FeTNA வெள்ளிவிழா: அமெரிக்க தமிழ்த்திருவிழா 2012
தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணிப் போற்றும் நோக்கத்துடன் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் அமைப்பு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இது கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் அமைப்புகளைத் தன்னுள் கொண்டு, நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்றதோர் அமைப்பாகக் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இவ்வாண்டு பேரவை தனது வெள்ளி விழாவைத் 'தமிழ்த் திருவிழா'வாக பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில், ஜூலை 6, 7, 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விழாவை முனைவர். மு. வரதராசனார் நூற்றாண்டு விழாவாகவும் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பால்டிமோரில் இதற்காகக் கூடவுள்ளார்கள்.

'தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!' எனும் இயன்மொழியைக் கொண்ட திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை. செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், 'விஜய் டிவி' சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகை அமலா பால் மேடைநிகழ்ச்சி, கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரென்டா பெக், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

இணை அமர்வுகளாக 'தமிழ்த்தேனீ' போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன்–தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்கத் தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம்பெற உள்ளன. ஜூலை 5ம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.

விழா ஏற்பாடுகளை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் செய்து வருகிறது. விழாவில் பங்கேற்க பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும்: www.fetna.org

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான 'வலைஞர் சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980-322-7370.

கவியரங்கத்தில் பங்கேற்க: கார்த்திகேயன் தெய்வீகராசன் - 860-212-2398.
விவாதமேடையில் பங்கேற்க: இரா. மனோகரன் - 267-421-2891.

மேலதிகத் தகவல்களுக்கு
முனைவர் தண்டபாணி குப்புசாமி (தலைவர், FeTNA) - 843-814-7581
பாலகன் ஆறுமுகசாமி (விழா ஒருங்கிணைப்பாளர்) - 301-237-1747

பழமைபேசி,
டென்னசி

© TamilOnline.com