சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி
ஏப்ரல் 28, 2012 அன்று சிமிவேல்லி கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் ஸ்நேகா, ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை அழகாகப் பாடினார். 'மரிவோதி' என்கிற ஆனந்தபைரவி கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து சாவேரி ராகத்தில் 'சங்கரி சங்குரு சந்த்ரமுகி', கல்யாணியில் 'பிராவளாலச்சி', சிந்தாமணியில் 'தேவி ரோவ' ஆகிய கீர்த்தனைகளைப் பாடினார். பத்து நிமிடம் தோடியில் ஆலாபனை செய்து 'நின்னே நம்மினானு' என்கிற கீர்த்தனையில், நிரவல், ஸ்வரம் பாடி, மிருதங்க வித்வான் டாக்டர் சுதாகருக்கு தனி ஆவர்த்தனம் கொடுத்தார். லலிதா ராக 'தன்னு ப்ரோவு லலிதா', பைரவியில் 'சரி எவரம்மா', மத்யமாவதியில் 'பாலிஞ்சு காமாட்சி' பாடி முடித்தார். கிருஷ்ணன் குட்டியின் வயலினும் சுதாகரின் மிருதங்கமும் சிறப்பாக இருந்தன.

U.S.C.யில் மாணவியாகச் சேர இருக்கும் ஸ்நேகாவின் குரு கல்யாணி சதானந்தம், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இசைப்பள்ளியில் படித்துத் தேறியவர். அவரது நெடுநாளைய ஆசை சியாமா சாஸ்திரியின் க்ருதிகளை பொருத்தமான சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்துடன் துவங்கி கீர்த்தனைகளைப் பாட வேண்டும் என்பது. அந்த விருப்பத்தைத் தன் சிஷ்யை ஸ்நேகா மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.

இந்திரா பார்த்தசாரதி,
சிமி வேல்லி, கலிஃபோர்னியா

© TamilOnline.com