருள் இது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டுக்குச் சராசரியாகத் தலா 95 முதல் 115 கிலோ உணவுப் பொருளை வீணாக்குகின்றனர். மெழுகு பொம்மை போல, வளையாமல் நீண்டு இருக்கும் காரட்டுகளை மட்டுமே விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், சற்றே மாறுபட்டவற்றை விலங்குத் தீவனமாகச் செய்கின்றன. இதைத் தவிர கௌரவத்துக்காக தட்டில் உணவைக் குவித்துக் கொண்டு, அதில் பெரும்பகுதியை வைத்துவிட்டுப் போவதையும் விருந்துகளில் பார்க்கிறோம். இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் கூறிய ஆப்பிரிக்கக் குழந்தையைக் கண்முன் கொண்டு நிறுத்திப் பார்க்கும் எவரும் இத்தகைய அநியாயமான செயலைச் செய்ய மாட்டார். தான் செய்யாதது மட்டுமல்ல, 'தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அறைகூவிய பாரதியின் ஆவேசத்தோடு, பிறரையும் உணவுப் பொருளை வீணாக்க விடாமல் தடுத்து நிறுத்துவார். அதுகுறித்த அறிதலைப் பரப்புவார்.

*****


இன்றைய உலகின் மிகச்சிறந்த கணித அறிஞர்களில் முதல் சிலருக்குள் இடம் பிடித்துள்ளவர் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன். கணிதத்துக்கு நோபெல் பரிசு இல்லாத நிலையில் அதற்கிணையான ஏபெல் பரிசு பெற்றவர். அமெரிக்க அரசின் 'தேசிய அறிவியல் பதக்கம்', இந்திய அரசின் 'பத்மபூஷண்' உட்படப் பெரிய கௌரவங்களைப் பெற்றவர். ஆனாலும் எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழர். அவரது நேர்காணலைத் தாங்கிவருவதில் தென்றல் பெருமிதம் கொள்கிறது. இளைஞர் கலை. செழியன் கவனகம் என்னும் நினைவாற்றல் சாகச வீரர். எழுபது கவனகம் என்னும் நிகழ்ச்சியை FeTNA வெள்ளிவிழாவில் செய்து காட்டி, தமிழகத்தின் அறிவாற்றலுக்கு மேலுமொரு ஒளிவிளக்காகத் திகழப்போகிறவர். அவரது நேர்காணல் நமக்கு மனித மூளையின் திறன் குறித்த மற்றொரு சாளரத்தைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. வாசகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாசித்து வந்த 'சில மாற்றங்கள்' இந்த இதழில் நிறைவடைகிறது. வழக்கமான பிற அம்சங்களும் உண்டு.

*****


ஃபெட்னாவின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் சிறக்கத் தென்றலின் வாழ்த்துக்கள். வாசகர்களுக்கு அமெரிக்க விடுதலை நாள் வாழ்த்துக்கள்.


ஜூலை 2012

© TamilOnline.com