சித்திரை கலாட்டா 2012
மே 12, 2012 அன்று, தென்மத்திய தமிழ்ச் சங்கத்தினர் 'சித்திரை கலாட்டா' விழாவை, மெம்ஃபிஸ் பெருநகரத்தில் உள்ள காலியர்வில் என்னும் ஊரில் ஹாரல் கலையரங்கத்தில் கொண்டாடினர். தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத் தலைவர் செந்தில் சந்திரன் வரவேற்றதுடன் தலைமையுரையும் ஆற்றினார்.

அபர்ணா பாட்லா அவர்கள் கலைநயத்தில் கணேசர் துதிப் பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து, மெம்ஃபிஸ் நகரத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வழங்கிய வில்லுப்பாட்டு நடைபெற்றது.

'அமெரிக்காவில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்பது திரைப்படங்களினாலா? தமிழ்ப் பள்ளிகளினாலா?' என்னும் பட்டிமண்டபம் நடைபெற்றது. திரைப்படங்களினாலேயே எனும் அணிக்காக, தமிழ்ப்பள்ளி முதல்வர் கண்ணன், துரைக்கண்ணன் ஆகியோர் பேசினர். 'தமிழ்ப்பள்ளிகளினாலேயே' என்று டாக்டர் மேரி அன்னபூர்ணா, ஜெய் ஆகியோர் வாதிட்டனர். நடுவர் பதிவர் பழமைபேசி தனது தீர்ப்பில் தமிழைக் குழந்தைகள் முறைப்படி கற்பது பள்ளிகளினாலேயே எனத் தீர்ப்பளித்தார். பாட்டிசை, பாரதியார் பாடல்கள் முதலானவற்றுக்குப் பிறகு, மஞ்சுளா தேவி வடிவமைத்த நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து, காயத்ரி சேஷாத்ரி இயக்கிய தரிசினி நாட்டியாலாயாவின் கணேச நாட்டியம் பெரும் கரவொலியைப் பெற்றது. 'ஹிப் ஹாப்பர்ஸ்' என்னும் துள்ளாட்டத்தின் போது, அரங்கம் களிப்பில் கரைபுரண்டு போனது. இதை அபர்ணா பாட்லா வடிவமைத்து இருந்தார். அடுத்து சுபத்ரா செந்தில் கைவண்ணத்தில், தமிழ்ப் பள்ளி மாணவர்கள், 'அச்சமில்லை அச்சமில்லை' எனும் பாடலைச் சற்று மாற்றிப் பாடியது கவனத்தை ஈர்த்தது.

விஷ்வா, சசி இணையர் வழங்கிய பலகுரலிசை நையாண்டி நகைச்சுவையில் திளைத்துப் போயினர் பார்வையாளர்கள். பின்னர் 'மோகினி பஸ்மாசுரன்' நாட்டிய நாடகம் இடம்பெற்றது. பாலே நடனம், கலப்பிசை நடனம், திரைப்படப் பாட்டிசை ஆகியவை அடுத்து வந்தன. நிறைவாக, சரசுவதி அவர்கள் மங்கல வாழ்த்திசை பாடினார். அகஸ்டின் சாம்சன், அனிலா குழுவினர் படப்பிடிப்புக்குப் பொறுப்பேற்றிருந்தனர். சங்கத்தின் செயலாளர், அண்மையில் அமரரான செயல்வீரர் அலெக்ஸ் அவர்களின் பணிகளைப் போற்றிப் பேசியதோடு, நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிகளை கங்கா மற்றும் உஷா தொகுத்து வழங்கினர். சசிகுமார் குழுவினரின் மேடை வடிவமைப்பு பாராட்டுதலைப் பெற்றது. விழா ஏற்பாடுகளை சசிகுமார் சந்திரன், விவேக் வரதராஜன், செந்தில் சந்திரன், மது சுந்தரராஜன், மஞ்சு ஜோசப் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

பதிவர் பழமைபேசி,
மெம்ஃபிஸ், டென்னசி

© TamilOnline.com