கா.சி. வேங்கடரமணி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, சமூக விடுதலை, தேச விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாக வைத்துப் பல நாவல்கள், சிறுகதைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. பாரதியார், வ.வே. சுப்ரமண்ய ஐயர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, முன்சீப் வேதநாயகம் பிள்ளை, மாதவையா எனப் பலர் இந்தப் படைப்பிலக்கிய இயக்கத்துக்கு உரமூட்டினர். இவர்கள் வரிசையில், சற்றே குறைவாக எழுதினாலும் நிறைவான எழுத்தைத் தந்தவர் காவேரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனும் கா.சி. வேங்கடரமணி. இவர் 1891ல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பூம்பட்டினத்தில் (இன்றைய பூம்புகார்) சித்தாந்த ஐயருக்கும், யோகாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை சுங்க வரி அதிகாரி. மராட்டிய மன்னர்களால் ஆதரிக்கப் பெற்ற குடும்பம் என்பதால் ஓரளவு செல்வச் செழிப்புடன் விளங்கியது. வேங்கடரமணியின் பள்ளிப் படிப்பு மயிலாடுதுறை நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. அப்போதே சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். பத்திரிகைகளில் கட்டுரை எழுதினார். குறிப்பாக மாயவரம் நகரசபை ஊழல் குறித்து 'இந்தியன் பேட்ரியட்' பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரை பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது. சுதந்திரப் போராட்டத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வங்கப் பிரிவினையை எதிர்த்து இவர் ஆற்றிய சொற்பொழிவு பலரைக் கவர்ந்தது. பள்ளிப்படிப்பை முடித்தபின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சட்டமும் பயின்று தேர்ந்தார். இவரது திறமையைக் கண்டு வியந்த சர்.சி.பி. ராமசாமி ஐயர் இவரைத் தனது இளநிலை வக்கீலாக நியமித்தார். சட்ட நுணுக்கங்களைப் பயின்று, சில வழக்குகளில் வாதாடி வெற்றியும் பெற்றார். ஆயினும் வக்கீல் தொழில் வேங்கடரமணியின் மனதைக் கவரவில்லை. அப்போது லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் அவருக்குப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. லண்டனுக்குச் செல்வதைத் தாயார் விரும்பாது போகவே, அதனைக் கைவிட்டார்.

தேசபக்தி கொண்ட அவரது உள்ளம் எழுத்தை நாடியது. கிராம வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். ஆங்கிலப் புலமை மிகுந்திருந்த காரணத்தால் முதலில் சிறுகதைகளை ஆங்கிலத்திலேயே எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, டி.டி. கிருஷ்ணமாசாரி போன்றோர் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப் பெற்றனர். அவர்களது பாராட்டும் நட்பும் வேங்கடரமணிக்குக் கிடைத்தது. ஒருமுறை கல்கத்தா சென்றிருந்தபோது தாகூரைச் சந்தித்தார். தாகூர், "என்னதான் ஆங்கிலத்தில் புலமை கொண்டு கதைகள் எழுதினாலும் தாய்மொழியிலும் எழுதுவது அவசியம்" என்று வலியுறுத்தினார். வேங்கடரமணியும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தார். முதன்முதலில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய 'Murugan the Tiller' என்ற நாவலைத் தமிழ்ப்படுத்தி 'முருகன் ஓர் உழவன்' என்ற தலைப்பில் 1928ல் வெளியிட்டார். கிராமத்திலேயே பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த மனிதர்கள் பிழைப்பிற்காகவும், சமூகச் சூழல் காரணமாகவும் நகர வாழ்க்கைக்கு மாறும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, வாழ்க்கைச் சிக்கல்களை நாவல் பேசியது. அந்நூல் அவருக்கு தமிழ்ச் சமூகத்தில் சிறப்பான அறிமுகத்தைத் தந்தது. மண்ணின் மணத்தையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களையும், நண்பர்களே ஒருவருக்கொருவர் பகையாய்ப் போகும் சூழலையும் அந்த நாவல் விவரித்தது. தஞ்சை மண்ணின் கிராம வாழ்க்கையையும் பண்பாட்டையும் மிக அழகாக அவர் சித்திரித்திருந்த விதம் அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

வேங்கடரமணி ஒரு காந்தியவாதி, அன்னி பெசன்ட்டின் கொள்கையிலும் எழுத்திலும் மிகுந்த ஈர்ப்புடையவர். ஆன்மீகவாதி, தேசபக்தர். இவற்றை வலியுறுத்தி அவர் எழுதிய நாவல் 'Kandhan, the Patriot' (தேசபக்தன் கந்தன்) என்பது. ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான இந்நூலில் நாட்டு விடுதலைக்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் பாடுபட்டதை நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் அவர். கந்தன், மூக்கன், நல்லான், காரியான் போன்றோரது வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவலின் கதாநாயகன் கந்தன், வெளிநாட்டில் படித்து வந்தவன். அவனுடைய காதலுக்கும் கிளர்ந்தெழும் தேசபக்த உணர்வுக்கும் இடையேயான போராட்டம்தான் நாவலின் கரு. அரவிந்தர் மீது வேங்கடரமணி கொண்டிருந்த பற்றின் தாக்கத்தைக் கொண்டதாக நாவல் அமைந்திருந்தது. முதலில் காதலில் ஆரம்பித்துப் பின் தேச விடுதலைக்கான கிளர்ச்சியாகத் தொடங்கி இறுதியில் தத்துவ விசாரணையில் முடிகிறது நாவல். தவிர, ஆங்கிலத்திலும் தமிழிலும் சில சிறுகதைகளையும் வேங்கடரமணி எழுதியிருக்கிறார். அவற்றில் 'Paper boats', (காகிதப் படகுகள்), 'On the Sand Dunes', (மணல் மேடுகள் மீது), 'A day with Sambu' (சாம்புவுடன் ஒருநாள்), 'பட்டுவின் கல்யாணம்', 'ஜடாதரன் கதைகள்' போன்றவை குறிப்பிடத்தக்கன. என்றாலும் அவரது நாவல்கள் பேசப்பட்ட அளவு அவரது சிறுகதைகள் பேசப்படவில்லை. ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களான ஆர்.கே. நாராயணன், முல்க்ராஜ் ஆனந்த் போன்றோர் வேங்கடரமணிக்குப் பின்தான் எழுத வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகத் தூண்டுதலால் 'ஸ்வேதாரண்ய ஆசிரமம்' என்ற ஓர் அமைப்பை நிறுவிச் சிலகாலம் நடத்தினார் வேங்கடரமணி. 'தமிழ் உலகு' என்னும் பத்திரிகையைத் தொடங்கினார், ஆனால் பொருளாதாரச் சிக்கல்களால் அது தொடர்ந்து வெளிவரவில்லை. தொடர்ந்து என். ரகுநாதனின் துணையுடன் 'பாரதமணி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதில் அவர் எழுதிய காத்திரமான சில கட்டுரைகள் அவர் பெயர் சொல்லும்படி அமைந்தன. பி.ஸ்ரீ., பெ.நா. அப்புசாமி போன்றோர் தொடர்ந்து பாரதமணியில் எழுதினர். ஆனால் அந்த இதழும் வெகுகாலம் நீடிக்கவில்லை.

"வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் எழுதிய காலத்திலேயே 'தமிழ் உலகு' என்ற பத்திரிகையில் நாவலாசாரியராகப் பாராட்டப் பெற்ற கா.சி. வேங்கடரமணி, சிறுகதைகளையும் எழுதிப் புகழ்பெற்றவர்" என்கிறார்கள் சிட்டி-சிவபாதசுந்தரம். "முதன்முதலில் தேசிய இயக்க நாவல்" எழுதியவர் என்று வேங்கடரமணியைக் குறிப்பிடுகிறார் விமரிசகர் க.நா. சுப்ரமணியம். தமிழ்ச் சிறுகதை வரலாறு தொடங்கும் ஆரம்பக் காலகட்டத்தில் நாவல், சிறுகதை எழுதிய முக்கியமான முன்னோடி எழுத்தாளரான கா.சி. வேங்கடரமணி, 1952ம் ஆண்டில் காலமானார். அவர் காலத்தின் சாட்சியாக அவரது படைப்புகள் இன்னமும் உயிர்ப்புடன் விளங்கி வருகின்றன என்பதே எழுத்தாளராக அவர் பெற்ற வெற்றிக்குச் சான்று.

அரவிந்த்

© TamilOnline.com