ஆர்லிங்டன்: ஹார்டி/தாம்சன் சர்வதேச நாள்
மார்ச் 31, 2012 அன்று ஆர்லிங்டன் ஹார்டி/தொம்சன் சர்வதேச நாள் கொண்டாடப் பட்டது. இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற பல உலக நாட்டினர் தத்தமது பாரம்பரிய பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. சர்வதேச ஆடை அணிவகுப்பில் சின்னஞ்சிறார் பாரம்பரிய ஆடைகளை அணிந்து நடைபோட்டனர்.

வட இந்திய, தென்னிந்திய ஆடைகளைச் சிறுவர், பெரியவர் எப்படி அணிவர் என்பதை இந்தியக் குழந்தைகளோடு பிற நாட்டுக் குழந்தைகளும் சேர்ந்து சிறப்பாக வழங்கினர். நீல் மற்றும் சமாந்தா, காஷ்மீர் பெரியவர் அணிகலன்களோடு அரங்கத்தின் நடுவில் நிற்க, இடப்புறம் ஆத்யா (சிறுமியர் காக்ரா சோளி), ஆர்யன் (ஷெர்வானி), கிறிஸ்டைன் (சுரிதார்), அக்ஷரா (குஜராத்தி பாணி புடவை) அணிந்திருந்தனர். வலப்புறம் ஜியா (பாவாடை), கேசவ் (வேட்டி), ரிதிகா (பாவாடை தாவணி), சஞ்சனா (மணப்பெண் உடை) அணிந்து நின்ற அற்புதக் காட்சிக்கு எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பல்வேறு நாட்டு நடனங்களுக்கிடையே, தமிழரின் கும்மி ஆட்டத்தை அரங்கேற்றினர் சஞ்சனா, ஜியா, சிடியா, லில்லி, அக்ஷரா, ரிதிகா, கிறிஸ்டைன் மற்றும் சமாந்தா.

இந்தியக் குழந்தைகளோடு பிற நாட்டுக் குழந்தைகளும் இணைந்து இந்தியக் கலாசாரத்தை வழங்கிச் சர்வதேச நாளை அதன் பெயருக்குத் தக்கக் கொண்டாடினர் என்பதில் ஐயமில்லை.

ஆனந்தி ராஜாமாரிச்சாமி,
ஆர்லிங்டன், மசாசூஸட்ஸ்

© TamilOnline.com