கல்யாண ஆல்பம்
"ராஜேஷ்! நம்ம கல்யாண போட்டோ ஆல்பம் வந்திருக்கு" என்று கூறியபடி ஆவலுடன் சோபாவில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தாள் மாலதி. "ஒரு நிமிஷம் மாலதி. போன்ல இருக்கேன். வந்துடறேன்" செல்ஃபோனில் பேச்சைத் தொடர்ந்தவாறு மாலதியின் பக்கத்தில் அமர்ந்தான் ராஜேஷ்.

ஒரு ஃபோட்டோ மாலதியின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. "ராஜேஷ், உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன். இந்த ஃபோட்டோல நிக்கறாங்களே. யாரு இவங்க? உங்க சொந்தக்காரங்களா?" விரலால் சுட்டிக் காட்டியபடி ராஜேஷைப் பார்த்தாள் மாலதி.

செல்ஃபோனில் பேச்சை முடித்த ராஜேஷ், "ஓ.. அவங்களா? கமலா மாமி! ரொம்ப நல்லவங்க. இந்த வீட்டுக்குக் குடி வரதுக்கு முன்னாடி, இவங்க வீட்லதான் பத்து வருஷம் குடி இருந்தோம். ஏன் ஒரு மாதிரியா கேக்கற?"

"ரொம்ப நல்லவங்கன்னு சொல்றிங்க! ஆனா கல்யாணத்தன்னிக்கும், மாலை ரிசப்ஷன் போதும் அவங்க கேட்டது ரொம்ப அநாகரிகமா இருந்தது," ஆல்பத்தை மூடியபடி ராஜேஷிடம் முறையிட்டாள் மாலதி.

"இருக்காது மாலதி. அவங்க நம்ம குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கம். அது மட்டுமல்ல. கமலா மாமி பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனி ஹெட். அவங்க கணவர் ரொம்ப பெரிய ப்ரொஃபசர், எழுத்தாளர். நீதான் ஏதோ தப்பாப் புரிஞ்சுட்டிருக்க. அப்படி என்ன நடந்தது?" ராஜேஷின் முகத்தில் கவலை தெரிந்தது.

"சாரி ராஜேஷ். அவங்க நடந்த விதம் ரொம்ப சங்கடமா இருந்தது. கல்யாணத்தன்னிக்கு என்கிட்ட வந்து, பத்து மாசத்துக்குள்ள குழந்தையப் பெத்துக்கணும், சரியா! ஆண் குழந்தை பிறந்தா என் பொண்ணுக்கும், பெண் குழந்தை பிறந்தா என் பையனுக்கும் கல்யாணத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணிடுறேன். ஞாபகம் வச்சுக்கோன்னு திரும்பத் திரும்ப ஒரு பத்து தடையாவது என்கிட்ட சொல்லிருப்பாங்க. என் சொந்தக்காரங்க எல்லாம் யாரு இவங்கன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது போதாதுன்னு மாலை ரிசப்ஷன்போது உங்ககிட்டேயும் சொன்னாங்க. அதுக்கு நீங்க, கவலைப்படாதீங்க, நீங்கதான் எங்கவீட்டு சம்பந்தின்னு சொன்னீங்க. அப்பறம் எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கு ரொம்பச் சங்கடமா இருந்துச்சு" மாலதியின் முகத்தில் சிறு கோபம் கலந்த வருத்தம்.

"ம்... அதான் விஷயமா? உனக்கு ஒண்ணு தெரியுமா? கமலா மாமிக்குக் குழந்தைங்களே கிடையாது. அவங்க வாழ்க்கை மாதிரி, எங்க நம்ம வாழ்க்கையும் ஆயிடுமோன்னு கவலைதான். வேற ஒண்ணும் இல்ல. நீ தப்பா எடுத்துக்காதே" என்றான் ராஜேஷ்.

"எனக்கு ஒண்ணும் புரியல" மாலதியின் முகத்தில் குழப்பம்.

பேச்சைத் தொடர்ந்தான் ராஜேஷ், "கமலா மாமி பலதடவை அம்மாகிட்ட சொல்லிச் சொல்லி கவலைப்பட்டதப் பார்த்திருக்கேன். கல்யாணம் ஆன புதுசுல, கமலா மாமியும், அவங்க கணவரும் அவங்கவங்க தொழில்ல முன்னேறணும்னு கவலைப் பட்டாங்களே தவிர, குழந்தை பெத்துக்கறதுல கவனம் செலுத்தலை. அந்தஸ்து, பணம்தான் முக்கியம்னு இருந்துட்டாங்க. தவறை உணரும்போது ரொம்ப லேட் ஆயிடுச்சு, பாவம்!" என்று சொல்லியபடியே மூடிய ஆல்பத்தை மாலதியின் கையிலிருந்து வாங்கி ராஜேஷ் பார்க்க ஆரம்பித்தான்.

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com