உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை
பருத்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இன்றைய மருத்துவம் சொல்லும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். அதிக எடை உள்ளவர்களுக்குப் பல நோய்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய பாதிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் கூடுமானவரை நல்ல உணவுப் பழக்கத்தாலும், உடற்பயிற்சியாலும் உடலின் எடையைக் குறைக்க முயல்வது நல்லது. இவர்களின் எடை அளவுக்கதிகமாக இருக்குமேயானால் அதற்குச் சில நிவாரணங்கள் உள்ளன. இதை BMI எண்ணிக்கை மூலம் கணக்கெடுக்கலாம்.

இதைப் பற்றி முன்னர் பலமுறை சொல்லியிருந்தாலும் இங்கேயும் அதன் சூத்திரத்தை விவரிக்கிறேன். உடல் எடை குறியெண் (Body Mass Index) என்பது ஒருவரின் உடல் பருமனைக் குறிக்கும். இதற்கான சூத்திரம் (formula): "எடை (கிலோக்களில்)/உயரத்தின் இருபடி (மீட்டர் இருபடியில்)”. [Weight in Kgs/Height (in meters) squared (meter-squared)].

இந்த கணக்கின்படி ஒருவரது BMI
40ஐத் தாண்டினால் - மிகப் பருமனானவர் (Morbid Obesity).
31 முதல் 39வரை - பருமனானவர் (Obese).
25 முதல் 29வரை - எடை கூடுதலானவர் (Overweight).

இவர்களில் மிகப் பருமனானவர்களுக்கும், எடையின் காரணமாக விபரீதப் பின்விளைவுகள் ஏற்பட்ட பருமனானவர்களுக்கும் சில அறுவை சிகிச்சைகள் உள்ளன. அவை பலவித பின்விளைவுகள் கொண்டவை. அதனால் மருத்துவரை ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும். இந்தவகை அறுவை சிகிச்சைகள் பெரும் பணச்செலவு கொண்டவை. தனது காப்பீட்டுத் திட்டம் இதை ஏற்குமா என்று விவரமாகத் தெரிந்து செயல்படுவது அவசியம். இந்த அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு பல
மாதங்களுக்கு உணவுக் கட்டுபாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிவரும். இல்லையெனில் பணமும், நேரமும் விரயமாவது நிச்சயம். இதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து பல மாதங்களுக்கு திரவ உணவாக அருந்த வேண்டும். திட உணவு பன்னிரண்டு வாரங்களுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும். இதனால் மனச்சோர்வு ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். மேலும், ஆயுள்முழுதும் உணவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவேண்டும். தகுந்த உடற்பயிற்சியும் தேவை. இதனுடன் ஒருசில வைட்டமின்களும், சத்து மருந்துகளும் தேவைப்படலாம். உணவுப் பொருட்களிடம் இருந்து சத்து குறைவாக உள்ளிழுக்கப் படுவதாலும், தைராய்டு போன்ற மருந்துகள் சரியாக செரிக்காமல் போவதாலும் பின்விளைவுகள் ஏற்படலாம். ஆனால் அதே நேரத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் வரலாம்.

பலன்கள் பல இருந்தாலும் குறைகளும், பின்விளைவுகளும் இருப்பதால் தீர ஆலோசித்து நிதானமாக முடிவு செய்யவேண்டும்.

அறுவை சிகிச்சைகளின் வகைகள்
1. Gastric Bypass procedure: வயிற்றில் இருந்து சிறுகுடல் போகும் பாதையை மாற்றி அமைப்பது: இது மிகவும் பிரபலம். ஆனால் இது மிக தீவிரமான சிகிச்சை. இதற்குத் தகுந்த மருத்துவ வசதி நிறைந்த மருத்துவமனையில் செய்வது நல்லது. இதன் பின்விளைவுகளாக வாந்தி, பேதி, குமட்டல் வரலாம்.

2. Duodenal switch: இதில் வயிற்றுப் பகுதி அறுக்கப்பட்டு சிறுகுடலுடன் இணைக்கப்பட்டு விடும். இதனாலும் பல மாதங்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படலாம்.

3. Lap band: வயிற்றுப்பகுதியில் ஒரு அணை போட்டு அதை மெல்ல மெல்ல இறுக்குவதால் உடல் எடை குறைக்கலாம். இது மிகவும் பிரபலம். இதன் மூலம் எடை மிக மெதுவாகக் குறைவதால் எடையை அப்படியே வைத்துக் கொள்வது சற்றே எளிது. மேலும் சிகிச்சைக்குப் பின்விளைவுகள் குறைவு.

4. Sleeve Gastrectomy: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றி விடுவது இன்னொரு வகை.

இவற்றில் எந்த அறுவை சிகிச்சை உகந்தது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எதைச் செய்தாலும் வாழ்முறையில் மாற்றங்கள் தேவை. அதை செய்யத் தயங்கினால், தவறினால் சிகிச்சைகள் பயனற்றுப் போய்விடும். இவற்றைச் செய்துகொள்வதற்குக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னரிலிருந்தே கடும் உடற் பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் இருந்து பார்ப்பது நல்லது. அதன்மூலமே எடையைக் குறைக்க முடிந்தால் அதனால் பயன் அதிகமே.

உடல் எடை குறைக்க மருந்துகள் உண்டா?
இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி! உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இல்லாமலே, எளிதாக மருந்து உட்கொண்டு உடலைச் சிக்கென வைக்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. உடல் எடை குறைக்கத் தற்போது உபயோகிக்கும் மாத்திரைகள் பின்விளைவுகள் கொண்டவை. தற்காலிக நிவாரணமாக Phentermine அல்லது Diethylpropion மருந்துகள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படலாம். இவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். பல வருடத் தீர்வாக Orlistat உபயோகிக்கலாம். ஆனால் இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.

ஆகையால் உடல் எடை கூடுவதைத் தவிர்ப்போம். கூடினால், கூடுமானவரை வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்து குறைப்போம். அதையும் மீறிக் கட்டுக்கு அடங்காமல் போனால் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பதே சரியான வழி. கட்டுரை படித்தாகிவிட்டது. இனிச் சற்று நேரம் நடைப்பயிற்சி செய்வோமே!

மேலும் விவரங்களுக்கு: www.mayoclinic.org/bariatric-surgery

மரு வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com