மாயா அபிராம்: கணிதக் கங்காரு!
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' (www.mathkangaroo.org) என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில் ஒவ்வோர் ஆண்டும் வைக்கும் தேர்வில் முதலிடம் பிடிப்பவர்களை 'கணித கங்காரு' என்றுதானே அழைக்க முடியும்! 2012ம் ஆண்டு மேத்ஸ் கங்காரு தேசிய அளவில் முதல் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை படிப்பவர்களுக்காக கணிதத்தில் வைத்த தேர்வில் 4வது வகுப்புப் படிக்கும் மாணவி மாயா அபிராம் தேசிய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

விருது வழங்கும் விழா மே 16ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் மாயா அபிராமுக்குத் தங்கப் பதக்கமும், தேசிய அளவில் முதலிடத்திற்கான சான்றிதழும் அளிக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பிலிருந்தே மேத்ஸ் கங்காரு தேர்வில் பங்குபெறும் இந்த மாணவி, ஒவ்வோராண்டும் விருது பெறுவது வழக்கமாயிருந்தாலும் இந்த ஆண்டு இவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருப்பது தனிச்சிறப்பு.

மாயா அபிராம் கல்வியில் மட்டுமல்ல, பியானோ நாலாவது பிரிவில் தனிச் சிறப்புடன் தேர்வு பெற்று விருது வாங்கியிருக்கிறார். டைகாண்டோவில் கருப்பு பெல்ட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார். டென்னிஸ், நீச்சல், கர்நாடக சங்கீதம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. மாயா மேலும் வெற்றிகளைக் குவிக்கத் தென்றல் வாழ்த்துகிறது.

டி.எஸ். பத்மநாபன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com